
நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகள், குடிநுழைவு விதிமீறல்களுக்கு எதிராக தீவிர அமலாக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் குடிநுழைவுத் துறை, இந்த ஆண்டு மே 31 ஆம் தேதி வரையில் 30,801 வெளிநாட்டவர்களைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 2,324 பேர் தங்களது குடிநுழைவு அனுமதிச் சீட்டுகளை தவறாகப் பயன்படுத்தியதுடன், மலேசியாவிற்குள் நுழைந்ததற்கான உண்மையான நோக்கத்திற்கு முரணான வேலை, வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது என்று குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் ஜக்காரியா ஷாபான் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் உத்தரவின்படி, அனுமதிச் சீட்டின் நிபந்தனைகளை மீறி செயல்படும் வெளிநாட்டவர்கள், உரிய அனுமதியின்றி வேலை அல்லது வணிகம் மேற்கொள்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"சட்ட மீறல்களுக்கு இனி இடமில்லை"
சட்டத்தை மீறுபவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதற்காக, குடிநுழைவுத் துறை தனது அமலாக்க நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதோடு, பல்வேறு அமைச்சுகள், அமலாக்க அமைப்புகள், உள்ளூர் அதிகாரிகளுடன் மூலோபாய ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி வருவதாக ஜக்காரியா தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அமலாக்க கண்காணிப்பு பிரிவு (Enforcement Inspectorate) அமைத்தல், அதிக குற்றச்செயல் பதிவான பகுதிகளில் இலக்கு சோதனைகள் நடத்தல், குடிநுழைவு சட்டங்களை மீறும் முதலாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தல், பிற அமலாக்க அமைப்புகளுடன் இணைந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தல் போன்ற முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், குடிநுழைவுச் சட்டங்களை மீறும் வெளிநாட்டவர்களுக்கும் அவர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதை முதன்மை இலக்காகக் கொண்டு, வருடாந்திர செயல்திறன் குறியீடுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சட்ட அனுமதியை ஒரு நோக்கத்திற்காகப் பெற்றுவிட்டு வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவது இனி கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் என குடிநுழைவுத் துறை எச்சரித்துள்ளது.
நாட்டின் குடிநுழைவு அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதோடு, பொது ஒழுங்கையும் நியாயமான பொருளாதார சூழலையும் நிலைநிறுத்தும் முயற்சியில் துறை உறுதியாக இருப்பதாக ஜக்காரியா ஷாபான் வலியுறுத்தினார்
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments