
வான்கடே மைதானத்தில் ரன்கள் மழை!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி எளிதில் வென்றது. அதிரடியான ஆட்டத்தின் மூலம் 196 ரன்கள் இலக்கை 16.3 ஓவர்களில் துரத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 24 வது போட்டி (ஏப்ரல் 16) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது.
சூரியகுமார் யாதவ் கோல்டன் டக்
தொடக்க வீரர்களாக ரியான் ரிகில்டன் மற்றும் குயிண்டன் டி காக் களமிறங்கினர். ரோகித் சர்மா காயம் காரணமாக போட்டியில் இல்லாததால், அவருக்கு பதிலாக குயிண்டன் டி காக் களமிறங்கினார். டி காக் மற்றும் ரிகில்டன் ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிகில்டன் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களம் கண்ட சூரியகுமார் யாதவ்வும் அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இது மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
டி காக் சதம் - மும்பை இந்தியன்ஸ் 195 ரன்கள்
இதனைத் தொடர்ந்து டி காக் உடன் நமன் தீர் கைக்கோர்த்தார். இருவரும் விக்கெட்களை இழக்காமல் ரன்களை குவிக்க தொடங்கினர். இந்த பார்ட்னர்ஷிப் 112 ரன்களை சேர்த்தது. அரைசதம் அடித்த நமன் தீர் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஹர்திக் பாண்டியா 14, ருதட்போர்ட் 1, திலக் வர்மா 8 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் டி காக் கடைசி வரை களத்தில் நின்று ரன்களை சேர்த்துக்கொண்டிருந்தார். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 195 ரன்களை எடுத்தது. டி காக் 60 பந்துகளில் 112 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பஞ்சாப் முதல் ஓவரிலேயே 21 ரன்கள்
இந்த நிலையில்தான் பஞ்சாப் கிங்ஸ் அணி 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. வழக்கம்போல் பிரப் சிம்ரன் சிங் மற்றும் ப்ரியான்ஸ் ஆரியா ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரே 21 ரன்களை அடித்து இருவரும் அசத்தினர். இது அவர்களுக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது. ஆனால் ப்ரியான்ஸ் ஆரியா 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து கூப்பர் கானொலி 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
-ரன்களை வாரி வழங்கிய மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சாளர்கள்
பின்னர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கி பிரப்சிம்ரன் சிங் உடன் இணைந்து ரன்களை குவிக்க தொடங்கினார். இருவரும் அதிரடியாக விளையாடினர். மும்பை அணியின் பந்து வீச்சாளர்கள் எவரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. 2.3 ஓவர்கள் வீசிய தீபக் சாஹர் 45 ரன்கள், ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்கள் வீசி 41, ஹர்திக் பாண்டியா 3 ஓவர்கள் வீசி 39, ஷர்துல் தாக்கூர் 3 ஓவர்கள் வீசி 42 ரன்கள் என ரன்களை வாரி வழங்கினர்.
ருத்ரதாண்டவம் ஆடிய பிரப்சிம்ரன் சிங்
இதன் காரணமாக பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் 198 ரன்கள் அடித்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. ஸ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். பிரப்சிம்ரன் சிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 80 ரன்களை குவித்தார்.
பும்ரா விட்ட கேட்ச் - போட்டியின் திருப்புமுனை
ஹர்திக் பாண்டியா தனது முதல் ஓவரை அதாவது அணியின் 4வது ஓவரை வீசினார். இதில் முதல் பந்திலேயே பிரப்சிம்ரன் சிங் கேட்ச் கொடுத்தார். ஆனால் அதனை பிடிக்காமல் தவறவிட்டார் ஜஸ்பிரித் பும்ரா. அப்போது பிரப்சிம்ரன் சிங் வெறும் 11 ரன்களில் இருந்தார். ஒருவேளை அந்த கேட்ச்சை பும்ரா பிடித்திருந்தால், போட்டி மும்பை இந்தியன்ஸ் அணியின் பக்கம் மாறி இருக்க வாய்ப்பிருக்கிறது.
புள்ளிப்பட்டியலின் முதல் இடம் பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் அணி இப்போட்டியில் வென்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. அந்த அணி 5 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், 4ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்தானது. இதனால் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் உள்ளது. இதன்மூலம் பஞ்சாப் அணி மற்ற அணிகளை அச்சுறுத்தும் வகையில் டாப் ஃபார்மில் உள்ளது. இதே வெற்றி கணக்கை தொடர்ந்தால் அந்த அணி கோப்பைக்கு ஒரு வலுவான போட்டியாக இருக்கும்.
மும்பை அணிக்கு தொடரும் தோல்வி
மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இத்தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. மீதமுள்ள 4 போட்டிகளில் படுதோல்வியை அடைந்து 2 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது. அந்த அணியின் நெட் ரன் ரேட் -1.076 ஆக உள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமாக தொடங்கி உள்ள மும்பை அணி வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. -
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments