Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம் – 141


வருகை தந்த அந்த நபரின் குடும்பம் அவர்களுக்கு மட்டும் அல்ல, இத் தொடரை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கும் பரிச்சயமானவர்களே. 

ஆம்!

வருகை தந்தது வேறு யாருமில்லை, நீதிபதியின் குடும்பமே. அவர்கள் நீதிபதி மட்டுமா? கிழவியின் வளர்ப்பு மகனான மூத்த மகனும் அல்லவா!

அப்படியிருக்க, பாட்டியின் கால் தரையில் இருக்குமா? சும்மா இறக்கை கட்டிப் பறப்பது போலவே இருந்தார்.

அவர்கள் அமெரிக்காவிலிருந்து வந்தபோது அனைவரும் சந்தித்திருந்தனர். அதன்பின் பல மாதங்கள் கடந்த நிலையில் மீண்டும் வந்திருந்தார்கள்.

வீட்டில் இருந்த அனைவரும் அவர்களை அன்போடு வரவேற்று நலம் விசாரித்தனர். உறவினர்கள் அனைவருடனும் கலந்துரையாடியதில், சின்னவளும் தற்போது தனது வழக்கமான நிலைக்குத் திரும்பி இருந்தாள். 

ஆனால் அது தற்காலிகமான அமைதியே.
நீதிபதியின் மனைவி ஆங்கிலேயர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தானே!
“ஆண்ட்டி... ஹவ் ஆர் யூ?” என்று கேட்டபடி பாட்டியைக் கட்டியணைத்தாள். 

பின்னர் மற்றவர்களுக்கும் கைகொடுத்து வணக்கம் தெரிவித்து அமர்ந்தாள்.

சாப்பாடு பரிமாறத் தயாரானதும், வெள்ளைக்காரி புன்னகையுடன்,“சிஸ்டர்... வெரி நைஸ்! யுவர் குக்கிங்...” என்று முன்பு சாப்பிட்ட உணவை நினைவுகூர்ந்தாள்.
மூத்தவள்,

“தேங்க் யூ!” என்று கூறிப் புன்னகைத்தாள்.

அனைவரும் உணவருந்த அமர்ந்தனர்.

சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, பாட்டியின் மகனான நீதிபதி கூறினார்:
“நாங்கள் நாளை இரவு நாட்டுக்குப் புறப்படுகிறோம். போகும் முன் அம்மாவுடன் சேர்ந்து ஒரு வேளை உணவு உண்ண வேண்டும் என்பதற்காகத்தான் இன்று வந்தோம். வேலைகள் அதிகம். சிறிது நேரம் விடுமுறை கிடைத்ததால் இங்கே வந்தேன். பயணத்தைப் பற்றிச் சொல்லி, அம்மாவின் ஆசீர்வாதம் வாங்கி, உங்களையும் பார்த்துவிட்டு புறப்படலாம் என்று நினைத்தேன்.”

அவர் கூறி முடித்ததும் சின்னவள் உடனே கேட்டாள்:

“அப்போ அந்தப் பூசாரியோட வழக்கு என்னாச்சு? பாதியில விட்டுட்டுப் போகப் போறீங்களா?”

அதற்கு நீதிபதி அமைதியாக,

“இல்லையே... தீர்ப்பு அறிவித்து விட்டேனே!” என்றார்.
“அப்படியா? என்ன தீர்ப்பு?” என்று அனைவரும் ஆர்வத்துடன் கேட்டனர்.

நீதிபதி மட்டும் மர்மமாகப் புன்னகைத்தார்.

அவரது புன்னகைக்கு என்ன அர்த்தம்?

தீர்ப்பு சந்திரா அக்காவுக்கு சாதகமாக வந்திருக்குமா?
பூசாரியின் நிலை என்ன?

இப்படிப் பல கேள்விகள் அங்கிருந்த அனைவரின் மனதிலும் ஓடத் தொடங்கின.

ஆனால்...

விடையை அறிய இன்னும் சற்று தாமதமாகப் போகிறது!

(தொடரும்)


 


Post a Comment

1 Comments

  1. நன்றிகள் அண்ணா

    ReplyDelete