
இதயத்தை காக்கவும், இதய நோய்களில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ளவும் நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும், எப்படியெல்லாம் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது என்று இங்கே பார்க்கலாம் வாங்க!
ஒரு காலத்தில், இதய நோய் என்பது வயதானவர்களுக்கு மட்டுமேயான ஒரு பிரச்சனை என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது, இளைஞர்களும் பதின்ம வயதினரும் கூட பாதிக்கப்படுகின்றனர். சமீப காலங்களில், 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களிடையே திடீர் மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அன்றாட வாழ்வில் நாம் செய்யும் ஒரு சிறிய அலட்சியம் கூட, நம்மை இதய நோய்களின் அபாயத்திற்கு உள்ளாக்கக்கூடும். இதயத்தை காக்கவும், இதய நோய்களில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ளவும் நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும், எப்படியெல்லாம் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதுபற்றி இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம் வாங்க!
ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த இதய நோய் நிபுணரான டாக்டர் சந்தோஷ் குப்தாவின் கூற்றுப்படி, “வாழ்க்கை முறை, உணவுமுறை மற்றும் மன அழுத்தம் காரணமாக இளைஞர்களிடையே இதய நோய்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றைத் தடுக்க, சமச்சீரான உணவு, வழக்கமான உடல் பரிசோதனைகள் மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்தல் ஆகியவை மிகவும் முக்கியமானவை”. இதுபற்றி மேலும் விரிவாக மருத்துவர் பகிர்ந்தவற்றை இங்கே பார்க்கலாம்.
மாரடைப்பு என்றால் என்ன? மாரடைப்பு என்பது இதயத்தின் மின் அமைப்பு திடீரென செயலிழப்பதாகும். இதனால் இதயம் துடிப்பது நின்றுவிடுகிறது. ரத்த ஓட்டம் நின்றுவிடுகிறது. உடனடியாக சிபிஆர் (CPR) அல்லது சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சில நிமிடங்களிலேயே மரணம் ஏற்படலாம். சரி, இனி இளைஞர்களிடையே இதய நோய் ஏன் அதிகரித்து வருகிறது? குறிப்பாக ஏன் மாரடைப்பு அதிகரிக்கிறது என்பது பற்றி மருத்துவர் பகிர்ந்தவற்றை பார்க்கலாம்.
தூக்கமின்மை: போதுமான தூக்கமின்மை உடலில் மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கிறது. இது இதயத் துடிப்பில் சீர்குலைவை ஏற்படுத்துகிறது. எனவே, உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்ல தூக்கமே சிறந்தது. தினமும் 7-8 மணி நேரம் தூங்குவது மிகவும் அவசியம்.
புகைப்பிடித்தல் - மதுப்பழக்கம்: அளவுக்கு அதிகமாகப் புகைப்பிடித்தலும் மது அருந்துதலும் ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்கின்றன. இது இதய நோய் ஏற்படும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. எனவே புகைப்பிடிப்பதையும் மது அருந்துவதையும் முற்றிலுமாக நிறுத்துங்கள். அதுவே உங்கள் உடல் ஆரோக்கியத்தை நல்ல நிலையில் வைத்திருக்கும்.
வேலை அழுத்தம்: நவீன வாழ்க்கை முறையில் மன அழுத்தமும் வேலை நெருக்கடியும் சாதாரணமாகக் காணப்படுகின்றன. இந்த அழுத்தங்கள் இதயத்தின் செயல்பாட்டைப் பாதிக்கின்றன. அவை இதயத் துடிப்பில் இயல்புக்கு மாறான நிலைகளுக்கு வழிவகுக்கலாம். எனவே மன அழுத்தத்தைக் குறைக்க, தினமும் தியானம் அல்லது யோகா பயிற்சி செய்யுங்கள்.
மோசமான உணவுமுறை: துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் போன்றவை ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரித்து, ரத்த நாளங்களை அடைக்கின்றன. இது மாரடைப்பு ஏற்படுவதற்கான ஒரு முக்கிய காரணமாகும். ஆகவே சமச்சீரான உணவை உண்ணுங்கள். புதிய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
பரம்பரை: குடும்பத்தில் யாருக்காவது இதய நோய் வரலாறு இருந்தால், அவர்களுக்கும் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கட்டுப்படுத்தப்படாத உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை இதய நோய்க்கான முக்கிய காரணங்களாகும். ஆகவே பரம்பரையாக இதயப் பிரச்சனை அபாயம் இருப்பவர்கள், முன்னெச்சரிக்கையோடு இருங்கள்.
இதய ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான சில முக்கிய ஆலோசனைகள்: ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இதயப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். குறிப்பாக, தவறாமல் உடற்பயிற்சி செய்பவர்கள் அல்லது குடும்பத்தில் இதய நோய் வரலாறு உள்ளவர்கள் இந்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். இது இதயம் தொடர்பான நோய்களைத் தடுப்பதற்கான ஒரு நல்ல வழி. உங்கள் இதய ஆரோக்கியத்தில் விழிப்புடன் இருப்பது பல விபத்துகளைத் தடுக்க உதவும். உங்கள் ஆரோக்கியமே உங்கள் செல்வம்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments