Ticker

6/recent/ticker-posts

தவெக அமைச்சர் ராஜ்மோகனை தொடர்ந்து தாம்பரம் சரத்குமார்.. MBA படித்தாக போலி விளம்பரம்?


நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தாம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சரத் குமார். இவர் சமீபத்தில் எம்.எல்.ஏ-வாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், இவரின் கல்வி தகுதி தற்போது சமூக வலைத்தளங்களில் புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. 

தீவிர பிரச்சாரமும் 'MBA' போஸ்டர்களும்

தேர்தல் பிரச்சார விளம்பரங்களில் தான் 'MBA' படித்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்த சரத்குமார், தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் (Affidavit) 'BBA' என்று குறிப்பிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, அவர் ஒரு உயர் கல்வி கற்ற பட்டதாரி என்பதை முன்னிறுத்தி அக்கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக, அவர் 'MBA பட்டதாரி' என்று அச்சிடப்பட்ட போஸ்டர்கள் மற்றும் சமூக ஊடக விளம்பரங்கள் தாம்பரம் தொகுதி முழுவதும் பரப்பப்பட்டன.

பிரமாணப் பத்திரத்தில் BBA
ஆனால், தற்பொழுது தேர்தல் ஆணைய இணையதளத்தில் வேட்பாளர்கள் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரம் (Affidavit) பொதுமக்களின் பார்வைக்குக் கிடைத்துள்ளது. அதில், எம்.எல்.ஏ சரத்குமார் தனது கல்வித் தகுதியாக 'BBA' (Bachelor of Business Administration) என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார். முதுகலை படிப்பான MBA குறித்த எந்த விவரமும் அதில் இடம் பெறவில்லை.

மேலும் படிக்க: அதிமுக - திமுக கூட்டணி... வதந்தி தான் - திருமாவளவன் விரிவான விளக்கம்

விளம்பரத்தில் ஒரு படிப்பையும், அதிகாரப்பூர்வ ஆவணத்தில் வேறு படிப்பையும் குறிப்பிட்டிருப்பது ஏன் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மக்கள் மத்தியில் கூடுதல் தகுதி உடையவராகக் காட்டிக் கொள்ளவே இப்படிச் செய்யப்பட்டதா என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

சட்ட சிக்கல் உள்ளதா? 

சட்டப்படி, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல் அளித்தால் மட்டுமே வேட்புமனு தள்ளுபடி அல்லது பதவி நீக்கம் போன்ற நடவடிக்கைகள் பாயும். சரத்குமார் தனது பிரமாணப் பத்திரத்தில் 'BBA' என்று உண்மையான தகுதியைக் குறிப்பிட்டுள்ளதால் சட்டரீதியான சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை. எனினும், விளம்பரங்களில் காட்டிய முரண்பாடு தவெக-வின் அரசியல் நற்பெயருக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 

எழுத்து பிழை

தவெக ஆதரவாளர்கள் சிலர், "இது விளம்பரப் பதாகைகளை வடிவமைத்த போது ஏற்பட்ட தட்டச்சுப் பிழையாக இருக்கலாம் என்றும், எம்.எல்.ஏ சரத்குமார் முறையாகப் பிரமாணப் பத்திரத்தில் தனது தகுதியைச் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்" என்றும் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரம் தாம்பரம் அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதேசமயம், தவெக MLA சரத் குமார், தனது அலுவலகத்தின் முகப்பில் அவரது பெயருக்கு பின்னால் BBA என்று தான் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல் அவரது சமூக வலைத்தள பக்கங்களிலும் அவர் எங்கேயும் MBA என்று குறிப்பிட்டிருப்பதை பார்க்க முடியவில்லை. அதனால் அந்த விளம்பர பதாகையில் அது எழுத்து பிழையாகவே இருக்கும் என தெரிகிறது. 

தொடரும் தவெக கல்வி தகுதி சர்ச்சைகள் 

இதற்கு முன்னதாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ராஜ்மோகனின் கல்வித் தகுதி மற்றும் சொத்து மதிப்பு குறித்தும் இதேபோன்ற பல்வேறு விவாதங்களும், சர்ச்சைகளும் அரசியல் வட்டாரத்தில் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தச் சர்ச்சை ஓய்வதற்குள், தற்பொழுது தாம்பரம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சரத்குமார் தொடர்பான பழைய தேர்தல் விளம்பர பதாகை ஒன்றை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் திடீரென வைரலாக்க தொடங்கியுள்ளனர். "அபிடவிட்டில் BBA... போஸ்டரில் MBA-வா?" என்ற கேள்வியோடு அவரது பட்டப்படிப்பை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சியினர் சமூக ஊடகங்களில் கடுமையான விவாதங்களை கிளப்பி வருவது தவெக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

zeenews


 


Post a Comment

0 Comments