
சில நாட்களுக்குப் பிறகு…
மைதிலி தனது மகள் தீப்தியுடன் சிவாலயத்துக்கு வந்திருந்தாள்.
தூரத்தில் தீப்தி அங்கு வந்திருந்த சின்னஞ் சிறுசுகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.
அப்போது மோகன் மைதிலியிடம் வந்தான்.
விளையாட்டை இடை நிறுத்திவிட்டு
ஓடி வந்த தீப்தி,
“அம்மா… இவருதான் மோகன் அங்கிளா?” ஆர்வமாகக் கேட்டாள்; மைதிலி திகைத்தாள்.
“உனக்கு எப்படித் தெரியும்?”
“நீங்க தினமும்தான் பேசுறீங்களே!”
மகள் நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தாள்; மோகனின் கண்கள் ஈரமானது.
தீப்தி ஓடி வந்து அவன் கையைப் பிடித்தாள்.
“அங்கிள்… அம்மா இப்போ முன்ன மாதிரி அழவே மாட்டாங்க. நீங்க பேசின நாள்ல இருந்து சிரிக்கிறாங்க.”
அந்த ஒரு வரி மோகனின் உள்ளத்தை உலுக்கியது. மைதிலி முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டாள்; அவளது கண்கள் கண்ணீரால் நிரம்பின. மோகன் மெதுவாக அவளருகே போய், அவளது முகத்தைத் தன் பக்கம் திருப்பினான். தன் விரல்கள் கொண்டு அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டான்.
“நான் உங்க வாழ்க்கையில யாரோ ஒருத்தராக வரல மைதிலி… நீங்க மீண்டும் வாழ்க்கையை நம்புறதுக்கான காரணமா இருக்கணும்னுதான் எனக்கு ஆச.”
மைதிலி அவனை நேராகப் பார்த்தாள்.
“நான் இன்னும் பயப்படுறேன் மோகன்…”
“நான் காத்திருக்கிறேன்; உங்க கடந்த காலத்தோட போட்டி போட நான் வரல. உங்க எதிர்காலத்துக்கு துணை நிற்க வந்திருக்கேன்…”
அந்த நொடி, பல வருடங்களாக இருளில் சிக்கியிருந்த மைதிலியின் மனதிற்குள், மெதுவாக ஒரு வெளிச்சம் பிறந்தது போலிருந்தது!
அடுத்த நாள் காலை…
பல நாட்களுக்குப் பிறகு மைதிலி கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்தாள்!
முகத்தில் இன்னும் சோகத்தின் தடங்கள் இருந்தாலும், எங்கோ ஓர் உயிர்ப்பும் இருந்தது!
அதை அவள் உணர்ந்தாள்.
“நான் மீண்டும் சந்தோஷமா இருக்க முயற்சிக்கிறேனா…?”
அந்த எண்ணமே அவளுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தியது.
அந்த நேரத்தில் தீப்தி ஓடிவந்து.... அவளைப் பின்புறமிருந்து கட்டிப்பிடித்தாள்.
“அம்மா… இன்று நீங்க அழகா இருக்கீங்க.”
மைதிலி சிரித்தாள்.
“எப்பவும் இப்படித்தானே இருப்பேன்?”
“இல்ல…” குழந்தை தலையசைத்தது.
“இன்று கொஞ்சம் சிரிச்ச மாதிரி இருக்கீங்க.”
அந்த வார்த்தை அவளது இதயத்தை மெதுவாக வருடியது!
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments