Ticker

6/recent/ticker-posts

மைதிலி என்னைக் காதலி! =6


மோகன் சில நாட்களாக மறுபடியும் மைதிலியிடமிருந்து எந்தச் செய்தியும் வராததால் அமைதி இழந்திருந்தான். எழுதி எழுதி அழித்த பல குறுஞ்செய்திகளுக்குப் பிறகு, இறுதியில் ஒரே ஒரு வரியை மட்டும் அனுப்பினான்.

“சாப்பிட்டீங்களா…?”

சில நிமிடங்களில் பதில் வந்தது.

“ம். நீங்க?”

அந்த ஒரு “ம்” கூட அவனுக்குள் ஒரு மகிழ்ச்சியை விதைத்தது.

“நான் இன்னும் இல்ல. வேலை முடிஞ்சு சிவாலயத்தைக் கடந்து, பாதையோரமாக நடந்து கொண்டிருக்கிறேன்.”

“நேரத்துக்கு சாப்பிடணும் மோகன்!” அவள் பதிவிட்டாள்.

அந்தக் குறுஞ்செய்தியைப் பார்த்தவுடன் மோகன் நீண்ட நேரம் மொபைலைப் பார்த்தபடி... சிரித்துக்கொண்டே நடந்தான்.

அவன் வாழ்க்கையில் முதல் முறையாக,
'யாரோ ஒருவர் தன்னை கவனிக்கிறார்' என்ற உணர்வு வந்தது!

*
அந்த இரவு மழை பெய்து கொண்டிருந்தது; மின்சாரம் தடைப்பட்டதால் வீடு முழுக்க இருள் சூழ்ந்திருந்தது; தீப்தி தூங்கிவிட்டாள்.

ஜன்னலருகே நின்றபடி மழையை பார்த்துக்கொண்டிருந்த மைதிலியின் கைபேசி ஒலித்தது.

“ஹலோ…”
“பயமா இருக்கா?” மறுமுனையிலிருந்து மோகன் கேட்டான்.

அவள் சிரித்தாள்.

"..."

“மழைக்கா? இல்ல… தனிமைக்கா…”
அந்தக் கேள்வி அவளை சில விநாடிகள் அமைதியாக்கியது.

“பயம்... முன்னாடி இருந்தது!” என்றாள் மெதுவாக.

“இப்போ…?"

"தெரியல.”

“ஏன்?”

“யாரோ ஒருத்தர் இருக்கார்னு தோணுது.”
மோகனின் கண்கள் மெதுவாக மூடியன.
அந்த ஒரு வரிக்காகவே அவன் இத்தனை நாள் காத்திருந்தான் போல.

“மைதிலி…”

“ம்?”

“ஒருநாள்… உங்க வீட்டின் வாசலில் நின்னு, ‘இனிமேல் நீங்க தனியா இல்ல’ன்னு உரத்துச் சொல்லணும்னு ஆசை.”

அவளது மூச்சு தடுக்கப்பட்டது.

வெளியில் இடியுடன் மழை கொட்டிக்கொண்டிருந்தது.
ஆனால் அவளது உள்ளம் மெதுமெதுவாக உருகிக்கொண்டிருந்தது!

“நீங்க ரொம்ப நல்லவங்க மோகன்…”

“அது ஆபத்தான வார்த்தை,” என்றவன், “பெண்கள் அப்படி சொல்ல ஆரம்பிச்சா… அடுத்தது காதல்தான்.”

மைதிலி நீண்ட நாட்களுக்கு பிறகு மனம்விட்டு சிரித்தாள்.

அந்த சிரிப்பின் ஒலி, தொலைபேசியின் மறுபுறம் இருந்த மோகனின் தனிமையான அறையையே உயிரோட்டமாக்கியது.
*
ஆனால்… அந்த மகிழ்ச்சி.   நீண்ட தூரம் அப்படியே நிலைத்திருக்கவில்லை;
அடுத்த வாரம் மைதிலியின் மாமியாரின் உறவுக்காரர் சிலர் மைதிலி வீட்டிற்கு வந்திருந்தார்கள்.

அவர்களில் ஒருத்தி,

“என்ன மைதிலி… இப்போ ரொம்ப போன் பேசுறயாம்?” முகத்தைச் சுளித்தபடி சற்று நக்கலாகக் கேட்டாள்.

மைதிலியின் முகம் உடனே மாறியது.

“அப்படி எதுவும் இல்லக்கா…”

“ஊர்ல எல்லாம் பேச ஆரம்பிச்சாச்சு.
குழந்தை இருக்கிற பெண் கொஞ்சம் அடக்கமா இருக்கணுமில்ல.."

அந்த வார்த்தைகள் கத்தியாய் குத்தின.
தீப்தி அருகில் இருந்தாள். அவள் குழப்பமாகத் தன் அம்மாவைப் பார்த்தாள்.
மைதிலி எதுவும் பேசவில்லை.

ஆனால் அந்த இரவு முழுவதும் அழுதாள்.

(தொடரும்)


 


Post a Comment

0 Comments