
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், அஹமதாபாத்தில் புதன்கிழமை (11) நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான குழு டி போட்டியில் இரண்டாவது சுப்பர் ஓவர் முடிவில் தென்னாபிரிக்கா வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தானின் அணித்தலைவர் ரஷீட் கான், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, றயான் றிக்கெல்டனின் 61 (28), குயின்டன் டி கொக்கின் 59 (41), டெவால்ட் பிறெவிஸின் 23 (19), டேவிட் மில்லரின் ஆட்டமிழக்காத 20 (15), மார்கோ ஜன்சனின் 16 (07) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ரஷீட் 4-0-28-2, பஸல்ஹக் பரூக்கி 4-0-32-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 188 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், ரஹ்மனுல்லா குர்பாஸின் 84 (42), அஸ்மதுல்லா ஓமர்ஸாயின் 22 (17), நூர் அஹ்மட்டின் ஆட்டமிழக்காத 15 (09), டர்விஷ் ரசூலியின் 15 (18) ஓட்டங்களோடு 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்று போட்டியை சமப்படுத்தியது. லுங்கி என்கிடி 4-0-26-3, கேஷவ் மஹராஜ் 4-0-27-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சுப்பர் ஓவரில், தென்னாபிரிக்காவின் லுங்கி என்கிடி வீச விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களை ஆப்கானிஸ்தான் பெற்றது. ஓமர்ஸாய் ஆட்டமிழக்காமல் 16 (05) ஓட்டங்களைப் பெற்றார். 18 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு ஆப்கானிஸ்தானின் பஸல்ஹக் பரூக்கி வீசிய ஓவரில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா ஒரு விக்கெட்டை இழந்து 17 ஓட்டங்களைப் பெற முதலாவது சுப்பர் ஓவர் முடிவிலும் வெற்றியாளர் தீர்மானிக்கப்படவில்லை. ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 10 (03), பிறெவிஸ் 06 (02) ஓட்டங்களைப் பெற்றனர்.
அந்தவகையில் ஆப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் வீசிய சுப்பர் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 23 ஓட்டங்களை தென்னாபிரிக்கா பெற்றது. மில்லர் ஆட்டமிழக்காமல் 16 (04), ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 07 (02) ஓட்டங்களைப் பெற்றனர். 24 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு கேஷவ் மஹராஜ் வீசிய ஓவரில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 2 விக்கெட்டுகளை இழந்து 19 ஓட்டங்களையே பெற்றுத் தோல்வியடைந்தது. குர்பாஸ் 18 (04) ஓட்டங்களைப் பெற்றார்.
இப்போட்டியின் நாயகனாக என்கிடி தெரிவானார்.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments