
Delhi Capitals : 2026 ஐபிஎல் தொடரின் 62வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி தங்களது அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாகச் சென்ற இந்த ஆட்டத்தில் டெல்லி அணியின் நிதானமான பேட்டிங்கும், இறுதி நேர அதிரடியும் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஜெய்ஷ்வால் 12 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 46 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். அவரைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரல் ஆகிய இருவரின் அதிரடி ஆட்டம் டெல்லி அணியின் பந்துவீச்சை சிதறடித்தது. பராக் 26 பந்துகளில் 51 ரன்களும், ஜூரல் 40 பந்துகளில் 53 ரன்களும் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஸ்டார்க்கின் அசுர வேக பந்துவீச்சு
ராஜஸ்தான் அணி 200 ரன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெல்லி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது அசுர வேகத்தால் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். ராஜஸ்தான் அணியின் முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்திய அவர், 4 ஓவர்கள் பந்துவீசி 40 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த மாதவ் திவாரி 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது.
டெல்லியின் சேஸிங்
194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் புகுந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான துவக்கம் தந்தனர். குறிப்பாக கே. எல். ராகுல் சூப்பரானஇன்னிங்ஸ் ஆடி அணிக்கு வலுவான அடித்தளம் போட்டார். அவர் 42 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து மறுமுனையில் தூணாக நின்ற அபிஷேக் போரல் 31 பந்துகளில் 51 ரன்கள் குவித்து ரன் ரேட்டை குறையாமல் பார்த்துக்கொண்டார். இவர்களின் விக்கெட்டுகளை ராஜஸ்தான் அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் பிரிஜேஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்த முயன்றனர்.
ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் டெல்லி அணி மீது அழுத்தம் அதிகரித்தது. அந்த நேரத்தில் அக்சர் படேல் மற்றும் அசுதோஷ் சர்மா ஜோடி சேர்ந்தனர். அக்சர் படேல் அருமையாக விளையாடி 18 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். அசுதோஷ் சர்மா வெறும் 5 பந்துகளில் 18 ரன்கள் வெளுத்து வாங்க, ஆட்டத்தை 19.2 ஓவர்களிலேயே முடிவுக்குக் கொண்டு வந்தது டெல்லி. இறுதியில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தங்களது மாஸ் வெற்றியைத் தட்டிச் சென்றது.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments