ரயில் நிலையத்தின் மூன்றாவது நடைமேடையில் நான் அமர்ந்திருந்தேன். மாலை சூரியன் மெதுவாக மறைந்து கொண்டிருந்தான். மக்கள் கூட்டம் இருந்தும், என் மனம் மட்டும் வெறுமையாக இருந்தது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் அவளை முதன்முதலாக பார்த்தேன்.

அவள் பெயர் நந்தினி.

அன்று மழை பெய்துக் கொண்டிருந்தது. அனைவரும் ஓடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவள் மட்டும் அமைதியாக நின்று மழையை ரசித்துக் கொண்டிருந்தாள். அந்த அமைதிதான் முதலில் என்னைக் கவர்ந்தது.

நான் பேசுபவன். அவள் கேட்பவள்.

நான் சிரிப்பவன். அவள் புன்னகைப்பவள்.

நான் அவசரப்படுபவன். அவள் பொறுமையாக இருப்பவள்.

நட்பு தொடங்கியது.

அதன்பிறகு தினமும் சந்திப்பு. தினமும் உரையாடல். வாழ்க்கை அழகாக நகர்ந்தது.

ஒருநாள் நான் கேட்டேன்.

"நம்ம நட்பு எப்போதும் இப்படித்தானே இருக்கும்?"

அவள் பதில் சொல்லவில்லை.சிரித்தாள்.

அந்தச் சிரிப்பில் இருந்த பதிலை நான் அப்போது புரிந்து கொள்ளவில்லை.

காலம் நகர்ந்தது.

என் மனதில் காதல் மலர்ந்தது. ஆனால் சொல்லத் துணிவு வரவில்லை.

ஒரு மாலை அவளுடன் கடற்கரையில் நடந்தேன்.

அலைகள் கரையை முத்தமிட்டுக் கொண்டிருந்தன.

"நந்தினி..." என்று அழைத்தேன்.

"ம்..." என்றாள்.

"நான் ஒரு விஷயம் சொல்லணும்."

அவள் என்னைப் பார்த்தாள்.

ஆனால் அந்த நொடியில் என் தைரியம் கரைந்து போய்விட்டது.

"ஒன்றுமில்லை..." என்றேன்.

அவள் மீண்டும் சிரித்தாள்.

அந்தச் சிரிப்பு என்னை மன்னித்தது போல இருந்தது.

சில மாதங்கள் கழித்து அவளது வீட்டிலிருந்து திருமணப் பேச்சு வந்தது.

அன்று அவள் என்னைச் சந்திக்க வந்தாள்.

நாங்கள் இருவரும் பூங்காவில் அமர்ந்திருந்தோம்.

பல நிமிடங்கள் யாரும் பேசவில்லை.

அவள் ஏதோ சொல்ல விரும்பினாள்.

நானும் ஏதோ சொல்ல விரும்பினேன்.

ஆனால் வார்த்தைகள் இருவரையும் விட்டு விலகி நின்றன.

இறுதியில் அவள் மெதுவாகக் கேட்டாள்.

"நீ சந்தோஷமா இருப்பியா?"

அந்தக் கேள்விக்கு நான் சிரித்தேன்.

"நீ சந்தோஷமா இருந்தா போதும்."

அதுதான் நான் சொன்ன கடைசி வாக்கியம்.

அவள் தலை குனிந்தாள்.

அவளது கண்களில் நீர் மின்னியது.

என் கண்களிலும்.

ஆனால் யாரும் அழவில்லை.

யாரும் காதலை ஒப்புக்கொள்ளவில்லை.

யாரும் தடுக்கவில்லை.

அந்த நாளில் பேசாத வார்த்தைகள்தான் எங்கள் வாழ்க்கையை மாற்றின.

அவள் திருமணம் செய்து கொண்டாள்.

நான் என் வாழ்க்கையைத் தொடர்ந்தேன்.

ஆண்டுகள் கடந்தன.

ஆனால் சில நினைவுகளுக்கு வயதாகாது.

இன்று மீண்டும் அதே ரயில் நிலையத்தில் அமர்ந்திருக்கிறேன்.

கூட்டத்திற்குள் ஒரு முகம் தெரிந்தது.

அவள்தான்.

அவளும் என்னைக் கண்டாள்.

நாங்கள் ஒருவரை ஒருவர் நோக்கி நடந்தோம்.

"எப்படி இருக்கிறாய்?" என்றேன்.

"நன்றாக இருக்கிறேன்," என்றாள்.

அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

சில நொடிகள் அமைதி.

ஆனால் அந்த அமைதிக்குள் ஐந்து ஆண்டுகளின் நினைவுகள் பேசின.

சொல்லப்படாத காதல் பேசின.

கேட்கப்படாத கேள்விகள் பேசின.

கிடைக்காத வாழ்க்கை பேசின.

ரயில் வந்தது.

அவள் ஏறினாள்.

புறப்படுவதற்கு முன் ஜன்னல் வழியாக என்னைப் பார்த்தாள்.

அந்தப் பார்வையில் ஒரு புன்னகை.

ஒரு நன்றி.

ஒரு வலி.

ஒரு விடைபெறல்.

எல்லாமே இருந்தது.

ரயில் நகர்ந்தது.

நான் அங்கேயே நின்றேன்.

அப்போது எனக்கு ஒரு உண்மை புரிந்தது.

சில காதல்கள் வார்த்தைகளால் வாழ்வதில்லை.

சில உறவுகள் பெயரில்லாமல் நிலைத்து நிற்கின்றன.

சில மௌனங்கள் ஆயிரம் வார்த்தைகளை விட அதிகமாகப் பேசுகின்றன.

அந்த மௌனத்தின் மொழியை ஒருமுறை புரிந்தவர்கள், வாழ்நாள் முழுவதும் அதை மறக்க முடியாது.

அதனால்தான் இன்று வரை என் நினைவுகளில் அவள் பேசிக் கொண்டே இருக்கிறாள்.

வார்த்தைகளால் அல்ல...

மௌனத்தால்.

ஆர்.எஸ் .கலா