Ticker

6/recent/ticker-posts

“டீச்சர்... டீச்சர்...” ஒட்டுமொத்த கிராமமே திரண்டு கண்ணீர் விடை.. ஆசிரியை இறுதிசடங்கில் நெகிழ்ச்சி


நாகை மாவட்டத்தில் உள்ள கிராம தொடக்க அரசு பள்ளியில் 30 ஆண்டுகளாக பணியாற்றி உயிரிழந்த ஆசிரியையின் இறுதி சடங்கை ஒட்டுமொத்த கிராம மக்களே ஒன்றிணைந்து நடத்தி கண்ணீர்மல்க விடைகொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. உயிரிழந்த ஆசிரியையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாணவர்கள் ”டீச்சர், டீச்சர்” என கதறி அழுதது நெஞ்சை ரணமாக்கியது.

நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள மணலி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் 55 வயதான வசந்தி. இவர் அங்குள்ள தெத்தி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 30 வருடங்களாக ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் படிக்கும் மாணவர்களை தன் சொந்த பிள்ளைகளை போன்று அன்போடு பாசத்தோடு நடத்தி உள்ளார்.

மேலும் தன்னிடம் படிக்கும் மாணவர்களில் பொருளாதார வசதி இல்லாதவர்களுக்கு உதவி செய்தும் வந்துள்ளார் வசந்தி டீச்சர். வசந்தி டீச்சரை இந்த கிராமத்தில் தெரியாதவர்கள் யாருமே இல்லை என்றே சொல்லலாம். இந்த கிராமத்தில் இருக்கும் பலர் இவரின் முன்னாள் மாணவர்கள் தான். இப்படி மாணவர்களிடம் எப்போதும் சிரித்த முகத்துடன் இருந்த ஆசிரியை மனதில் மட்டும் சொல்ல முடியாத சோகத்தை சுமந்துள்ளார்.

வெளியில் சிரிக்கும் பலரின் உள்ளத்தில், சொல்லப்படாத வலிகள் இருக்கும் என்பது போன்று தான் வசந்தி டீச்சரின் பின்னணியும் இருந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் உடல்நல குறைவால் இறந்தார். கணவர் இறந்த சோகத்தில் இருந்த அவருக்கு அடுத்து பேரதிர்ச்சி காத்திருந்தது. வசந்தி டீச்சர் உயிருக்கு உயிராக வளர்த்த 31 வயதான அவரது மகள் நந்தினியும் உயிரிழந்துள்ளார்.

இதனால் சோகத்தின் உச்சத்தில் இருந்த வசந்தி டீச்சர் உயிரை மாய்த்து கொள்ள முயற்சித்துள்ளார். வசந்தி டீச்சரை மீட்ட கிராம மக்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த வசந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தங்கள் கிராமத்தின் கல்வி சுடராக இருந்த வசந்தி டீச்சரின் இறுதி சடங்கை நடத்த ஒட்டுமொத்த மக்களே  முன்வந்தனர்.

இதையடுத்து வசந்தி டீச்சரின் உடலுக்கு கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். வசந்தி டீச்சரின் உடல் முன் பள்ளி மாணவர்கள் தேம்பி தேம்பி அழுததும் "டீச்சர், டீச்சர்” என கதறி அழுததும் காண்போரை கண்கலங்க செய்தது. ஒரு பள்ளிக்கூட ஆசிரியைக்கு ஒரு கிராமமே ஒன்றுகூடி வந்து கண்ணீர் விடை கொடுத்த இந்தச் சம்பவம், உண்மையான அன்புக்கு என்றுமே அழிவில்லை என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

news18


 


Post a Comment

0 Comments