
புரோகோனிஷ் கிராமத்தவர் “ஓரினொகோ” ஆற்றங்கரையில் கூடி நின்று, தமக்கேயுரிய வனத்துப் பாடல்களைப் பாடியவாறு நடனங்களை ஆடிக் கொண்டிருந்தனர்!
துலாவின் ஒருபக்கம் அலங்கரிக்கப்பட்டு அதன் பீடத்தில் ரெங்க்மா அமரந்திருந்தாள். வனத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஒன்பது வகைப் பழங்கள் துலாவின் அடுத்த பக்கத்தில் அடுக்கப்பட்டிருந்தன. அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் அமர்ந்ததும், நிலத்தைத் தொட்டவாறிருந்த ரெங்க்மாவின் கால்கள், மறு பக்கத்தில் பழங்கள் அடுக்கப்பட்டபோது, தரையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக துலா உயர்ந்து, இரு பக்கங்களும் சமநிலைக்கு வந்தன!
அந்த நேரத்தில்தான் வேர்த்து விறுவிறுத்து வந்து சேர்ந்த இர்வினைக் கண்டதும் செரோக்கியும், ரெங்க்மாவும் ஆச்சரியப் பட்டனர்!
செரோக்கியும், குடும்பத்தினரும் ஆற்றங்கரைக்கு வந்த விடயம் பற்றிய எந்தத் தகவலும் அறியா நிலையில், இர்வின் எப்படி இங்கு வந்தான்?
சொகுசாக வாழ்ந்து பழக்கப்பட்ட நகரத்தவனான அவனால், இருள் சூழ்ந்த இந்தக் கானகத்தினுள் தன்னந்தனியாக காததூரம் நடந்து எப்படி வரமுடிந்தது?
களைத்துப்போய் வந்திருக்கும் தனது நண்பனிடம் கேள்விகள் கேட்டுத் தொந்தரவு படுத்த விரும்பாத செரோக்கி, கரையோரமாக இருந்த மரக்குற்றியின் மீது அவனை உட்கார வைத்துவிட்டு, குவளையிலிருந்த மூலிகைக் கஞ்சை சிரட்டை ஒன்றில் ஊற்றி அவனிடம் கொடுத்தான்!
நடந்து வந்த களைப்பினாலும், சிந்திய வியர்வையாலும் ஏற்பட்ட தாகம் அதனை மொட மொடவென்று அருந்தச் செய்தது!
அவனது மூளையை நச்சரித்துக் கொண்டிருந்த,
குள்ளர்கள் செரோக்கியிடம் நாணயத் தாள்களை எதற்காகக் கொடுத்தார்கள்? என்ற கேள்வியைத் தவிர, தான் செரோக்கியைத்தேடி வந்தது முதல், கிராமத்தில் எவரையும் காணாததால் அதிர்ச்சியடைந்த நிலையில் ‘பெரியகல்’ வரை சென்றபோது, கல்லடிவாரத்திலிருந்த யோகியார் தந்த அறிவுறுத்தல் வரை சகலதையும் செரோக்கியிடம் ஒப்புவித்து விட்டு, தான் தன்னந்தனியே வனத்தினுள் நடந்து வந்தபோது எதிர்கொண்ட சங்கடங் களையும் ஒவ்வொன்றாக இர்வின் செரோக்கியிடம் கூறி முடித்தான்!
தனது பாலிய நண்பன், தன்னிடமும் தனது குடும்பத்தாரிடமும் கொண்டிருந்த அன்பையும், பாசத்தையும் நினைத்து செரோக்கி பெருமிதம் கொண்டதில் வியப்பில்லை!
வனவாசிகளின் உச்சந்தொட்ட பாடல்கள், அவர்களது நடனத்தை வெறித்தனமாக்கிக் கொண்டிருந்தது!
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments