Ticker

6/recent/ticker-posts

மைதிலி என்னைக் காதலி!=4


மோகன் தனது அறையில்... கட்டிலில் சாய்ந்ததபடி தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான்!

ஆறுமுழச் சேலையணிந்த பெண் ஒருத்தி செய்தி வாசித்துக் கொண்டிருந்தாள்;

'ஹோர்மூஸ்' ஜலசந்தியில் கப்பல்கள் போரில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதும், பந்தர் அப்பாஸில் அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ட்ரோன்  நெருங்கி வீழ்வதும் திரையில் மாறி மாறி வந்து கொண்டிருந்தன!

மைதிலியின் வாழ்க்கையில் நான் உண்மையில் இடம் பெறுவேனா…? 

அல்லது அவளது தனிமைக்கான ஒரு தற்காலிக நிழலாக இருக்கப் போகின்றேனா?

இவ்வாறான கேள்விகள் மோகனின் மனதில் அடிக்கடி வந்து போகலாயின.

அடுத்த சில நாட்கள் மைதிலி கொஞ்சம் தூரமானதை  அவனால் உணர முடிந்தது!

அழைப்புகள் குறைந்தன; குறுஞ் செய்திகளும் தாமதமாயின; முகநூலிலும் அவளின் பதிவுகள் வரவில்லை!

மோகனுக்கு ஏதோ ஒன்று புரிந்தது!

அவள் போராடிக்கொண்டிருக்கின்றாள்; தன்னோடும்… தன் நினைவுகளோடும்… சமூகம் உருவாக்கிய குற்ற உணர்வோடும்!

ஓர் இரவு... தாங்க முடியாமல் அவன் அழைத்தான்.

“மைதிலி… எல்லாம் சரியா?”

அவள் சில நொடிகள் பேசவில்லை.

“மோகன்… நாம இவ்வளவு நெருக்கமா இருக்கக் கூடாதுன்னு தோணுது…”

அவன் இதயம் சற்றே உடைந்தது; 
ஆனால் குரலை சரஸ்வத் படுத்திக் கொண்டான்.

“ஏன் அப்படி சொல்றீங்க?”

“என்னைப்பத்தி எல்லாரும் ஏற்கனவே பேசுறாங்க. ‘கணவன் இறந்ததுக்குப் பிறகும் இவ்வளவு சீக்கிரமா யாரோடோ பழகறாளாம்’ன்னு…” அவளின் குரல் நடுங்கியது.

“நான் யாரையும் ஏமாத்த விரும்பல்ல மோகன். அவரோட நினைவுகளையும் விட விரும்பல்ல...”

மோகன் ஆழமாக மூச்சை இழுத்தான்.

“ஒரு விஷயம் கேட்கட்டுமா மைதிலி?”

“ம்…”

“உங்களுக்கு மீண்டும் சிரிக்க உரிமை இல்லையா…?”

அவள் அமைதியாகிவிட்டாள்.

“உங்க வாழ்க்கை முடிஞ்சுடுச்சுன்னு யார் தீர்மானிச்சாங்க? ஒருத்தரை இழந்த துக்கத்தோட வாழ்றது காதல் என்றால்… மீண்டும் வாழ முயற்சிப்பதும் ஒருவகைக் காதல்தான்.”

அந்த வார்த்தைகள் மட்டும் அவளின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தன!

(தொடரும்)

 


Post a Comment

0 Comments