
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் முடிவுக்கு வருமென உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஒரு தொலைபேசி அழைப்புதான் போர் பதற்றத்தை மீண்டும் அதிகரித்துள்ளது என ஈரான் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறது.
அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து கொண்டிருந்த போது, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவரை சுமுகமாகச் சென்றுகொண்டிருந்த பேச்சுவார்த்தை, அதன்பின்னரே தலைகீழாக மாறியதாக ஈரான் கூறியுள்ளது. அந்த ஒரு ஃபோன் கால்-தான், எட்டப்படவிருந்த சமரச முடிவை முறியடித்ததாகவும் ஈரான் சொல்கிறது.
இதை குறிப்பிட்டு “அமெரிக்காவுடனான எங்களின் நீண்டகாலப் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வர இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை, இஸ்ரேல் கெடுத்துவிட்டது” என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக பேச்சுவார்த்தை தோல்வியடைந்தபோது அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், “எங்களின் மிகச்சிறந்த ஆஃபரை ஈரான் ஏற்கவில்லை. எனவே நாங்கள் வெளியேறுகிறோம்” என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், “ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிட மறுத்துவிட்டது. அதனால்தான் இந்த பேச்சுவார்த்தை தோல்வியுற்றது” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் ஒரு தொலைபேசி அழைப்புதான், அமெரிக்க - ஈரான் இடையிலான முக்கிய விவாதங்களை அப்படியே திசைதிருப்பியதாக இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி குற்றம் சாட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அவர், “அந்த ஃபோன் கால் வந்தபிறகு, பேச்சுவார்த்தையின் கவனம் அமைதியை நோக்கி நகர்வதற்குப் பதிலாக இஸ்ரேலின் முன்னுரிமைகள் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த கோரிக்கைகளை நோக்கி மாறிவிட்டது. இதனால் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் முடங்கியது” என்றுள்ளார்.
மேலும் “போர்க்களத்தில் அமெரிக்காவால் எதை செய்ய முடியவில்லையோ, அதை பேச்சுவார்த்தை மேஜையில் ஈரானிடமிருந்து பிடுங்க முயல்கிறது” என்று அராக்சி குற்றம் சாட்டியுள்ளார். அதாவது, போரின் மூலம் ஈரானைப் பணிய வைக்க முடியாத அமெரிக்கா, இக்கட்டான இந்த சூழலைப் பயன்படுத்தி பேச்சுவார்த்தையின் மூலம் தங்களுக்குச் சாதகமான நிபந்தனைகளை (இஸ்ரேலின் அழுத்தத்தால்) திணிக்கப் பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை குறிப்பிட்டு ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய், “ஒரே ஒரு முறை சந்தித்துப் பேசுவதன் மூலம் பல ஆண்டுகாலப் பிரச்சினைகளுக்குப் பெரிய தீர்வு கிடைத்துவிடும் என்று எதிர்பார்ப்பது கடினம்தான். உடன்பாடு எட்டப்படாவிட்டாலும், தூதரக ரீதியாகத் தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் இன்னும் தயாராகவே உள்ளது” என்றுள்ளார்.
இதையடுத்து மீண்டுமொரு பேச்சுவார்த்தை நடக்குமா, தற்போது அமலில் இருக்கும் தற்காலிகப் போர் நிறுத்தம் தொடருமா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. இருப்பினும் டிரம்ப்பின் அடுத்தடுத்த பேச்சுகள், அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தனது ராணுவத் தாக்குதல்களை தொடங்குமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments