
ஜப்பான் யவாட்டா மேயர் ஷோகோ கவாட்டா மகப்பேறு விடுப்பு எடுத்தது கவனம் பெற்றுள்ளது.
ஜப்பான் நாட்டில் சுமார் 69,000 மக்கள் வசிக்கும் யவாட்டா நகரத்தின் மேயராகப் பதவி வகித்துவருபவர் ஷோகோ கவாட்டா. இவர் கடந்த 2023ஆம் ஆண்டு தனது 33 வயதில் யவாட்டா நகரத்தின் மேயராகப் பதவி ஏற்றார். குறிப்பாக மிக இளம் வயது மேயராக ஷோகோ கவாட்டா பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
யவாட்டா நகரின் ஊழியர்களுக்கு 16 வார மகப்பேறு விடுமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், மேயர் பதவிக்கு அப்படியான எந்த நடைமுறையும் இதுவரை இருக்கவில்லை. இந்நிலையில் முதல் மேயராக ஷோகோ தனது மகப்பேறு விடுப்பை எடுத்திருப்பது பெரும் கவனம் பெற்றுள்ளது.
இது குறித்து ஷோகோ கவாட்டா கூறும்போது, "மகப்பேறு விடுப்பு எடுக்கும் முதல் மேயர் நான்தான் என்பதை அறிந்தபோது நானே மிகவும் ஆச்சரியமடைந்தேன். இதுவரை இளம் பெண்களோ அல்லது பொதுவாகப் பெண்களோ மேயராகப் பொறுப்பேற்ற நிகழ்வுகள் மிகக் குறைவாகவே இருந்தன என்பதை இது எனக்கு உணர்த்தியது” எனத் தெரிவித்தார்.
மகப்பேறு விடுப்பில் செல்வதற்கு முந்தைய அவரது கடைசிப் பொது நிகழ்வுகளில் ஒன்றாக, யவாட்டாவின் 'டைகோ' (Taiko) திருவிழாவிற்கு முன்னதாக நடைபெற்ற வீதி ஊர்வலத்தில் அவர் பங்கேற்றார். எனினும், பாரம்பரிய வழக்கப்படி 'மிகோஷி' (mikoshi) எனப்படும் நகர்த்தக்கூடிய ஷின்டோ வழிபாட்டுத் தேரின் மீது அமர்ந்து செல்வதற்குப் பதிலாக, நிறைமாத கர்ப்பிணியான கவாட்டா அதன் பின்னால் நடந்து சென்றார்.
கடந்த ஆண்டு சனாயே டகாய்ச்சி (Sanae Takaichi) ஜப்பானின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்ற போதிலும், அந்நாட்டின் அரசியல் களம் ஆண்களின் ஆதிக்கத்தில் இருப்பதால், அங்கு பாலின இடைவெளி மிக அதிகமாகவே காணப்படுகிறது. உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) சமீபத்திய பாலின இடைவெளி அறிக்கையில், 148 நாடுகளில் ஜப்பான் 118-வது இடத்தையும், அரசியல் அதிகாரமளித்தல் பிரிவில் 125-வது இடத்தையும் பிடித்திருந்தது.
"பாலின சமத்துவம் மற்றும் பணிச்சூழல் சீர்திருத்தம் குறித்து மக்கள் பேசுகிறார்கள்; ஆனால், தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்கள் உட்பட அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களும் குழந்தை பெற்றுக்கொள்வதற்குத் தயங்காத ஒரு சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும். இல்லையெனில், பிறப்பு விகிதம் குறைவதால் ஏற்படும் தொடர்ச்சியான மக்கள் தொகை சரிவும், அதன் விளைவாக உண்டாகும் பொருளாதாரச் சீரழிவும் தவிர்க்க முடியாதவை என்று நான் கருதுகிறேன்.
முன்பு என்னைப் பற்றி கேள்விப்பட்டிராதவர்கள் கூட, எனது மகப்பேறு விடுப்பு குறித்த செய்திகள் மூலமாகவே என்னைப் பற்றித் தெரிந்துகொண்டனர். நான் எனது பணியைச் செய்யாமல், மகப்பேறு விடுப்பு எடுப்பதற்காக மட்டுமே அந்தப் பதவியில் இருப்பதாகச் சிலர் இணையத்தில் விமர்சித்தனர். அது ஏமாற்றமளிப்பதாக இருந்தது” எனத் தெரிவித்தார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments