Ticker

6/recent/ticker-posts

ரூ.930 கோடி + அழகான பெண்... அதிபர் மகனின் அடாவடி பேச்சு - துருக்கி vs உகாண்டா


உகாண்டா நாட்டின் பாதுகாப்புப் படைத் தளபதியும், அந்நாட்டு அதிபர் யோவேரி முசெவேனியின் மகனுமான ஜெனரல் முஹூசி கைனருகபா தொடர்ச்சியாக துருக்கி நாட்டுக்கு சர்ச்சைக்குரிய மிரட்டல் விடுத்து வருகிறார். இதனால், உகாண்டா - துருக்கி இடையே கடும் பதற்றம் உருவாகி உள்ளது.

'$1 பில்லியன் மற்றும் அழகான பெண்' 

உகாண்டா பாதுகாப்புப் படைத் தளபதி முஹூசி கைனருகபா அவரது x பக்கத்தில், துருக்கி நாடு உகாண்டாவுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலரும், மனைவியாக 'துருக்கி நாட்டின்  மிக அழகான ஒரு பெண்ணையும்' தர வேண்டும் என மிகுந்த சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

அதாவது, 'அந்நாட்டின் மிக அழகான பெண்ணை' தன்னிடம் ஒப்படைக்குமாறும், அவரை தான் திருமணம் செய்துகொள்வதாகவும் அவர் கூறியது பெரும் சர்ச்சையாக பார்க்கப்படுகிறது.

கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால்...

மேலும் தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இந்த மூன்று விஷயங்களை எதிர் நடவடிக்கையாக எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

30 நாள்களுக்குள் துருக்கியுடனான தூதரக உறவுகள் துண்டிக்கப்படும்.

கம்பாலாவில் உள்ள துருக்கியின் தூதரகம் மூடப்படும்.
உகாண்டாவின் வான்வெளியில் துருக்கி விமானங்கள் அனுமதிக்கப்படாது.

இழப்பீடு கோரும் உகாண்டா

பிராந்தியப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு உகாண்டாவின் பங்களிப்பு அங்கீகரிக்கப்படவில்லை என்றும் அதற்கான நிதி இழப்பீட்டை துருக்கி வழங்க வேண்டும் என்றும் கைனருகபா தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், சோமாலியாவின் தலைநகரான மொகடிஷூவில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்பட சோமாலியாவின் வணிக மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களில் இருந்து துருக்கி பெரும் பயனை பெறுவதாக தனது தொடர்ச்சியான X பதிவுகளில் கைனருகபா குற்றஞ்சாட்டுகிறார்.

இதுபோன்ற திட்டங்கள் மூலம் துருக்கி பெருத்த லாபம் ஈட்டி வருகிறது என்றும் ஆனால் உகாண்டா மட்டும் பல ஆண்டுகளாக பெரும் பாதுகாப்பு பொறுப்பைச் சுமந்து வருவதாக முஹூசி கைனருகபா தெரிவித்தார்.

அல்கெய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்-ஷபாப் தீவிரவாதக் குழுவை எதிர்த்துப் போராடுவதற்காக, சுமார் 20 ஆண்டுகளாக சோமாலியாவில் உகாண்டா படைகளை நிலைநிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

எளிமையான டீலிங்

பாதுகாப்பு ஈவுத்தொகையாகவே துருக்கியிடம் இருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலரை கோருவதாகவும் முஹூசி கைனருகபா கூறினார். மேலும் "இது துருக்கியை பொறுத்தவரை எளிமையான ஒரு ஒப்பந்தம்தான்.

ஒன்று அவர்கள் எங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் அல்லது நான் இங்குள்ள அவர்களின் தூதரகத்தை மூடிவிடுவேன். பதிலுக்கு அவர்களும் துருக்கியில் உள்ள நமது தூதரகத்தை மூடலாம். எந்த பிரச்னையும் இல்லை" என X பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.

துருக்கி பயணிக்க வேண்டாம்

"ட்விட்டர் விளையாட்டுகளை மறந்துவிடுங்கள். நாங்கள் மிக விரைவில் அவர்களுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வோம்" என எச்சரிக்கை விடுத்தார். மேலும், "பின்னால் குத்திக்கொண்டே இருக்கும் ஒரு நண்பன் யாருக்கு வேண்டும்?" என்றும் கூறி உகாண்டாவிடம் துருக்கி நியாயமற்ற முறையில் நடந்துகொள்வதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், உகாண்டா மக்கள், சொந்த பாதுகாப்பிற்காக துருக்கிக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தினார். உகாண்டாவின் இந்த நீண்ட கோரிக்கைக்கு துருக்கி தரப்பில் இதுவரை பதில் அளிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இதனால் அந்த பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு ஆதரவு

இஸ்ரேல் - ஈரான் போரில் தான் இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாகவும் முஹூசி கைனருகபா பதிவிட்டுள்ளார். அதில், "நான் நமது கடவுள் இயேசுவின் புனித நிலமான இஸ்ரேலை பாதுகாக்க எனது தலைமையில் 1 லட்சம் உகாண்டா படை வீரர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப தயாராக உள்ளேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இத்தாலி பிரதமர் குறித்து சர்ச்சை பேச்சு

இதுபோன்று, மற்ற நாடுகளை ஆத்திரமூட்டும் வகையில் முஹூசி கைனருகபா கருத்து தெரிவிப்பது முதல்முறையல்ல. இதற்கு முன் 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பொதுவெளியில் பேசிய முஹூசி கைனருகபா, 100 அங்கோலே பசுக்களை தான் தருவதற்கு தயாராக இருப்பதாகவும், அதற்கு பதிலாக இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனியைத் திருமணம் செய்துவைக்கும்படி பேசியிருந்தார். 

மன்னிப்பு கேட்ட அதிபர்

இந்த பூமியில் மிக அழகான பசுக்கள் என்றால் அது அங்கோலே பசுக்கள்தான் என்றும் அப்போது பேசியிருந்தார். இதேபோல் கென்யா மீது படையெடுத்து ஆக்கிரமிப்போம் என்றும் பேசியிருந்தார். இவரின் இத்தகைய பேச்சுகளுக்கு அதிபர் யோவேரி முசெவேனி மன்னிப்பு கேட்டதும் இங்கு குறிப்பிடடத்தக்கது.

zeenews


 


Post a Comment

0 Comments