Ticker

6/recent/ticker-posts

“பகலில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள்.. இரவில் மின்வெட்டு..” : TVK ஆட்சியின் சாதனை - முரசொலி காட்டம்!


முரசொலி தலையங்கம்!

மின்வெட்டுத் துறை நிர்மல் குமார் !

‘வெறும் வாய் மட்டும் தான், செயலில் சுத்த வேஸ்ட்' என்று சொல்லும் நிலையில் தான் விஜய் ஆட்சி இருக்கிறது. அதிலும் குறிப்பாக மின்சாரத் துறையின் பெயரை 'மின்வெட்டுத் துறை' என்றே மாற்றிவிடலாம். அதற்கு அமைச்சராக இருக்கும் நிர்மல்குமார், கலர் கலராக கப்ஸா விடுகிறாரே தவிர தீர்வைக் காணும் திறமை படைத்தவராக இல்லை.

தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாடு இருளில் மூழ்கி விட்டது. வாக்களித்த மக்களை மின்வெட்டின் மூலமாக நிம்மதியை வெட்டு வெட்டென வெட்டி வருகிறது த.வெ.க. ஆட்சி. இதற்கு பொறுப்பேற்க வேண்டிய அமைச்சர் நிர்மல்குமார் பேட்டிகள் வாரந்தோறும் மாறிக் கொண்டே இருக்கின்றன.

பகலில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள். இரவில் மின்வெட்டு. இதுதான் த.வெ.க. ஆட்சி அமைந்தது முதல் தமிழ்நாட்டில் பார்க்கும் காட்சியாகும்.

இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்கிறார்கள். ஆண்களும் பெண்களும் முதியோரும் குழந்தைகளும் சாலைக்கு வந்துவிடுகிறார்கள். சாலை மறியல் நடக்காத நாளே இல்லை. கைக்குழந்தைகளோடு தாய்மார்கள் வருகிறார்கள் வீதிக்கு. கர்ப்பிணித் தாய்மார்கள் வேதனையோடு வாசல்களில் நிற்கிறார்கள். மருத்துவமனைகளிலேயே மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

பள்ளிகளில் மின்சாரம் இல்லாததால் விடுமுறைகள் விடப்படுகின்றன. அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே மின்வெட்டு. நீலகிரி மாவட்டத்தில் மின்வெட்டு காரணமாக, வனவிலங்குகள் ஊருக்குள் வந்துவிடுகின்றன. இதுதான் இன்றைய தமிழ்நாடு. தலைநகர் சென்னையிலும், சென்னையைச் சுற்றிலும் அதிகப்படியான மின்வெட்டு. முதலமைச்சரின் தொகுதியான பெரம்பூரும் இருளில் மூழ்கி விடுகிறது. இருபது நாட்களுக்கும் மேலாக மின்வெட்டு இருக்கும் பகுதியாக பெரம்பூர் இருக்கிறது. தினமும் மக்கள் அங்கு சாலை மறியல் செய்கிறார்கள். மின் வாரிய அலுவலகத்தை முற்றுகை இடுகிறார்கள். மின்வாரிய அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு, 'மின்சாரம் வந்தால் தான் போவோம்' என்று முழக்கமிடுகிறார்கள்.

சில இடங்களில் மின்சார வாரிய அலுவலகத்தையே மக்கள் பூட்டி விட்டார்கள். மின்சாரம் இல்லாததால் இரண்டு தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது முதலமைச்சர் தொகுதியில். ‘போராட்டம் நடத்த மக்களை சிலர் தூண்டுகிறார்கள்' என்கிறார் அமைச்சர் நிர்மல்குமார். முதலமைச்சர் தொகுதியில் அவருக்கு எதிராக போராட்டம் நடக்கின்றது என்றால் அவரது செல்வாக்கு அதற்குள் சரிந்துவிட்டதா? ஒரு மாதத்துக்குள் விஜய் செல்வாக்கு சரிந்துவிட்டதா?

ஆனால் நிர்மல்குமார் என்ன சொல்கிறார்? வாரம் தோறும் ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துச் சொல்கிறார்.

* மின்வெட்டே இல்லை என்றார் முதல்வாரம்.

* எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே செய்கிறார்கள் என்றார் இரண்டாவது வாரம்.

* மின்வாரிய அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் திருடு போய்விட்டது என்றார் மூன்றாவது வாரம்.

* பியூஸ் கேரியரை யாரோ எடுத்துச் சென்றுவிட்டார்கள் என்றார் நான்காவது வாரம்.

- ‘காரணம் சொல்பவர், காரியம் செய்யமாட்டார்' என்பது பழமொழி. அதுதான் நிர்மல்குமார். 'கரண்ட் தரமாட்டோம்' என்பதுதான் அவர் சொல்ல வரும் பதில் ஆகும். ஒரு மாத காலமாக நடக்கும் மின்வெட்டை தடுக்க வக்கோ, வகையோ, திராணியோ இல்லை. ஆனால் கூச்சமில்லாமல் பேட்டி கொடுக்க வந்துவிடுகிறார் அமைச்சர் நிர்மல்குமார்.

ஷாஜகான் என்று ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் ஒரு காரணத்தைச் சொல்லி இருக்கிறார். ‘பலமா காத்து அடிக்கிறது. அதனால் தான் மின் தடை ஏற்படுகிறது' என்று சொல்லி இருக்கிறார். “காற்றே நீ அடிக்க வேண்டாம்” என்று உங்கள் முதலமைச்சரை பாடச் சொல்ல வேண்டியது தானே! இந்த மாதிரியான அறிவுக்குஞ்சுகளை எல்லாம் அமைச்சர்களாக பார்க்க வேண்டியது வந்துவிட்டதே தமிழ்நாட்டுக்கு!

“தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவது உண்மை தான்” என்று மின்வாரியம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உண்மை தான் என்று சொல்ல மின்வாரியம் தேவையில்லை. மக்கள் போராட்டங்களே அது உண்மை தான் என்பதால் தான் நடக்கின்றன. அந்த மின்வெட்டை எப்படி தவிர்க்கப் போகிறோம் என்று சொல்லுங்கள். இந்த மின்வெட்டு எப்போது நிற்கும் என்பதைச் சொல்லுங்கள்.

‘தனிநபர்கள் சதி செய்கிறார்கள்' என்கிறார் நிர்மல்குமார். சில தனிநபர்கள் நினைத்தால் மொத்த தமிழ்நாட்டிலும் பல்வேறு நேரங்களில் மின்சாரத்தை நிறுத்திவிட முடியுமா? அந்தளவுக்கு தான் நிர்வாகம் பார்க்கிறீர்களா? அவ்வளவு தான் உங்களுக்கு சமர்த்தா? ‘மின் துறை கட்டமைப்பு போதுமானதாக இல்லை' என்கிறார் அமைச்சர். இதே கட்டமைப்பை வைத்திருந்துதானே ஐந்து ஆண்டுகளாக மின் தடை இல்லாமல் இருந்தது. மின்வெட்டு இல்லாத ஆட்சியை தி.மு.க. அரசு கொடுத்தது. மே மாதத்துக்கு பிறகு தான் கட்டமைப்பு குறைந்து போய்விட்டதா?

பெரம்பூரில் 40 நிமிடத்தில் மின்வெட்டை சரி செய்ததை தனது சாதனையாகச் சொல்லிக் கொள்கிறார் நிர்மல்குமார். 40 நிமிடத்தில் மின்வெட்டை சரி செய்தது சாதனையா? இல்லை. வேதனை. அது அனுபவித்த மக்களுக்குத் தான் தெரியும்.

‘மின்வெட்டு ஏற்பட்டதும் தெருவில் நிற்கச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள்' என்று வருத்தப்படுகிறார் அமைச்சர். விஜய் வரும் சாலைகளுக்கு பைக் எடுத்து வரச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்பி மாஸ் காட்டியபோது இனித்தது. மக்கள் தங்கள் பிரச்சினைக்காக குறுஞ்செய்தி அனுப்பும் போது கசக்கிறதா? எதை வைத்து பொய்யை மாயை ஆக்கினீர்களோ, அதுவே இன்று அவர்களுக்கு எதிராக மாறி வருகிறது. அரிதாரம் கலைந்து வருவதை சமூக வலை தளங்களில் தான் இப்போது அதிகம் பார்க்க முடிகிறது.

தொடர்ச்சியான மின்வெட்டானது மக்களின் இயல்பு வாழ்க்கையைச் சிதைத்து வருகிறது. தூக்கத்தைத் தொலைத்து மக்கள் வீதிக்கு வந்து போராடி வருகிறார்கள் மக்கள். 'இந்த மாதிரி நியூஸ் எல்லாம் என் காதுக்கு வரக்கூடாது' என்று சொல்லி விட்டு ஹாயாக இருக்கிறார் சி.எம்.சார் விஜய்!

பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமாம். சொல்கிறார் நிர்மல்குமார். என்ன செய்ய வேண்டும் மக்கள். 'கரண்ட்டே வேண்டாம்ணா... விஜய்ண்ணா நீங்க நல்லா சாப்பிடுங்கண்ணா..' என்று ரீல்ஸ் போடச் சொல்வோமா?!

kalaignarseithigal


 


Post a Comment

0 Comments