
சமீபத்திய போர்ச் சூழலின்போது, அமீரகத்தின் வான் எல்லைக்குள் நுழைந்த 90 சதவீதத்திற்கும் அதிகமான ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை, அமீரகம் தனது சொந்தப் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டு மிகவும் வெற்றிகரமாக வீழ்த்தியது.
இந்தத் தற்காப்புத் திறன், அந்நிய நாடுகளின் இராணுவ உதவியின்றி அமீரகம் தன்னைத் தானே காத்துக்கொள்ள முடியும் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லியிருப்பதாக அந்நாட்டின் முன்னணி அரசியல் ஆய்வாளர் டாக்டர் அப்துல்காலிக் அப்துல்லாஹ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கப் படைகள் அமீரகத்திற்கு இனிமேல் ஒரு சுமை என்றும், ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலைகொண்டுள்ள அந்நிய இராணுவத் தளங்களை மூடுவது குறித்து ஆலோசிக்க வேண்டிய தருணம் இதுவென்றும் அவர் தெரிவித்துள்ள கருத்து, சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது!
ஒரு காலத்தில் பாதுகாப்பிற்காகத் தேவைப்பட்ட அமெரிக்கப் படைகள், இன்று அமீரகத்திற்கு ஒரு 'சுமை'யாக மாறிவிட்டன; அமெரிக்கத் தளங்கள் இங்கு இருப்பதாலேயே, அமீரகம் தனக்குச் சம்பந்தமில்லாத பிராந்தியப் போர் பதற்றங்களுக்குள் இழுக்கப்படும் அபாயம் வந்துள்ளது. வெளிநாட்டுப் படைகளை நம்பியிருப்பதை விட, அதிநவீன ஆயுதங்களைச் சொந்தமாக வாங்கி, இராணுவத்தைப் பலப்படுத்துவதில் அமீரகம் கவனம் செலுத்த வேண்டும். வளைகுடாப் பிராந்தியத்தில் பல தசாப்தங்களாக நிலவிவரும் அமெரிக்காவின் இராணுவ மேலாதிக்கத்திற்கு, அமீரகத்தின் இந்த உள்நாட்டுச் சிந்தனை மாற்றம் மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது!

"தற்காப்புத் திறன் நிரூபிக்கப்பட்ட பிறகு, பாதுகாப்பு என்ற பெயரில் அந்நியப் படைகள் இங்கு நீடிப்பதில் நியாயமில்லை" என்ற அவரது கருத்து, அரபு நாடுகளின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்படப்போகும் ஒரு பெரும் மாற்றத்தின் அறிகுறியாகவே கருதப்படுகிறது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் பற்றிய பாதுகாப்பு விவாதங்களில், டாக்டர் அப்துல்காலிக் அப்துல்லா போன்ற முன்னணி அரசியல் ஆய்வாளர்களின் கருத்துக்கள் அமீரக அரசின் கவனத்தை ஈர்க்கும் ஒரு விடயமாகும் கருதப்படுகின்றது.
அந்நிய நாடுகளின் இராணுவ உதவியின்றி அமீரகம் தன்னைத்தானே பாதுகாக்கும் திறன் பெற வேண்டும் என்பது அவரது ஒரு முக்கியமான திசைமாற்ற சிந்தனையாகப் பார்க்கப்படுகிறது!
நீண்ட காலமாக அமெரிக்காவுடன் பாதுகாப்பு கூட்டாண்மை வைத்திருப்பதால், இப்படியான ஒரு கருத்தை அமீரக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த முற்படும் என்பது சாத்தியமற்ற ஒன்றாகும்.
அமெரிக்காவுக்கும், அமீரக அரசுக்குமான நீண்டகால உறவு ஆயுதங்கள், பயிற்சி, நுண்ணறிவுப் பகிர்வு போன்ற பல துறைகளில் ஆழமாக உள்ளதால், அதனைத் திடீரென மாற்றிக் கொள்வது கடினமான ஒன்றாகும்.
மத்திய கிழக்குப் பிராந்தியம் அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக தொடர்ந்தும் பதற்றத்திலேயே இருந்து வருகின்றது.

குறிப்பாக ஈரானுடனான பதற்றங்கள் காரணமாக, வெளிப்புற ஆதரவை முற்றிலுமாக விட்டு விடுவது அபாயகரமாக கருதப்படலாம். இருப்பினும், அமீரகம் ஏற்கனவே தன் பாதுகாப்புத் திறனை உள்நாட்டு ஆயுத உற்பத்தி, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் கூட்டாண்மைகளைப் பரவலாக்குதல் போன்ற வழிகளில் மேம்படுத்திக் கொண்டுதான் வருகின்றது. அதனால், டாக்டர் அப்துல்லாவின் கருத்து முழுமையாக நிராகரிக்கப்படாமல், சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் ஒரு இலக்காக இருக்கும் வாய்ப்பு அதிகம். அமெரிக்காவுடன் உறவைத் தொடர்ந்தபடியே, படிப்படியாக சுயநிறைவு அடைவது போன்ற சமநிலை அணுகுமுறை சாத்தியமாகலாம்!
செம்மைத்துளியான்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments