
காலிஸ்தான் பிரிவினைவாதத்தை தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவந்த பஞ்சாபி பெண் YouTuber கனடாவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல பெண் யூடியூபர் மரணத்தின் மர்மம் விலகுமா?
பஞ்சாபை சேர்ந்த 45 வயதான நான்சி கிரேவால் கனடாவில் வசித்து வந்தார். இவர் கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் பஞ்சாபிகள் மத்தியில் மிகவும் பிரபலமான யூடியூபர் ஆவார். கனடாவின் அண்டாரியோ மாகாணத்தில் விண்ட்சர்-எசெக்ஸ் பகுதியில் அமைந்துள்ள லாசெல் நகரில் அவரது வீடு அமைந்துள்ளது.
கடந்த மார்ச் 3ஆம் தேதி இரவு சுமார் 9:30 மணியளவில் அவரது வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளனர். கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருந்த அவர்கள், வீட்டிற்குள் இருந்த நான்சியை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடி இருக்கின்றனர். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசார் மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். முதலில் வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நான்சியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், நான்சி பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நான்சி காலிஸ்தான் பிரிவினைவாதத்தை மிகத் தீவிரமாக எதிர்த்து வந்தார். குறிப்பாக, தடைசெய்யப்பட்ட SFJ அமைப்பின் தலைவர் குருபத்வந்த் சிங் பன்னூன் மற்றும் அவரது பிரிவினைவாத கருத்துகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தார்.
பிரச்சனைகள் இருந்தால் இந்தியாவிலேயே தீர்த்துக்கொள்ள வேண்டும்; வெளிநாடுகளில் இருந்துகொண்டு வெறுப்பைப் பரப்பக் கூடாது என்று பேசி வந்தார் நான்சி. இதனால், நான்சிக்கு காலிஸ்தான் பிரிவினைவாத கும்பலால் கடும் மிரட்டல் இருந்து வந்தது. இந்த சூழலில் அவர் கொல்லப்பட்டிருப்பதால் கொலையாளிகள் யார்? என்பது குறித்து அண்டாரியோ மாகாண போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவரும் போலீசார், கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என தெரிவித்துள்ளனர்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments