Ticker

6/recent/ticker-posts

50 ஓவரில் 822 ரன்கள்... தனி ஒருவராக 300+ ரன்... எதிரணி ஸ்கோர் தான் ஹைலைட் - உலக சாதனை ஜஸ்ட் மிஸ்! | Cricket


பொதுவாக 50 ஓவர் போட்டிகளில் 300 ரன்கள் என்பது வெற்றிக்கான இலக்காகக் கருதப்படும் நிலையில், மாடெம்போ தனி ஒருவராக 143 பந்துகளில் அந்த ரன்களைக் கடந்தார்.

இதுவரை நடந்த கிரிக்கெட் போட்டிகளிலேயே மிகவும் விசித்திரமான போட்டி ஒன்று வரலாற்றில் இல்லாத நிகழ்வாக நடந்திருக்கிறது. கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் இப்படியான ஓர் நிகழ்வு நடக்கவில்லை. கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வினோதமான ஒரு போட்டியாக, ஜிம்பாப்வே நாட்டில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்கார்பியன் கிரிக்கெட் கிளப் (Scorpion Cricket Club) அணி 50 ஓவர்களில் 822 ரன்களைக் குவித்து மலைக்க வைத்துள்ளது.

இதைக் கேட்டவுடன் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்று நீங்கள் நினைத்தால், அதுதான் தவறு. ஏனெனில் செக்கெண்ட் இன்னிங்ஸ் விளையாடிய மீத்தேன் லயன்ஸ் (Methane Lions) அணி வெறும் 28 ரன்களுக்கு சுருண்டது. இதனால் ஸ்கார்பியன் அணி 794 ரன்கள் வித்தியாசத்தில் நம்ப முடியாத வெற்றியைப் பதிவு செய்தது. மஸ்விங்கோ 50 ஓவர் லீக் தொடரின் கீழ் இந்தப் போட்டி நடைபெற்றது.

இது ஒரு அதிகாரப்பூர்வ 'லிஸ்ட் ஏ' போட்டியாக இருந்திருந்தால், உலக சாதனையாக மாறியிருக்கும். ஆனால் இது ஒரு அதிகாரப்பூர்வ போட்டி அல்ல. டாஸ் வென்ற ஸ்கார்பியன் அணியின் கேப்டன் பிரைஸ் மகாசா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க வீரர்களான வில்பிரட் மேட்டெண்டே மற்றும் தகுண்டா மாடெம்போ ஆரம்பம் முதலே பவுண்டரி, சிக்ஸர்களைப் பறக்கவிட்டனர்.

இவர்கள் கூட்டணியைப் பிரிக்க முடியவில்லை. 21.3 ஓவர்களில் தான் முதல் விக்கெட் விழுந்தது. அப்போது, மேட்டெண்டே ஏற்கனவே இரட்டைச் சதம் அடித்திருந்தார். அவர் 75 பந்துகளில் 23 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்களுடன் 203 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். லயன்ஸ் பந்துவீச்சாளர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம் என நினைத்த நிலையில் தான் அடுத்த வந்த வீரரும் அதிரடியைத் தொடர்ந்தார்.

3வது இறங்கிய வின்சென்ட் மோயோ 8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உடன் 39 பந்துகளில் 78 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான மாடெம்போ ஒரு படி மேலே சென்று முச்சதம் விளாசி அசத்தினார். பொதுவாக 50 ஓவர் போட்டிகளில் 300 ரன்கள் என்பது வெற்றிக்கான இலக்காகக் கருதப்படும் நிலையில், மாடெம்போ தனி ஒருவராக 143 பந்துகளில் அந்த ரன்களைக் கடந்தார்.

மாடெம்போ 302 ரன்களைக் குவித்து Retired out ஆனார். இதில் 50 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கும். கேப்டன் மகாசா 2 ரன்களில் ஆட்டமிழந்தாலும், கேப்ரியல் ஜெயா 49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 110 ரன்கள் சேர்த்தார். பாப் முட்சிங்வா 19 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

பேட்ஸ்மேன்கள் ஒருபுறம் ரன்களைக் குவிக்க, லயன்ஸ் அணி பந்துவீச்சாளர்கள் 'எக்ஸ்ட்ரா' மூலமாக 108 ரன்களை வாரி வழங்கினர். இதில் 79 வைடுகள் மற்றும் 23 நோ-பால்கள் அடங்கும். அனைத்து பந்துவீச்சாளர்களும் 100-க்கும் மேற்பட்ட ரன்களை விட்டுக் கொடுத்தனர். முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கிற்கு சாதகமாகத் தெரிந்த அதே ஆடுகளம், லயன்ஸ் அணி பேட்டிங் செய்ய வந்தபோது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாறியது.

இதனால் வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஸ்கார்பியன் அணி 794 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதிகாரப்பூர்வ 'லிஸ்ட் ஏ' சாதனையின்படி, பீகார் அணி அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக எடுத்த 574 ரன்களே அதிகபட்சமாகும். அந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 84 பந்துகளில் 190 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

news18


 


Post a Comment

0 Comments