
கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் பாகிஸ்தானில் நடந்த ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. உலகின் மிக முக்கியமான எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையின் ஒரு பகுதி, போர் தொடங்கியதில் இருந்து மூடப்பட்டுதான் இருந்தது. இந்நிலையில் தற்போது டொனால்ட் டிரம்ப் அதை முழுமையாக முடக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் உலக நாடுகள் அனைத்திலும் எண்ணெய் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளன.
இதனால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை, ஒரே நாளில் 8 சதவீதம் உயர்ந்து கிடுகிடுவென 105 டாலரை எட்டியது. மேற்கொண்டு எந்தவித பொருளாதார பேரிழப்பும் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, பல உலக நாடுகள் ஓரணியில் இணைந்துள்ளன.
அந்தவகையில் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், ஈரானுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர், “ஹார்முஸ் பகுதியில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால், சர்வதேச அளவில் வாழ்வாதாரச் செலவுகள் அதிகரித்துள்ளன. இதைச் சீர்செய்ய உலகளாவிய கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது மிக அவசியம். கடல்சார் பயணச் சுதந்திரத்தை மீட்டெடுக்கும் நோக்கில், பிரிட்டனின் அழைப்பை ஏற்று 40-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த வாரம் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் இணைந்து ஒரு சர்வதேச உச்சிமாநாட்டை நடத்த உள்ளோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தன் பேட்டியொன்றில், “அமெரிக்காவின் கப்பல் முடக்கத்தில் இங்கிலாந்து இணையாது. ஹார்முஸைத் திறப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்தும்” என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் முன்னெடுத்துள்ள இந்த உச்சி மாநாடு, சர்வதேச எரிசக்தி சந்தையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டனின் அழைப்பை 40-க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்றுள்ள நிலையில், ரஷ்யா அதிபர் மாளிகையான கிரெம்ளின் வெளியிட்ட அறிக்கையில், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளுக்கு மத்தியஸ்தம் செய்ய, தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஈரானிய அமைச்சர் மசூத் பெசெஷ்கியானிடம் பேசியதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
புதின் தொலைபேசியில் பேசிய நிலையில், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஈரானுக்கு ஒரு அவசரப் பயணத்தை மேற்கொண்டு, ஈரானியத் தலைவர்களுடன் நேரிடையாக பேசியதாகவும் கூறப்படுகிறது. உக்ரைன் உடனான ரஷ்யாவின் போருக்காக, ஈரானின் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ட்ரோன்களுக்கு மாற்றாக, அமெரிக்காவுடன் போரிட ஈரானுக்கு ரஷ்யா ஆயுத உதவிகள் செய்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினர், ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு தீர்வை நோக்கி செயல்படுவது இருதரப்புமே அமைதியை நோக்கி செல்லும் ஒரு முயற்சியாக சர்வதேச அரங்கில் பார்க்கப்படுகிறது. அதற்கேற்றார்போல ரஷ்யாவும் தனது அறிக்கையில், “அரசியல் மற்றும் இராஜதந்திரத் தீர்வை எட்டுவதற்கான தேடலை எளிதாக்கவும், மத்திய கிழக்கில் ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதியை அடைவதற்கான முயற்சியாகவுமே இந்த மத்தியஸ்தம் முன்னெடுக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியாக மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகள் ஒன்றிணைந்திருப்பது, ‘இனியாவது போர் பதற்றம் குறைந்து உலக அமைதி திரும்பும், உலக பொருளாதாரம் சீராகும்’ என்ற நம்பிக்கையை பலருக்கும் கொடுத்துள்ளது. இருப்பினும் அமெரிக்கா ரஷ்யா மற்றும் பிரிட்டன் விஷயத்தில் எடுக்கப் போகும் முடிவு என்ன என்பதை பொறுத்தே எந்தவொரு மாற்றமும் நடக்கும் என்பதால், உலகம் இப்போது டிரம்ப்பின் முடிவுக்காக காத்திருக்கிறது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments