
உலகளவில் இறப்பை ஏற்படுத்தும் நோய் பாதிப்புகளில் முக்கியமானதாக இருக்கிறது இதயப் பிரச்சனைகள். உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, 2022ம் ஆண்டில் சுமார் 19.8 மில்லியன் மக்கள் இதயப் பிரச்சனைகளால் உயிரிழந்திருப்பதாகவும், அவர்களில் 85% பேர் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகிய இரண்டும் நமது உணவுமுறை, உடல் இயக்கம், தூக்கம் என பல்வேறு காரணங்களால் ஏற்படுபவை. என்றபோதிலும் சமீபத்திய ஒரு ஆய்வு இரவு அதிக நேரம் விழித்திருப்பவர்கள் / தாமதமாக படுக்கைக்கு செல்பவர்களுக்கே இதயப் பிரச்சனைகளான மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றுக்கான வாய்ப்பு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்க இதய அமைப்பின் மருத்துவ இதழில் வெளியான அந்த ஆய்வில் இரவு அதிகம் ஆக்டிவாக இருப்பவர்கள் மற்றும் காலை அதிகம் ஆக்டிவாக இருப்பவர்கள், உடன் பகல் நேரத்தில் ஆக்டிவாக இருப்பவர்கள் மத்தியில் ஆய்வு செய்யப்பட்டது. அனைவர் மத்தியிலும் க்ரோனோடைப்ஸ் எனப்படும் உடலின் உட்கடிகாரத்தில் தூக்கம் மற்றும் விழிப்பை கண்காணிக்கும் விஷயங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
ஆய்வு முடிவில், “இரவு ஆக்டிவாக இருக்கும்போது, உடலுக்கு கிடைக்க வேண்டிய இயற்கையான ஒளி மற்றும் இருள் சுழற்சியில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் தினசரி விழிப்பு - தூக்க சுழற்சிகள் சீர்குலைகின்றன. இவையாவும் உடலின் அடிப்படையான உட்கடிகாரத்தை பாதிப்பதாக இருக்கும்” என்பது தெரியவந்துள்ளது.
நம் உடலின் உட்கடிகாரத்தில் வேறுபாடு ஏற்படுவது, இதயத்தின் வளர்சிதை மாற்றத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை இதற்கு முந்தைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இதுபோன்ற காரணங்களால்தான், இரவுப்பணி - காலைப்பணி என மாற்றி மாற்றி ஷிப்ட்டில் வேலை செல்பவர்களுக்கு இதய நோய் மற்றும் வளர்சிதை மாற்ற சிக்கல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
14 ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நள்ளிரவு வரை விழித்திருப்பவர்களுக்கு, மற்றவர்களுடன் ஒப்பிடும்போது மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் 16% அதிகம் எனத் தெரியவந்துள்ளது. அதேபோல இரவு விழிப்பவர்களுக்கு இதய ஆரோக்கியம் தொடர்பான மதிப்பெண்கள் (Cardiovascular health scores) குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு 79% அதிகமாக உள்ளது என்றும் ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகள் யாவும் பெண்கள் மத்தியில் அதிகமாக காணப்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
உடலின் இயற்கையான உயிரியல் கடிகாரம் (Circadian rhythm) மாறுபடுவதால் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. 75% இதய நோய் ஆபத்துகள், இரவு விழிப்பவர்களிடம் இருக்கும் தவறான உணவுப் பழக்கம், போதிய தூக்கமின்மை மற்றும் புகைப்பிடித்தல் போன்ற காரணங்களால் ஏற்படுகின்றன எனவும் ஆய்வு விளக்குகிறது. சரியான நேரத்தில் தூங்குவது, காலையில் சூரிய ஒளியில் நேரத்தை செலவிடுவது மற்றும் ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுவதன் மூலம் இந்த ஆபத்தைக் குறைக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments