
Iran-Israel War 10 Days Key Impacts & Analysis: ஈரான் போர் தொடங்கி 10 நாட்கள் நிறைவடைந்துள்ளன. ஈரான் உச்ச தலைவர் காமேனியின் படுகொலை முதல் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு வரை, ஈரான் போரின் 10 நாள் பாதிப்புகள் உலகத்தை எப்படி மாற்றியமைத்துள்ளது என்பதை 7 முக்கிய அம்சங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
1. அயதுல்லா அலி காமேனியின் படுகொலை
பிப்ரவரி 28, 2026 போரின் (Iran War 2026) முதல் நாள். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் (Supreme Leader) அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அவர் ஜூன் 1989 முதல் ஈரானின் உயரிய தலைவராக இருந்தார். அதற்கு முன்பு 8 ஆண்டுகள் அதிபராகவும் பதவி வகித்தார். ஈரானில் அதிபரை விட உச்ச தலைவருக்கே அதிக அதிகாரம் உண்டு. காமேனி தான் நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிப்பார். ஒரு நாட்டுடன் போரைத் தொடங்குவது அல்லது முடிப்பது போன்ற அதிகாரங்கள் அவரிடமே இருந்தன. தலைமை நீதிபதி மற்றும் பிற முக்கிய அதிகாரிகளை அவரே நியமிப்பார். அவர் ஈரான் ராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் இருந்தார். உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு முகமைகள் அவருக்குத்தான் அறிக்கை அளித்தன. அவற்றுக்கிடையே மோதல் ஏற்பட்டால் காமேனிதான் தீர்த்து வைப்பார்.
சாதாரண ராணுவத்தை விட வலிமையான ஐஆர்ஜிசி (IRGC) அமைப்பும் காமேனியின் கீழ்தான் இயங்கியது. அவரது மறைவுக்குப் பிறகு அதிகார வெற்றிடம் உருவானது. ஆனால் ஈரான் இந்தச் சூழலுக்கு முன்பே தயாராக இருந்தது. அவர்கள் மாற்று அமைப்பை உருவாக்கி வைத்திருந்ததால், போர்ச் சூழலிலும், ஈரானின் அடுத்த உச்சதலைவர் யார்? என்பதில் எந்தவித சர்ச்சைகளும் ஏற்படவில்லை. 10-வது நாளில் அவர்கள் புதிய உச்ச தலைவரையும் தேர்ந்தெடுத்துள்ளனர்.
2. ஈரானின் புதிய உச்சதலைவர் முஸ்தபா காமேனி
மார்ச் 9 அன்று ஈரான் தனது மூன்றாவது 'ரக்பர்' (உச்ச தலைவர்) பெயரை அறிவித்தது. 1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு இந்தப் பதவி உருவாக்கப்பட்டது. முதல் ரக்பர் அயதுல்லா ருஹொல்லா கொமேனி. அவருக்குப் பிறகு அலி காமேனி 36 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருந்தார். தற்போது அவரது மகன் முஸ்தபா காமேனி (Mustafa Khamenei) உச்ச தலைவராக்கப்பட்டுள்ளார் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 56 வயதான முஸ்தபா, தனது தந்தையை விடவும் தீவிரமானவர் எனக் கருதப்படுகிறார். 1980-களில் நடந்த ஈரான்-ஈராக் போரில் பங்கேற்றவர். ஐஆர்ஜிசி மற்றும் அரசு இயந்திரத்தில் அவருக்கு நெருக்கமானவர்கள் உள்ளனர். அவர் இதற்கு முன் எந்த அரசுப் பதவியிலும் இருந்ததில்லை என்றாலும், அமைப்பிற்குள் பலமான பிடி கொண்டுள்ளார்.
2009 அதிபர் தேர்தலில் முறைகேடு செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அப்போது போராட்டங்களை ஒடுக்க 'பாசிஜ்' (Basij) படையை அவரே பின்னணியில் இருந்து இயக்கினார். முஸ்தபா உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆச்சரியமானதல்ல, ஏனெனில் அவர் நீண்டகாலமாகத் தயார் செய்யப்பட்டு வந்தார். ஆனால் இதில் இரு கேள்விகள் உள்ளன.
ஒன்று, முஸ்தபா ஒரு நடுத்தர அளவிலான மத அதிகாரி மட்டுமே, அவருக்கு 'அயதுல்லா' பட்டம் இல்லை. அவரது தந்தையும் பதவிக்கு வந்தபோது அந்தப் பட்டம் கொண்டிருக்கவில்லை. அவருக்காக அரசியல் சாசனம் மாற்றப்பட்டது. அதேபோல் முஸ்தபாவுக்கும் சலுகை கிடைக்கும்.
இரண்டாவது கேள்வி வாரிசு அரசியல் தொடர்பானது. 1979 புரட்சியின் மூலம் மன்னராட்சி (வாரிசு அரசியல்) ஒழிக்கப்பட்டது, ஆனால் இப்போது முஸ்தபா பதவிக்கு வருவது மீண்டும் ஒரு வாரிசு அரசியலையே காட்டுகிறது. இதற்கிடையில் இஸ்ரேல் முஸ்தபாவையும் குறிவைப்பதாக எச்சரித்துள்ளது.
3. எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்வு
போர் நடக்கும் பகுதியில் அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்யும் நாடுகள் உள்ளன. 'ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹார்முஸ்' (Strait of Hormuz) கடல் வழிப்பாதை தற்போது முடங்கியுள்ளது. அங்குள்ள கப்பல்கள் மற்றும் டேங்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. உலகின் எரிசக்தி தேவையில் 20% இந்த வழியாகத்தான் வருகிறது. இந்தியாவின் சார்ந்து இருத்தல் இன்னும் அதிகம். மார்ச் 9 அன்று கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 120 டாலராக உயர்ந்தது. சாதாரண நாட்களில் இது 60 முதல் 80 டாலராக இருக்கும்.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் (Oil Price Hike) பெட்ரோல், டீசல் விலை உயரும். போக்குவரத்து செலவு அதிகரித்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும். இது நேரடியாக நமது பாக்கெட்டைப் பாதிக்கும். எரிவாயு விலையும் (ஏற்கனவே உயர்ந்துள்ளது. மார்ச் 6 அன்று வீட்டு உபயோக சிலிண்டர் 60 ரூபாயும், வணிக சிலிண்டர் 150 ரூபாயும் உயர்ந்துள்ளது.
4. ஈரான் பதிலடி - பொலிவிழந்த துபாய்
ஈரான் தனது பதிலடித் தாக்குதலில் இஸ்ரேலுடன் சேர்த்து அண்டை நாடுகளையும் குறிவைத்தது. சவுதி அரேபியா, யுஏஇ, குவைத், கத்தார், பஹ்ரைன், ஈராக், ஜோர்டான் போன்ற நாடுகளில் அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் உள்ளன. இந்தத் தளங்கள் ஈரான் மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டன. இதனால் ஈரான் அந்த அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இதில் பெரிய சேதம் ஏற்படவில்லை என்றாலும், துபாய் போன்ற நகரங்களின் பிம்பத்திற்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வரி இல்லாத சொர்க்கம் மற்றும் பாதுகாப்பான இடம் என்ற துபாயின் அடையாளம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் அங்குள்ள பணக்காரர்களும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் தங்கள் பணத்தை வேறு நாடுகளுக்கு மாற்றத் தொடங்கியுள்ளனர். துபாயை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. போர் நீண்டால் துபாயின் ரியல் எஸ்டேட் மற்றும் சுற்றுலாத்துறை பெரும் சரிவைச் சந்திக்கும் எனக்கூறப்படுகிறது.
5. குழப்பத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது ஏன் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார் என்பது அவருக்கே மறந்துவிட்டது போலிருக்கிறது. கடந்த 10 நாட்களில் அவர் தனது நோக்கத்தை பலமுறை மாற்றியுள்ளார். முதலில் ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிப்பது என்றார்கள், பிறகு ஏவுகணைகளை ஒழிப்பது என்றார்கள், அதன் பின் ஆட்சியை மாற்றுவது என்றார்கள். எதுவும் நடக்காததால் ஈரானிடம் முழுமையான சரணடைதலைக் கோரினார். இரண்டு நாட்களுக்கு முன்பு, ஈரானின் அடுத்த உச்ச தலைவரைத் தானே தேர்ந்தெடுப்பேன் என்று பிடிவாதம் பிடித்தார். ஆனால் ஈரான் அவரிடம் கேட்காமலேயே முஸ்தபா காமேனியைத் தேர்ந்தெடுத்துவிட்டது. டிரம்ப்பின் அடுத்த கோரிக்கை என்னவாக இருக்கும் என்பது சுவாரஸ்யமானதாக இருக்கிறது.
6. இதுவரை ஏற்பட்டுள்ள இழப்புகள்
இந்தப் போரில் இரு தரப்பிலும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஈரானில்தான் பாதிப்பு மிக அதிகம். அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் 1,300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 12,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மினாப் நகரில் உள்ள பெண்கள் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 170 சிறுமிகள் உயிரிழந்தனர். கடலில் நடத்தப்பட்ட தாக்குதலில் 104 ஈரான் கடற்படையினர் கொல்லப்பட்டனர். ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. தலைநகர் தெஹ்ரானில் கடந்த சில மணிநேரங்களாக எண்ணெய் மழை பெய்து வருகிறது.
ஈரானின் தாக்குதலில் 8 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2,000 பேர் மருத்துவமனையில் உள்ளனர். குவைத், ஈராக், யுஏஇ, சவுதி அரேபியா, ஓமன் மற்றும் பஹ்ரைன் நாடுகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மார்ச் 7 அன்று ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரினார். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்று அவர் கூறினார்.
7. ஈரானின் வளர்ந்து வரும் தலைவர்கள்
தற்போது ஈரானின் முகமாக மாறியுள்ள செய்யது அப்பாஸ் அரக்ச்சி மற்றும் அலி லாரிஜானி இருவரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
சயத் அப்பாஸ் அரக்ச்சி (Seyed Abbas Araghchi): ஈரானின் வெளியுறவு அமைச்சர். சர்வதேச மேடைகளில் ஈரானின் தரப்பை வலுவாக முன்வைத்து வருகிறார். 1979 புரட்சியில் பங்கேற்ற இவர், ஐஆர்ஜிசியில் இணைந்தவர். 1980-களில் ஈரான்-ஈராக் போரில் பங்கேற்றார். ஜப்பான், பின்லாந்து போன்ற நாடுகளில் தூதராகப் பணியாற்றியவர். 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் முக்கிய பேச்சுவார்த்தையாளராக இருந்தார். தற்போது அவர் ஒரு 'டீல் மேக்கராக' இல்லாமல், வார்த்தைகளால் தாக்கும் 'அட்டாக்கராக' உருவெடுத்துள்ளார்.
அலி லாரிஜானி (Ali Larijani): ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர். இவர் பின்னணியில் இருந்து ராணுவத் தாக்குதல்களுக்கான திட்டங்களை வகுத்து வருகிறார். இவரது குடும்பம் மிகவும் செல்வாக்கு மிக்கது. கணினி அறிவியலில் பட்டம் பெற்ற இவர், மேற்கத்திய தத்துவத்தில் (Western Philosophy) பிஎச்டி முடித்துள்ளார். 1979 புரட்சியில் இணைந்து ஐஆர்ஜிசியில் பிரிகேடியர் ஜெனரல் பதவி வரை உயர்ந்தார். நாடாளுமன்ற சபாநாயகராகவும் நீண்ட காலம் இருந்துள்ளார். தற்போது காமேனியின் மறைவுக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். ஐஆர்ஜிசியுடன் இவருக்கு உள்ள நெருக்கம் இவரது பலத்தை அதிகரித்துள்ளது.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments