Ticker

6/recent/ticker-posts

ஈடன் கார்டனில் ஹைதராபாத் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தி அபார வெற்றி!


ஐபிஎல் 2026 சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்று, இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஹைதராபாத் அதிரடி பேட்டிங்

போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஈடன் கார்டன் ஆடுகளம் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருக்கும் என்பதால், ஹைதராபாத் அணிக்கு ஒரு சவாலான இலக்கை நிர்ணயிக்கும் பொறுப்பு இருந்தது. இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் ஆரம்பம் முதலே கொல்கத்தா பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கினர்

அபிஷேக் சர்மா வெறும் 21 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருக்குத் துணையாக ஆடிய டிராவிஸ் ஹெட் 21 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இவர்களின் கூட்டணியால் பவர்பிளே ஓவர்களிலேயே ஸ்கோர் 80 ரன்களை தாண்டியது. மிடில் ஆர்டரில் இறங்கிய ஹென்றிச் கிளாசன், தனது வழக்கமான பாணியில் சுழற்பந்து வீச்சாளர்களைச் சிதறடித்தார். அவர் 35 பந்துகளில் 52 ரன்கள் எடுக்க, சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. கடைசி நேரத்தில் நிதிஷ் குமார் ரெட்டி 24 பந்துகளில் 39 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் SRH அணி 8 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் சேர்த்தது.

கொல்கத்தாவின் பந்துவீச்சு:

KKR தரப்பில் பிளெசிங் முசரபானி மிகச்சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வைபவ் அரோரா 2 விக்கெட்டுகளையும், கார்த்திக் தியாகி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இருப்பினும், ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் திணறினர்.

கொல்கத்தா அணி தோல்வி

227 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கித் துரத்திய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர்கள் சீக்கிரம் ஆட்டமிழந்த நிலையில், இளம் வீரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி மட்டும் ஒருமுனையில் நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடி 29 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். பின் ஆலன் 28 ரன்கள் எடுக்க, ரிங்கு சிங் 35 ரன்கள் எடுத்தார். இருப்பினும், ஹைதராபாத்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் கேகேஆர் அணி விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. ஹைதராபாத் அணியின் ஜெய்தேவ் உனட்கட் 3 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவருக்குத் துணையாக நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஈஷான் மலிங்கா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தாவை 161 ரன்களுக்குச் சுருட்டினர்.

16வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கொல்கத்தா அணி 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 65 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது.

zeenews

 


Post a Comment

0 Comments