
மாலை நேரம்.
வீட்டின் முன் நின்றிருந்த வண்ணப்பூக்கள் காற்றில் மெதுவாக அசைந்துகொண்டிருந்தன. அவற்றைப் பார்த்துக்கொண்டே சாந்தி வாசல் படிகளில் அமர்ந்திருந்தாள்.
அவளின் கையில் ஒரு பழைய தேநீர்க் கோப்பை.கோப்பைக்குள் தேநீர் குளிர்ந்து விட்டது.ஆனால் அவள் அதை கவனிக்கவில்லை.
அவள் கண்கள் மட்டும் எப்போதும் போல் வீட்டின் வாசலை நோக்கிக் காத்திருந்தது.
“அம்மா… நான் வந்து விட்டேன்…”
என்று கதவைத் திறந்து அவன் உள்ளே வருவது போல்ஆனால் அந்த குரல் இப்போது நினைவில் மட்டுமே இருந்தது.
நான்கு வருடம் ஆகிவிட்டது.அவளின் மகன் ராஜ் இந்த உலகை விட்டுப் போய்.
வாழ்வின் விரக்தி என்று எல்லோரும் சொன்னார்கள்.அவளுக்கு அது வெறும் வார்த்தைகள் இல்லைஅது ஒரு தாயின் உயிரில் இருந்து அறுத்தெடுக்கப் பட்ட ஒரு பகுதி.
ராஜ் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பான்.வீட்டை முழுக்க சத்தமாக்கி விடுவான்.பாசக்காரன் அதை விட ரோசக்காரன் .
அவன் இல்லாத வீட்டில் இப்போது சத்தமில்லை.அமைதி மட்டுமே.அந்த அமைதி தான் சாந்தியை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக் கொண்டிருந்தது.
உயிரைக் குடித்துக் கொண்டு இருந்தது.
அவனுடைய அறைக்குள் அவள் இன்னும் தினமும் செல்வாள்.படுக்கையை சீராக்குவாள்.கண்ணாடியைத் துடைப்பாள்.அவன் அணிந்த சட்டைகளை மடித்து மீண்டும் அலமாரியில் வைப்பாள்.
அவற்றில் இன்னும் மகனின் வாசனை இருப்பதாக நம்புவாள்.“ஏன்னடா… இவ்வளவு சீக்கிரம் போயிட்டே?”என்று சட்டையை அணைத்தபடி ஓவென அழுவாள்.
அந்த நாள் மட்டும் அவளுக்கு மறக்க முடியவில்லை.அன்று காலை அவன் வழக்கம்போல் தேநீர் குடித்திட வருவான் என்று எதிர் பார்த்து
தயாராக வைத்துக் கொண்டு காத்திருந்தாள் சாந்தி.
ஆனால் அவன் வரவில்லை .அது தான் மகனுக்கு கடைசி நாள் என்பதை அவள் அறிந்திட வில்லை.அவன் மனதில் இத்தனை வலி இருக்கும் என்று அவளுக்குத் தெரியவில்லை.
அவனது சிரிப்புக்குப் பின்னால் இவ்வளவு துக்கம் மறைந்திருந்தமையும் அவள் அறியவில்லை.“நான் கவனிக்கலையே…”அந்த ஒரு குற்ற உணர்ச்சி
தினமும் அவளைத் துரத்தியது.
ஒரு இரவு.
மழை பெய்துகொண்டிருந்தது.சாந்தி ராஜின் பழைய டைரியை எடுத்துப் புரட்டினாள்.அதில் ஒரு பக்கம் மட்டும் மடிக்கப்பட்டிருந்தது.அவள் மெதுவாகத் திறந்தாள்.
அதில் அவன் எழுதியிருந்தவை.
“அம்மா,
நீ என்னை மன்னித்து விடு.நான் உன்னை விட்டுப் போக விரும்பவில்லை ஆனால் என் மனசு தினமும் உடைஞ்சு கொண்டே இருக்கு.
நீங்க சிரிக்க வேணும்,எனக்காக அழ வேண்டாம் சோகத்தில் இருந்து மீண்டு வாழவேணும் உங்க சிரிப்பில் நானும் கூடவே இருப்பேன்.”
அந்த வரிகளைப் படித்தவுடன் சாந்தி கதறிக் கதறி அழுதாள்.“நீ இல்லாமல் நான் எப்படி சிரிப்பேன டா?” என் தங்கமே மகனே ராஜ் என்று புலம்பிக் கொண்டே அழுது தீர்த்தாள்.
அந்த இரவு தான் அவள் முதல் முறையாக மகனிடம் கோபப்பட்டாள்.“என்னை நினைக்கலையாடா? நீ...நான் உன்னை எவ்வளவு நேசித்தேன், தெரியாதா?” உனக்கு.உணராமல் போய் விட்டாயேடா மகனே என அழுதாள்.கோபம்.வேதனை.ஏக்கம்.அனைத்தும் ஒன்றாக அவளை நசுக்கியது. துடித்தாள் புளுவாக.
ஆனால் அந்த டைரியின் கடைசி வரி அவள் மனதில் நின்றது.உங்கள் சிரிப்பில் நான் இருப்பேன்.என்னும் வார்த்தையே அடுத்த நாள் காலையில் பல ஆண்டுகளுக்கு முன் செய்தவை போல் சாந்தி வீட்டின் கதவைத் திறந்து பாதை ஓரமாய் நடந்து சென்று கொண்டிருந்தாள்.
தெருவின் ஓரத்தில் ஒரு சிறுவன் விழுந்து அழுது கொண்டிருந்தான்.அவள் ஓடிச் சென்று அவனைத் தூக்கினாள்.எதுக்கு இப்படி அழுகிறாய்
என்று கேட்டாள்.
சிறுவன் பதில் கொடுக்காமலே சிரித்தான்.அந்த சிரிப்பு ஏதோ ராஜ் சிரிப்பு போல் தோன்றியது அவளுக்கு .அந்த நொடியில் சாந்தி புரிந்துகொண்டாள்.
மகனின் உடல் மட்டும் பிரிந்துவிட்டது என்னை விட்டு அவன் நினைவுகள் இன்னும் அவளோடு தான் இருக்கின்றது என்பதை உணர்ந்தாள் .
அவன் சிரிப்பு, அவன் குரல், அவன் அன்பு…அவை எவையும் இறக்கவில்லை.அந்த நாளிலிருந்து சாந்தி தினமும் ஒரு சிறிய காரியம் செய்யத் தொடங்கினாள்.
தனிமையில் தவிக்கும் குழந்தைகளுக்குப் புத்தகம் வாங்கிக் கொடுப்பாள்.யாராவது மனம் உடைந்து இருந்தால் அவர்களோடு மனம் விட்டுப் பேசுவாள்.
ஒரு தாய் போல் அவர்களை அணைத்துக்கொள்வாள்.ஒவ்வொரு அந்த நேரத்தில் தனக்குள்ளே சொல்லிக் கொள்வாள் மகனே இது அணைத்தும் உனக்காகத் தானடா ராஜ் என்று.
ஆனாலும் வலி குறையவில்லை.மகன் மீண்டும் வரவில்லை.அந்த வலியோடு வாழ கற்றுக்கொண்டாள்.சில இரவுகளில் இன்னும் அவள் அழுது புலம்புவதை நிறுத்திக் கொள்ளவில்லை.
அவன் புகைப்படத்தைத் தடவிக் கொண்டே விழி நீர் இறைப்பாள் இன்னும் நீ என் நினைவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்காயடா மகனே என்று சொல்லிக் கொள்வாள்.
ஆனால் அதற்குப் பிறகு மெதுவாக சிரிப்பாள்.ஏனெனில் இப்போது அவளுக்குத் தெரியும் பிரிவு என்பது மறைவுமில்லை நாம் நேசித்தவர்கள் நம்மை
விட்டுப் போவதுமில்லை.
அவர்கள் நம்முடைய நினைவுகளில் புதிய வடிவில் வாழ்கின்றார்கள்.சாந்தி இப்போது ஒவ்வொரு காலையிலும் ராஜ் அறை ஜன்னலைத் திறப்பாள்.
காற்று உள்ளே வரும் திரை அசையும்.அவள் கண்களை மூடி ஒரு நொடி நிற்பாள் அந்த நொடியே உள்ளுணர்வில் அவளுக்குத் தோன்றும்
அவன் வந்துவிட்டது போல்.
அம்மா என்ற அழைக்கும் குரல் கேட்பதாய் ஓர் பிரம்மை தோன்றும் அப்போது அவள் மெதுவாகச் சொல்வாள்:“நான் இன்னும் உன்னை நேசிக்கிறேன், மகனே.கண்ணீரோடும் கவலையோடும் உள்ளத்திலே பூசிக்கிறேன் தங்கமே இப்போது அந்தக் கண்ணீரில் சிறிது அமைதியும் கலந்து இருந்தது.
ஏனெனில் ஒரு தாயாகப் புரிந்துகொண்டாள்.
மகனை இழந்த வலி ஒருபோதும் மறைந்திடாது அந்த வலியோடு கூட வாழ முடியும்.அன்பு இருக்கும் வரை, பிரிவு முழுமையானது அல்ல. என்பதை.
முழுமனதோடு ஏற்றுக் கொண்டாள்.
ஆர்.எஸ் .கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments