
2025 அக்டோபர் 10ல் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர் ஆறு மாதங்கள் கழிந்த நிலையிலும், காஸாவில் முழுமையான அமைதி இல்லை.
தொடர்ச்சியான தாக்குதல்கள், உதவி வரத்துத்தடைகள், இடப்பெயர்வு மற்றும் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை காரணமாக மக்கள் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
2023 அக்டோபர் 7 முதல் 2026 ஏப்ரல் வரை காஸா சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, காஸாவில் சுமார் 72,315 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 1,72,137 பேர் காயமடைந்துள்ளனர்.
பெரும்பாலான குடும்பங்கள் இன்னுமே இடம்பெயர்ந்த நிலையில் உள்ளனர். 1,600க்கும் மேற்பட்ட இடப்பெயர்வு முகாம்களில் அதி நெரிசல், சுகாதார பிரச்சினைகள் எலி மற்றும் பூச்சிகளின் தொல்லைகள் பொதுவாக உள்ளன.
60%க்கும் மேற்பட்ட இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்.
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு தொடர்ந்த வண்ணமாக இருக்கின்றது.
பல இடங்களில் குடிநீர் பற்றாக்குறை, 3,20,600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன; வீடுகளில் பல முழுமையாக அழிந்து அல்லது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. மின்சாரம், நீர் சுத்திகரிப்பு, கழிவு அகற்றல் ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், உணவு, மருந்து, மருத்துவ உபகரணங்கள் கொண்டு செல்லும் நோக்கில் குளோபல் சுமூத் ஃப்ளோட்டிலா (Global Sumud Flotilla) தனது பயணத்தை இரண்டாவது முறையாக மேற்கொண்டுள்ளது.

இம்முறையும் இஸ்ரேல் கடற்படை இடைமறிக்கும் அபாயம் உள்ள நிலையிலும் கூட, இப்பயணம் இஸ்ரேலின் தடையை உடைக்கும் அமைதி முயற்சியாகக் கருதப்படுகின்றது!
காஸா மீதான தடையை உடைப்பதற்காகச் செல்லும் "குளோபல் சுமூத் புளோட்டிலா" (Global Sumud Flotilla) என்ற சர்வதேச கப்பல் பிரச்சாரத்தில் இலங்கை சார்பாக ஸமீரா மெஹபூப்தீன் இணைந்துள்ளார்.
காசாவிற்குத் தேவையான மனிதாபிமான உதவிகளையும் மருத்துவப் பொருட்களையும் கொண்டு செல்வதை நோக்காகக் கொண்டு, "சுமூத்" (உறுதி) என்ற பாலஸ்தீனியர்களின் போராட்டக் குறியீட்டுடன், ஸ்பெயினின் பார்சிலோனா நகரிலிருந்து இக்கப்பல் குழு தனது பயணத்தைத் துவங்கியுள்ளது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.

இலங்கையின் கொடியுடன் சர்வதேச கடல் பகுதியில் இந்தப் பயணத்தை மேற்கொள்வதன் மூலம் பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவை மாவனெல்லையைச் சேர்ந்த ஸமீரா மெஹபூப்தீன் என்ற பெண் ஆர்வலர் தைரியமாக வெளிப்படுத்தியுள்ளார்.
வரலாற்றிலேயே மிகப் பெரிய மனிதாபிமான கப்பல் பயணமாகக் கருதப்படும் இப்பிரயாணம்,2026ம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதியன்று துவங்கியது.
சுமார் 70 முதல் 100 கப்பல்களில் சுமார் 3,000 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

குறிப்பாக, காஸாவின் சிதைந்த சுகாதாரக் கட்டமைப்பை மீட்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் தாதியர்களைக் கொண்ட ஒரு சிறப்பு மருத்துவக் கப்பல் படை ஒன்றும் இத்துடன் இணைந்துள்ளது.
தற்போது மத்திய தரைக்கடற்பகுதியில் பயணித்து வரும் இக்கப்பற்குழு, கிரீஸின் லெராபெட்ரா மற்றும் இத்தாலியின் சிசிலி ஆகிய இடங்களில் தரித்து, ஏப்ரல் 24 அன்று சிசிலியிலிருந்து காஸாவை நோக்கிப் பயணிக்கத் திட்டமிட்டுள்ளது.
காஸா பாதிப்பின்போது, பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் போர்வைகள் போன்றவற்றை ஐக்கிய நாடுகள் சபையின் UNRWA ஊடாக அனுப்பி வைத்தன; அதனைத் தொடர்ந்து இப்போது ஸமீரா மெஹபூப்தீன் என்ற பெண் ஆர்வலர், இலங்கைப் பிரதிநிதியாக "குளோபல் சுமூத் ஃப்ளோட்டிலா" (Global Sumud Flotilla) என்ற சர்வதேச கப்பல் பிரச்சாரத்தில் பங்கேற்கும் செயற்பாட்டாளரின் தனிநபர் பங்களிப்பு, சர்வதேச மட்டத்தில் இலங்கை மக்களின் நிலைப்பாட்டை உலகிற்கு உணர்த்துவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
2026ம் ஆண்டு ஸ்பிரிங் மிஷனில் (Spring Mission for Gaza 2026) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, காஸா மீதான இஸ்ரேலின் தடையை (Siege/Blockade) உடைக்கும் நோக்கத்துடன் இக்கப்பல் பயணத்தில் ஈடுபடுகிறார்.
இந்த ஃப்ளோட்டிலா பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், மனித உதவியை கொண்டு செல்லவும், அரசியல் அழுத்தம் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச இயக்கமாகும். இதில் நூற்றுக்கணக்கான கப்பல்களும், ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
-செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments