
US - India Trade: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மாஸ்கோவை பொருளாதார ரீதியாக முடக்கும் நோக்கில் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க உள்ளார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அமெரிக்கா தனது அழுத்தத்தை மிகக் கடுமையாக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 500% வரை இறக்குமதி வரி விதிக்க வழிவகுக்கும் இருகட்சி மசோதாவிற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.
500% வரை இறக்குமதி வரி
இந்த முன்மொழியப்பட்ட சட்டம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் யுரேனியம் வாங்கும் நாடுகளை இலக்காகக் கொண்டுள்ளது. குறிப்பாக, ரஷ்ய-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் அதிகளவில் எண்ணெய் வாங்கி வரும் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் வாஷிங்டனின் முக்கிய கவலையாக உள்ளன.
அதிபர் டிரம்ப்பைச் சந்தித்த பிறகு, இந்த மசோதாவிற்கு அவர் ஒப்புதல் அளித்திருப்பதாக செனட்டர் கிரஹாம் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த வாரமே இந்த மசோதா செனட் சபையில் வாக்கெடுப்பிற்கு வரக்கூடும் என்றும் அவர் கூறினார்.
ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்க முயற்சி
இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதற்கு அதிபரின் அதிகாரத்தை இந்த சட்டம் வலுப்படுத்தும் என்று கிரஹாம் கூறியுள்ளார். உக்ரைன் அமைதி முயற்சிக்கு ஒத்துழைத்தாலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எந்த விட்டுக்கொடுத்தலுக்கும் முன்வராததால், ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்க இத்தகைய கடுமையான நடவடிக்கை அவசியம் என்று அவர் வாதிட்டார்.
இந்தியாவை குறி வைக்கும் அமெரிக்கா
தற்போது சீனாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் வாங்குபவராக இந்தியா உள்ளது. கடந்த ஆண்டு, இந்தியப் பொருட்களுக்கு 25% பரஸ்பர வரியையும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பான கூடுதலாக 25% அபராதத்தையும் டிரம்ப் நிர்வாகம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சில பொருட்களின் மீதான வரி ஏற்கனவே 50% ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா - இந்தியா உறவில் மேலும் விரிச்சல்?
புதிய மசோதா ஒப்புதல் பெற்றால், அமெரிக்கா - சீனா மற்றும் அமெரிக்கா - இந்தியா இடையிலான வர்த்தக உறவுகளில் மேலும் விரிசல் ஏற்படக்கூடும். ஏற்கனவே சீனப் பொருட்கள் மீது 145% வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாக பெய்ஜிங்கும் வரி விதித்துள்ளது. இந்த புதிய பொருளாதாரத் தடைகள் சர்வதேச வர்த்தகத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்
- இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ரஷ்யாவுடன் எரிசக்தி வணிகத்தைத் தொடரும் நாடுகள் மீது 500% வரை அபராத வரி விதிக்க டிரம்பிற்கு அதிகாரம் கிடைக்கும்.
- ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதன் மூலம் கிடைக்கும் பணம், மறைமுகமாக மாஸ்கோவின் போர் முயற்சிகளுக்கு நிதி வழங்குகிறது என்பது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாதமாக உள்ளது.
- இந்த மசோதா செனட்டர் கிரஹாம் (குடியரசுக் கட்சி) மற்றும் ரிச்சர்ட் புளூமெண்டல் (ஜனநாயகக் கட்சி) ஆகியோரால் கூட்டாக முன்மொழியப்பட்டுள்ளது. இது ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதில் அமெரிக்காவின் இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments