
தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணையவுள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட கட்சிகள் அதனை மறுக்காமல் உள்ளன. விஜய் கூட்டணியில் இணைவாரா என எடப்பாடி பழனிசாமியிடம்தான் கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயலும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் அனல்பறந்து வரும் நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் அனைத்தும் கிட்டத்தட்ட உறுதியாகி தொகுதிப் பங்கீடும் நடைபெற்று வருகிறது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறவுள்ள கட்சிகள் யார் யார் என இன்னும் இறுதி செய்யப்படாத நிலை உள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவுள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாகவே தகவல் பரவி வருகின்றன. இது தொடர்பான கேள்விக்கு அண்மையில் பதிலளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அது வதந்தி என தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரன்
ஆனால் அதே கேள்விக்கு தற்போது பதில் அளிக்க முடியாது என நயினார் நாகேந்திரன் புது விளக்கம் அளித்துள்ளார். நயினார் நாகேந்திரனின் இந்தப் பதில் கேள்வியிலிருந்து நழுவிச் செல்லும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதேபோல மறுபுறம், தவெக தரப்பில் இது தொடர்பான கேள்வியை எதிர்கொண்ட அக்கட்சியின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், யூகங்களுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். திமுகவுடனும் பாஜகவுடனும் ஒருபோதும் கூட்டணி இல்லை என தவெக தரப்பில் முன்பு திட்டவட்டமாக கூறி வந்த நிலையில் நிர்மல்குமாரின் இந்தப் பதிலும் நழுவல் தொனியிலேயே அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.
இதனிடையே, திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சரும் தமிழகத்திற்கான பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலிடமும் விஜய் குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், என்டிஏ கூட்டணியின் தமிழ்நாடு தலைமை எடப்பாடி பழனிசாமி தான். கூட்டணி பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும் எனக் கூறினார்.
தவெகவைப் பொருத்தவரை, ஆட்சியில் பங்கு தரப்படும் என அழைப்பு விடுத்தும்கூட அக்கட்சியின் பக்கம் எந்தக் கட்சியும் இதுவரை செல்லவில்லை. அதேபோல ஜனநாயகன் ரிலீஸில் தொடர்ச்சியான சிக்கல்கள், கரூர் நெரிசல் வழக்கில் சிபிஐ சம்மன் என பல்வேறு சிக்கல்களில் உள்ளார் விஜய். இந்நிலையில் கூட்டணி தொடர்பாக விஜய் அடுத்து என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறார் என்ற கேள்வி, தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments