
ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் சூழலால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் உயர்வைக்கட்டுப்படுத்த, சர்வதேச ஆற்றல் முகமை (IEA) நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெற்று வரும் வர்த்தக முடக்கம் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் 119.50 டாலர் வரை உயர்ந்து, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், சந்தையை நிலைப்படுத்தவும் சர்வதேச ஆற்றல் முகமை (IEA) மிகப் பெரிய அளவிலான அவசரகால எண்ணெய் இருப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
IEA அமைப்பில் உள்ள 32 உறுப்பு நாடுகள் இணைந்து சுமார் 40 கோடி பேரல் கச்சா எண்ணெயை அவசரகால இருப்பிலிருந்து சந்தைக்கு விடவுள்ளன. இது அந்த அமைப்பின் மொத்த அரசு இருப்புத் தொகையில் மூன்றில் ஒரு பங்காகும். இதற்கு முன்னதாக 2022-ல் உக்ரைன் போரின்போது வெளியிடப்பட்ட 18.2 கோடி பேரல் எண்ணெயை விட இது இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் நாளொன்றுக்குக் கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெயில் 20 சதவீதம் ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே செல்கிறது. தற்போது நிலவும் போர் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இடைவெளியை நிரப்பவே IEA இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான G7 நாடுகளின் கூட்டமைப்பும் இந்த முயற்சிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments