Ticker

6/recent/ticker-posts

“மேகதாது அணைக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை பார்க்கவில்லை” – முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்


Mekedatu Dam | மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பதில் கொடுத்துள்ளார்.

மேகதாது அணைக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமையாக பார்க்கவில்லை என கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கொண்டு வந்த அரசினர் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது குறித்து கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பதில் கொடுத்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக சட்டமன்றத்தில் அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், அரசியல் கட்சிகளுக்கு இடையே கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், மனசாட்சியுள்ள மக்களாட்சியுடன் செயல்படுவதே தங்கள் நோக்கம் என்று கூறினார்.

நதிநீரை பாதுகாத்தே ஆக வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்றும், அதன் அடிப்படையில் இந்த தீர்மானத்திற்கு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமலும் படுகை மாநிலங்களின் அனுமதியைப் பெறாமலும் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேகதாது பகுதியில் அணை கட்டுவதை ஏற்க முடியாது என்றும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கூறினார்.

மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட எந்தவொரு அனுமதியையும் மத்திய அரசு வழங்கக் கூடாது என்றும் தனித்தீர்மானத்தின் மூலம் வலியுறுத்துவதாக முதலமைச்சர் தெரிவித்தார். கர்நாடகா சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ ஒப்புதல் அளிக்கவோ கூடாது என்றும் மத்திய நீர் ஆணையத்துக்கு கோருவதாக முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், “மேகதாது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நான் முழுமையாக பார்க்கவில்லை. அதனை முழுமையாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். நீங்கள் சொல்வதை மட்டும் வைத்துக்கொண்டு என்னால் எந்தக் கருத்தையும் சொல்ல முடியாது. அவர்களின் நிலைப்பாட்டை பரிசீலித்த பிறகு, அது குறித்து எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

news18


 


Post a Comment

0 Comments