Ticker

6/recent/ticker-posts

பசிபிக் கடலில் அமெரிக்க இராணுவம் திடீர் தாக்குதல்: இருவர் பலி


கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு படகின் மீது அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க தெற்கு கட்டளை (US Southern Command) வெளியிட்ட தகவலின்படி, அந்தப் படகு வழக்கமாக போதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் பாதையில் பயணித்ததாகவும், அந்தச் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்ததாகவும் புலனாய்வு தகவல்கள் உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனுடன், அந்தச் சிறிய படகு தாக்குதலுக்கு உள்ளாகி வெடிப்பும், தீப்பற்றிய காட்சிகளும் உள்ளடங்கிய வீடியோ ஒன்றையும் அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது. 

இராணுவ நடவடிக்கைகளில் இதுவரை குறைந்தது 107 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், தாக்குதலுக்குள்ளான படகுகள் உண்மையில் போதைப் பொருள்களை எடுத்துச் சென்றதற்கான தெளிவான ஆதாரங்களை அமெரிக்க அரசு முன்வைக்கவில்லை, இதனால் இந்த நடவடிக்கையின் சட்டபூர்வத் தன்மை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

சட்ட நிபுணர்களும் மனித உரிமை அமைப்புகளும் இந்த தாக்குதலை நீதிமன்ற விசாரணை இன்றிய கொலை என விமர்சித்துள்ள நிலையில், அந்த குற்றச்சாட்டுகளை வாஷிங்டன் மறுத்துள்ளது.

மேலும், வெளியிடப்பட்ட அறிக்கையில் தாக்குதல் நடைபெற்ற துல்லியமான இடம் குறிப்பிடப்படவில்லை.

இந்த  தாக்குதல், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் பயன்படுத்துவதாகக் கூறப்படும் வெனிசுவேலாவில் உள்ள படகுகள் தங்கும் பகுதிகளையும் அமெரிக்க ராணுவம் தாக்கியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியதற்குப் பின்னர் நிகழ்ந்துள்ளது.

போதைப் பொருள் குழுக்களை கடலில் அல்லது நிலத்தில் தாக்குவதற்கு நாடாளுமன்ற அனுமதி தேவையில்லை, தகவல் கசிவைத் தவிர்க்கவே இந்த முடிவு என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து, அமெரிக்க ராணுவம் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 30-க்கும் மேற்பட்ட படகுகளை தாக்கியுள்ளது. இதில் பெரும்பாலானவை கிழக்கு பசிபிக் பெருங்கடலில், சில கரீபியன் கடலில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

nambikkai

 


Post a Comment

0 Comments