
ஹொரணை - படகொட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தும், அதில் சிக்கிய முதியவர்களின் அவல நிலையும் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை நேரில் பார்த்த அந்த இல்லத்தில் இருந்த வயோதிப பெண் ஒருவர் ஊடகங்களுக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அதன்போது, குறித்த நிறுவனத்தின் கடுமையான பாதுகாப்பற்ற தன்மையையும் ஊழியர்களின் பொறுப்பற்ற நடத்தையையும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிப்புறமாக பூட்டப்பட்ட கதவுகள்..
கடந்த காலத்தில் நோயாளி ஒருவர் இல்லத்தில் இருந்து தப்பிய ஓடிய சம்பவத்தைத் தொடர்ந்து, அவசர கால வழிகள் ஏதுமின்றி முதியவர்களை அறைகளுக்குள் வெளிப்புறமாக பூட்டி வைப்பது அங்கு வழக்கமான ஒரு நடைமுறையாக இருந்துள்ளது.
சம்பவம் நடந்த நாளன்று இரவு, வெசாக் பந்தல் பற்றிய ஒலிபெருக்கி அறிவிப்பைக் கேட்டுவிட்டு முதியவர்கள் தங்களது வார்டுகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர்.
அந்த நேரத்தில் பெண் பிரிவை சந்தமாலி என்ற ஊழியரும், ஆண்கள் பிரிவை அவரது கணவரும் சாவியால் வெளிப்புறமாக பூட்டிவிட்டு மற்ற ஊழியர்களுடன் சமைப்பதற்காகச் சென்றதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது, ஆண்கள் பிரிவில் இருந்த மெத்தைகள் குவியலிலிருந்து திடீரென தீ பரவத் தொடங்கியதை ஒரு முதியவர் பார்த்து மற்றவர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
தப்பிக்க முடியாத நிலை
தீ வேகமாகப் பரவுவதைக் கண்டு மரண பயத்தில் முதியவர்கள் அனைவரும் அலறியபடி கதவு அருகே சென்றபோது, இருபுறமும் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் அவர்களால் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தத் கொடூரமான தருணத்தில், அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய ஊழியர்கள் கதவுகளைத் திறக்க முயற்சிக்காமல், சாவிகளுடன் பீதியடைந்து சம்பவ இடத்தை விட்டு ஓடியுள்ளனர்.
இந்த அலட்சியத்தின் உச்சகட்டமாக, இரண்டு முதியவர்கள் தங்களது படுக்கைகளுடன் சேர்த்துப் பிணைக்கப்பட்டிருந்ததால் அவர்களால் நகரக் கூட முடியாத நிலை ஏற்பட்டு தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தீயைக் கட்டுப்படுத்த கிராம மக்கள் ஓடி வந்தபோதிலும், இல்லத்தின் பிரதான வாயிலும் பூட்டப்பட்டிருந்ததால் அவர்களாலும் உடனடியாக உள்ளே நுழைய முடியவில்லை என குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின்னர், எப்படியோ ஒரு கதவு திறக்கப்பட்டதன் மூலமே மற்ற முதியவர்கள் தப்பித்துத் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது என அப்பெண் தெரிவித்துள்ளார்.
tamilwin

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments