
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காதலியை கொலை செய்தவர், பாவத்திற்குப் பரிகாரமாக காசிக்குச் சென்று கங்கையில் நீராடி இருக்கிறார். காசியில் இருந்து ஆந்திரா வந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராங் காலில் ஏற்பட்ட அறிமுகம், காதலாக மாறி, கொலை வரை சென்றது எப்படி?
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள துர்கா நகரில் சீட்டு பிடிப்பது, வட்டிக்குப் பணம் கொடுப்பது ஆகிய தொழில் செய்து வந்தவர் காப்பு லட்சுமி. காப்பு லட்சுமியின் கணவர் விவசாயத் துறையில் ஊழியராகப் பணி செய்து வந்த நிலையில், அவர்களின் இரண்டு மகள்களுக்கும் திருமணம் நடைபெற்று வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.
45 வயதான காப்பு லட்சுமிக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு மிஸ்டு கால் மூலம் விஜயநகரம் மாவட்டம் பொப்பிலி நகரைச் சேர்ந்த சிவா என்ற நபருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. சிவாவுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராங் கால் மூலம் ஏற்பட்ட அந்த அறிமுகம் அதன் பின்னர் இன்ஸ்டாகிராமில் சாட்டிங்காகத் தொடர்ந்து நட்பாக மாறியது. அந்த நட்பு தொடர இருவரும் தனிமையில் சந்திக்கும் அளவிற்கு மாறியது.
கிரிக்கெட் சூதாட்டத்திற்கு அடிமையான சிவா சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தைப் பறி கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் சீட்டு பிடித்து வட்டி வியாபாரத் தொழில் நடத்தும் லட்சுமியுடன் கிடைத்த தொடர்பைப் பயன்படுத்தி, அவரிடமிருந்து அடிக்கடி பணம் வாங்கி அந்தப் பணத்தையும் கிரிக்கெட் சூதாட்டத்தில் பறிகொடுத்திருக்கிறார். சுமார் ஒரு கோடி ரூபாய் வரை கிரிக்கெட் சூதாட்டத்தில் பறிகொடுத்த சிவா தொடர்ந்து லட்சுமியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் என்னால் உனக்குப் பணம் கொடுக்க முடியாது என்று கறாராக லட்சுமி கூறியுள்ளார். இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் சிவாவிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டு நெருக்கத் துவங்கி உள்ளனர். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க வழியில்லாமல் தவித்துவந்த சிவா, லட்சுமியைக் கொலை செய்து அவரிடம் இருக்கும் நகைகளை அபகரித்து அவற்றை விற்று வாங்கிய கடனைக் கட்ட முடிவு செய்தார். இதற்காக இம்மாதம் 11ஆம் தேதி வழியில் சென்றுகொண்டிருந்த யாரோ ஒருவரின் செல்போனை வாங்கி அந்தச் செல்போன் மூலம் லட்சுமியைத் தொடர்பு கொண்டார் சிவா. அப்போது இனிமேல் உன்னிடம் பணம் கேட்க மாட்டேன். ஒரே ஒருமுறை வீட்டிற்கு வந்து உன்னிடம் பேசிவிட்டுச் செல்கிறேன் என்று கூறியிருக்கிறார். சிவா சொல்வதை உண்மை என்று நம்பினார் லட்சுமி.
கணவன் வீட்டில் இல்லாதபோது சிவாவை கடந்த 11-ம் தேதி வீட்டிற்கு வரவழைத்துள்ளார் லட்சுமி. சிவா பொப்பிலியில் இருந்து மோட்டார் சைக்கிளில் விசாகப்பட்டினம் வந்து சேர்ந்தார். தன்னுடைய கணவன் வீட்டிலிருந்து வெளியே சென்ற பின்னர், சிவாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வரவழைத்துள்ளார் லட்சுமி.
எந்த காரணத்தைக்கொண்டும் போலீசில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று திட்டம் தீட்டி இருந்த சிவா, தன்னுடைய மோட்டார் சைக்கிளை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்திவிட்டு அங்கிருந்து 3 ஆட்டோக்களில் மாறி மாறி லட்சுமி வீட்டை அடைந்தார். அன்று காலை 10 மணிக்கு வீட்டுக்கு வந்த சிவா, லட்சுமி உடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து மீண்டும் பணம் கேட்டிருக்கிறார். அப்போது இரண்டு பேருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
லட்சுமி கழுத்தை நெரித்துக் கொலை செய்த சிவா, லட்சுமி அணிந்திருந்த 5 சவரன் தங்க நகைகள், வீட்டில் வைக்கப்பட்டிருந்த 5 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். லட்சுமி வீட்டிற்கு சிவா வரும்போது அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக தலையில் தொப்பி, முகத்திற்கு மாஸ்க் ஆகியவற்றை அணிந்து வந்தார். கொலை செய்து திரும்பி செல்லும் போது, அணிந்திருந்த ஆடைகளை மாற்றி பை ஒன்றில் போட்டு, வேறு ஆடை அணிந்து ஆட்டோ ஒன்றை வரவழைத்து அந்த ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்று விட்டார். அன்று மதியம் ஒரு மணி அளவில் லட்சுமியின் கணவன் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய பின்னரே கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.
போலீசார் விரைந்து சென்று லட்சுமியின் உடலைக் கைப்பற்றி, விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதலில் தங்க நகைகளுக்காக நடைபெற்ற கொலை இது என்று முடிவு செய்த போலீசார் குற்றவாளியை தீவிரமாகத் தேடி வந்தனர். லட்சுமி செல்போன் கால் டேட்டா அடிப்படையில் நடத்திய விசாரணையின்போது சிவா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சிவாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் லட்சுமியைக் கொலை செய்த பின்னர் காசிக்குச் சென்றுள்ளார் சிவா. லட்சுமியைக் கொலை செய்ததால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க கங்கையில் நீராடி, சிறப்பு பூஜைகள் செய்து காசி விஸ்வநாதரை தரிசித்து ஆந்திரா திரும்பி இருக்கிறார்.
இந்த நிலையில் தன்னைக் கொலை செய்த குற்றவாளி என்று போலீசார் அடையாளம் கண்டுவிட்டதை அறிந்த சிவா, செல்போன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்தச் செல்போன் வீடியோவில் லட்சுமியை நான் தான் கொலை செய்தேன். இதற்கும் என்னுடைய குடும்பத்தாருக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. நான் வெளியில் வாங்கி இருக்கும் கடனுக்கும், என்னுடைய குடும்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்றும் கூறியிருந்தார்.
இதற்கிடையே ஆந்திராவில் இருந்து சென்னை தப்பிச் செல்ல முயன்ற சிவாவை கைது செய்த விசாகப்பட்டினம் போலீசார் தீவிர விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
சிவாவின் புல்லட் மோட்டார் சைக்கிள் மற்றும் கொலை செய்து எடுத்துச்செல்லப்பட்ட தங்க நகைகள், ரூ.2 லட்சம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments