Ticker

6/recent/ticker-posts

டீசலுக்காக சடலத்துடன் வந்த நபர்: தாய்லாந்து எரிபொருள் தட்டுப்பாட்டின் உச்சக்கட்டம்


அமெரிக்கா, ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றத்தால் தாய்லாந்தில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, டீசல் பதுக்கலைத் தவிர்க்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், மயானங்களில் உடல்களை எரிக்கத் தேவையான டீசலை வாங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்தின் பான் புயெங் மாவட்டத்தைச் சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க பிரீச்சா என்ற மயானக் காப்பாளர், கடந்த பல ஆண்டுகளாக ஒரே எரிபொருள் நிலையத்தில்தான் டீசல் வாங்கி வந்துள்ளார்.

ஆனால், தற்போதைய தட்டுப்பாட்டை முன்னிட்டு, கொள்கலன்களில் டீசல் வழங்க ஊழியர்கள் மறுப்புத் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது வாகனத்தின் பின் பகுதியில் இருந்த சடலத்தைக் காட்டி, பிணத்தை எரிக்கவே டீசல் தேவை என்பதை நிரூபித்துள்ளார்.

இந்த வினோத சம்பவத்தை அவர் தனது முகநூல் பக்கத்தில் நேரலையாகவும் வெளியிட்டார். அதில், "யாரும் எரிபொருளைப் பதுக்கக் கூடாது என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் சடலத்தை எரிக்க டீசல் இன்றி எங்களால் ஒன்றும் செய்ய இயலாது" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

நவீன மயானங்களில் நிலக்கரிக்குப் பதிலாக டீசல் பயன்படுத்தப்படுவதால், தட்டுப்பாடு காரணமாக இறுதிச் சடங்குகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்து அரசாங்கம் டீசல் விலையைக் கடுமையாக உயர்த்தியுள்ளதோடு, எரிபொருள் மானியத்தையும் ரத்து செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் ஆசிய நாடுகள் எரிசக்தி நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையில், 100 நாட்களுக்குத் தேவையான இருப்பு நம்மிடம் உள்ளதாகத் தாய்லாந்து அரசு தற்போது அறிவித்துள்ளது.

nambikkai


 


Post a Comment

0 Comments