
சில வாரங்கள் செல்ல… மோகன் முதன் முறையாக மைதிலியை நேரில் பார்க்க, தனது சின்னஞ்சிறிய வாகனத்தில் சென்றான்; வீடு விருத்தாச்சலம் சிவாலயத்துக்குப் பக்கத்தில் இருந்ததால் அவனுக்கு அதனைத் தேடிக் கண்டு பிடித்துக் கொள்வதில் எவ்வித சிரமமும் இருக்கவில்லை!
எளிய பருத்திச் சேலை… அலங்காரம் எதுவுமில்லாத… அப்படியே அச்சிட்ட மாதிரி... முகநூலில் பார்த்த முகம்... ஆனாலும் அந்த முகத்தில் வெளிக்காட்டிக் கொள்ளாத சோகம் கலந்த அமைதியானதோர் புன்னகை!
அவளைப் பார்த்த அடுத்த கணமே, 'இந்தப் பெண்ணை இனிமேல் ஒருபோதும் கவலைப்பட விடக்கூடாது' என்று மனதிற்குள் முடிவு செய்து கொண்டான் மோகன்!
மைதிலியை முன்சீட்பில் அமர வைத்துக் கொண்டு, இருவரும் பேசிக் கொண்டே கடலூரிலுள்ள 'சில்வர் பீச்' வரை சென்றார்கள்.
அங்கு கடற்கரை ஓரமாக, அவர்கள் கதைத்துக் கொண்டே நடந்தார்கள்.
“நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா?” என்றான் மோகன் தயக்கத்தோடு!
“சொல்லுங்க…”
“நான் உங்களை நேசிக்க ஆரம்பிச்சது… உங்க புகைப்படத்தைக் கண்டில்ல; முகநூலில் உங்க மனசை வாசிச்சதுக்கப் புறந்தான்!"
மைதிலியின் நடை மெதுவாகியது.
“மோகன்… நான் இன்னும் என் கணவரோட நினைவுகளிலிருந்து முழுசா வெளிய வரல…”
“நான் அதை எதிர்பார்க்கல மைதிலி! அவரை மறந்துடணும்னு கூட சொல்லமாட்டேன். சில மனிதர்கள் நம்ம வாழ்க்கையிலிருந்து போனாலும்… நம்ம உள்ளத்திலிருந்து போக மாட்டாங்க... அது அவங்க வாழ்ந்த வாழ்க்க... அதன் உயிர்த் துடிப்பு...!"
அவளின் கண்களில் நீர் பெருகியது.
“அப்போ…?
“அந்த நினைவுகளுக்கு அடுத்தபடியாக… நான் உங்களிடம் கொஞ்சமாக இடம் கேட்கிறேன். அவ்வளவுதான்; அது போதும் எனக்கு!”
மைதிலி அழுதுகொண்டே, சிரித்தாள்!
பல நாட்களாக கல்லாக இறுகிப் போயிருந்த அவளது மனம், அந்த நொடியில் மெதுவாக உருகத் தொடங்கியது…!
காலைப் பொழுதில் அவர்களின் நேரடி சந்திப்புக்குப் பின், கடலூர் கடற்கரையில் ஆரம்பித்த அவர்களின் நீண்டநேர உரையாடல் ஒரு புதிய அத்தியாயமாக மாறியது!
மைதிலியை தீப்தியின் பாடசாலை அருகில் இறக்கிவிட்டுச் சென்றான் மோகன்.
மாலையாகி மகளுடன் வீடு திரும்பியதும், மொபைலில் கணவரின் புகைப்படத்தைப் பார்த்தபடி கட்டிலில் சாய்ந்த மைதிலி முகநூலுக்கான தனது அடுத்த பதிவை மனதிற்குள் பதிவிட்டுக் கொண்டாள்.
“நான் தவறு செய்றேனா…?”
அவள் தன் மனதிற்குள் ஒருமுறை கேட்டுக் கொண்டாள்; இந்த கேள்விக்கு பதில் சொல்ல அவரால் எப்படி முடியும்?
ஆனால் அவர் இறந்து பல மாதங்களுக்குப் பிறகு, கடலூர் சென்று வந்ததனால் அவளது மனம் ஒரு சிறிய நிம்மதியை மட்டும் உணர்ந்தது!
(தொடரும்)
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments