
பல்வேறு சிந்தனை முகாம்களை ஒன்றிணைத்து, இலங்கை முஸ்லிம்களை ஒற்றுமைப் படுத்துவதற்காக 2022ல் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா "மன்ஹஜ்" என்ற நூலை வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து, இப்போது "அல்-மன்ஹஜுஸ் ஸஹீஹ்" என்ற நூல் கடந்த 2ம் திகதி கொழும்பு BMICHல் நடந்த விழாவின்போது வெளியிட்டு வைக்கப்பட்டு, அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் அடிப்படையில் "சரியான வழிமுறை" நூலாக அறிமுகப்படுத்தப்பட்ட வேளை, இது கொள்கை மற்றும் நடைமுறை இரண்டையும் இணைத்து, மார்க்கத்தை சரியான ஆதாரங்களுடன் பின்பற்றுவதை வலியுறுத்தும் ஒரு கையேடு என்று அறிமுகப்படுத்தப்பட்டது!
"அல்-மன்ஹஜ் ஸஹீஹ்" என்பது குர்ஆன் மற்றும் ஸுன்னாவை நபித்தோழர்களின வழிமுறைப்படி பின்பற்றும் சரியான மார்க்கக் கொள்கை மற்றும் நடைமுறை வழிமுறையை குறிப்பதாகக் கூறப்பட்டாலும், சமூக ஊடகங்களில் சிலர் முன்னுக்குப் பின் முரணான விடயங்களைப் பகிர்ந்து வருவதால், மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
"இந்நூல் யாரையும் குறை கூறுவதற்காகவோ யாரிடமும் வெறுப்பை வளர்ப்பதற்காகவோ தொகுக்கப் படவில்லை. மாறாக, நம்மை நாமே திருத்திக் கொள்ளவும் நமது அணுகு முறையைச் சீர்செய்யவும், எமது நிலைப்பாட்டை பிறருக்கு தெளிவாக விளக்கவும், புதிய வழிகேடான கொள்கைகள் நம்முள் உருவாகாமல் பாதுகாக்கவும் ஒரு வரையறுக்கப்பட்ட நெறி அமைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள நூல்" என்று மௌலவி இஸ்மாயில் ஸலபி குறிப்பிடுகின்றார்.
இதன் மூலம் சமூகத்தில் ஆரோக்கியமான அறிவுச் சூழலை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், இந்நூல் வெறும் தத்துவார்த்த விவாதம் மட்டுமல்லாது நடைமுறை வழிகாட்டியாகவும், சந்தேகங்களுக்கு பதில் அளிப்பதாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இது ஏற்பாட்டுக் குழு ஒன்றின் மூலம் தயாரிக்கப்பட்ட கூட்டு முயற்சி நூலாகும். இதனுடன் முக்கிய தொடர்புடையவரானகலாநிதி அஷ்ஷேய்க் அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி (PhD) நூல் அறிமுகம் மற்றும் விளக்க உரைகளை வழங்கியுள்ளார்.
குர்ஆன் விரிவுரை ஹதீஸ் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவரான இவர், அல்-குர்ஆனை மனனம் செய்தவருமாவார்.
இதனுடன் ஏனைய தொடர்புடையவர்களாக,
கலாநிதி முபாரக் மதனி (PhD)ஷேய்க் பஸ்ஸாம் முஸ்தபா ஸலபி போன்றவர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.
ஏகத்துவ சிந்தனை சார்ந்த இந்நூல், ஸலபி ஆதரவுக்குழுக்களுடன் தொடர்புபடுவதால், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உள்ளார்ந்த அறிவியல் சார்ந்த கொள்கை வேறுபாடுகள் மற்றும் அமைப்பு ரீதியான போட்டியிலிருந்து இந்நூலுக்கான எதிர் கருத்துக்களைக் கொண்ட பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவி வந்த வண்ணமாக இருக்கின்றது.
பல்வேறு சிந்தனை முகாம்களை ஒன்றிணைத்து, இலங்கை முஸ்லிம்களை ஒற்றுமைப் படுத்துவதற்கான வழிகாட்டியாக, அகில இலங்கை ஜம்மியதுல் உலமா "மன்ஹஜ்" என்ற நூலை 2022ல் வெளியிட்டு வைத்தது.
2026 மே 2ம் திகதி வெளியிடப்பட்ட "அல்-மன்ஹஜுஸ் ஸஹீஹ்" 'சரியான மன்ஹஜ்' என்ற சொல்லாடலுடன் வருவதால், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா இதனை தமக்கு சவாலான ஒரு நூலாகக் கருதுகிறதோ என்று கூட எண்ணத் தோன்றுகின்றது.
அதனால்தான், இந்த "அல்-மன்ஹஜுஸ் ஸஹீஹ்" என்ற நூலுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், தமது "மன்ஹஜை"ப் பின்பற்றி ஒற்றுமையாக இருக்குமாறும் ஜம்மியதுல் உலமா இலங்கை முஸ்லிம்களைக் கேட்டுக் கொண்டுள்ளது!
சமூக ஊடகங்களில் வருகின்ற பதிவுகளைப் பார்க்கின்றபோது, ஜம்மியதுல் உலமா மட்டுமன்றி வேறும் சில அமைப்புக்களும் இந்த 'சரியான மன்ஹஜ்' ஜை சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் ஒரு முயற்சியாகப் பார்ப்பதுபோல் தெரிகின்றது.
ஜம்மியதுல் உலமா வெளியிட்ட, "மன்ஹஜ்" மூலம் ஏற்பட்ட ஒற்றுமை, புதிதாக வெளியிடப்பட்டுள்ள "சரியான மன்ஹஜ்" மூலம் பிரிவினையை ஏற்படுத்திவிடுமோ என அஞ்சப்படுவதுபோலவும் தெரிகின்ற நிலையில், இதுபற்றிய விவாதங்களும், விமர்சனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக உள்ளன.
இரண்டு நூல்களையும் மக்கள் படித்து ஏற்பு - மறுப்பு வாதங்களில் ஈடுபடுவதையோ அல்லது தக்க ஆதாரங்களுடன் எது சரி, எது பிழை என்ற முடிவுக்கு வருவதையோ தவிர்த்து, இந்த விடயத்தில் அவர், இவர், எவராக இருந்தாலும் அநாகரிகமான வார்த்தைகளில் சமூக ஊடகங்களில் உலமாக்களைத் திட்டித் தீர்ப்பது ஏற்புடையதாகாது; அநாகரிகமானதும் கூட!

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments