
இந்த நிலை இன்னும் 3-6 மாதங்களுக்குத் தொடர்ந்தால், சமையல் எண்ணெய், காய்கறி எண்ணெய், பிஸ்கட்டுகள், தின்பண்டங்கள் மற்றும் சோப்பு ஆகியவற்றின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயரக்கூடும்.
ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக பெட்ரோல் டீசல் பிரச்சனை மட்டும் அல்ல, மேலுமொரு பிரச்சனையும் வரப்போகிறது என்ற அச்சம் எழுந்துள்ளது. அது, பாமாயில் பிரச்சனை. ஏன் அப்படி? இதனால் என்ன பிரச்சனை? விரிவாக இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
உலகிலேயே அதிக பாமாயிலை இறக்குமதி செய்வது இந்தியாதான். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9.5 மில்லியன் டன் பாமாயிலை இந்தியா பயன்படுத்துகிறது. ஆனால் அதில் 4 லட்சம் டன்னுக்கும் குறைவான பாமாயில்தான் உள்நாட்டு உற்பத்தி. மற்றவை அனைத்தும் இறக்குமதி ஆவதுதான். இதற்கு காரணம், பாமாயிலை உற்பத்தி செய்யும் பனை மரங்களுக்கு தொடர்ச்சியான மழையும் அதிக நீரும் தேவை. எனவே தென்கிழக்கு ஆசியாவில்தான் அதிக பாமாயில் உற்பத்தி கிடைக்கிறது. பெரும்பாலும் இந்தோனேசியா, மலேசியாவிலிருந்தே இந்தியா அதிக பாமாயில் (சுமார் 9 மில்லியன் டன்) இறக்குமதி செய்கிறது.
பாமாயில் தட்டுப்பாடு ஏற்படுவது ஏன் ஆபத்து? இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொத்த சமையல் எண்ணெயில் 40% பாமாயில்தான். மற்ற சமையல் எண்ணெய்களை விட இது விலை மலிவானதாகவும், நீண்ட காலத்திற்கு கெட்டுப்போகாமலும் இருப்பதால், பல குடும்பங்கள் சமையலுக்கு பெரும்பாலும் பாமாயில்தான் பயன்படுத்துகின்றன. இன்றைய தேதியில் இந்தியச் சந்தையில் விற்கப்படும் அனைத்து பொரித்த சிப்ஸ், பப்ஸ், சமோசா, வடை, பிரெஞ்சு ஃப்ரைஸ், முறுக்கு, பிஸ்கட்டுகள், குக்கீகள், கேக், பேஸ்ட்ரிகள், பிற பேக்கரிப் பொருட்கள், உடனடியாக உண்ணக்கூடிய வகையிலான இன்ஸ்டண்ட் உணவுகள், சாஸ், கிரேவிகள், ரொட்டி, பீட்சா, பியூட்டிக்கு கிரீம்கள், லோஷன்கள், சோப் வகைகள், மாய்ஸ்ச்சரைசர்கள், லிப்ஸ்டிக் உட்பட பல பொருட்களிலும் பாமாயில் பயன்படுத்தப்படுகின்றன. இதிலேயே பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டால் என்ன ஆகுமென உங்களுக்கே புரிந்திருக்கும்.
பாமாயில் இவ்வளவு அதிகம் பயன்படுத்தப்பட என்ன காரணம்? முக்கிய காரணம் அதன் விலை மலிவாக இருப்பதுதான். மொத்த விற்பனையில் ஒரு லிட்டர் பாமாயில் 125 ரூபாய் என்றால், மற்ற எண்ணெய்கள் ஒரு லிட்டர் 150-175 ரூபாய் விலையில் விற்கப்படுகின்றன. நாம் இறக்குமதி செய்யும் பாமாயிலில் 70 சதவிகிதம் உணவுக்காகவும், மீதமுள்ள 90 சதவிகிதம் சோப் மற்றும் அழகுசாதன பொருட்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இப்படியாக இந்தியாவில் அன்றாட வாழ்வில் பல பொருட்களிலும் பயன்படுத்தப்படும் பாமாயிலில் தட்டுப்பாடு என்பது, சாமானியர்களின் வாழ்வில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதிலும் நமது சமையல் எண்ணெயில் 55-60%-ஐ நாம் இறக்குமதி செய்கிறோம், அதில் பெரும்பகுதி, அதாவது சுமார் 84%, இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து வருகிறது.
ஈரான் போருக்கும் பாமாயில் தட்டுப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்? பாமாயிலானது தென்கிழக்கு ஆசியாவிலிருந்து (இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து) வந்தால், அது ஹார்முஸ் நீரிணையை கடக்க வேண்டியதில்லைதான். அதனால் பாமாயில் இறக்குமதியில் பிரச்சனை இல்லையென பலரும் நினைக்கின்றனர். ஆனால் பிரச்சனை என்னவென்றால், இந்தோனேசியா உட்பட பல நாடுகள், இனி பாமாயில் ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு விற்பனைக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. காரணம், இனி அவர்கள் தங்கள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாமாயிலை, பயோடீசலாக மாற்றப் போகின்றனர். மேலும் டீசலில் 40% வரை பாமாயில் கலக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்தோனேசியா, மலேசியா பாமாயில் ஏற்றுமதியில் கட்டுப்பாடு கொண்டு வருவது ஏன்? உலகம் முழுக்கவே ஈரான் - அமெரிக்கா போர் பதற்றம் அதிகரித்து வருவதால், கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்து வருகின்றன. மிக முக்கியமாக, நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது. அடுத்து என்ன நடக்கும், போர் எவ்வளவு காலம் தொடரும் என எந்தத் தகவலும் தெரியவில்லை. ஒருவேளை விரைவில் போர் முடிவடைந்தாலும் கூட ஹார்முஸ் நீரிணையில் சுங்க வரி விதிக்கப்படும் என்ற பேச்சு அடிபடுகிறது. எனவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்பது தெளிவாகிறது. இதனால்தான் இப்போதே உலகநாடுகள் தங்களுக்குத் தேவையான எண்ணெயையும் எரிசக்தியையும் தாங்களே உற்பத்தி செய்துகொள்ளும் வழிகளை தேடிக்கொள்கின்றன. இதற்கு இந்தோனேசியா, மலேசியாவும் விதிவிலக்கல்ல. அவர்களும், சொந்தமாக எரிபொருள் தயாரிக்க நினைப்பதால்தான் பாமாயிலை ஏற்றுமதி செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர்.
இதில் இந்தியா பாதிக்கப்படுவது எப்படி, ஏன்? இந்தோனேசியா தனது பாமாயிலை உள்நாட்டு பயோடீசலுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால், இந்தியாவுக்குக் கிடைக்கும் பாமாயிலின் அளவு குறையும். இந்த குறைந்த விநியோகம் இந்தியாவில் அவற்றின் விலைகளை மேலும் அதிகரிக்கும். ஏற்கெனவே ஈரான் போரின் காரணமாக கப்பல் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளன. இப்போது இந்த B50 கொள்கையானது, பாமாயிலை விலை உயரவும், பற்றாக்குறை ஏற்படவும் காரணமாகும். இந்தோனேசியா போலவே மலேசியாவும் தனது பயோடீசல் திட்டத்தை விரிவுபடுத்தி வருகிறது. தற்போது B10-ஐ உற்பத்தி (டீசலில் 10% பாமாயிலைக் கலப்பது) என்பதை, B15 மற்றும் பின்னர் B20-ஐ நோக்கி நகர்கிறது மலேசியா.
மேலும் உலகம் முழுக்கவே கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், தென்கிழக்கு ஆசியாவின் இரு முக்கிய நாடுகளும் (இந்தோனேசியா, மலேசியா) தற்போது சமையல் எண்ணெயை விட எரிபொருளுக்காகவே பாமாயிலை அதிகம் பயன்படுத்த விரும்புகின்றன. இந்த நிலை இன்னும் 3-6 மாதங்களுக்குத் தொடர்ந்தால், சமையல் எண்ணெய், காய்கறி எண்ணெய், பிஸ்கட்டுகள், தின்பண்டங்கள் மற்றும் சோப்பு ஆகியவற்றின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயரக்கூடும்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments