Ticker

6/recent/ticker-posts

32 மூளைகள், 10 கண்கள்: அட்டைப் பூச்சியைப் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!


அட்டைப் பூச்சிக்கு 32 மூளைகள் மற்றும் 10 கண்கள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த விசித்திரமான உயிரினம் பற்றிய ஆச்சரியமான தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

அட்டைப் பூச்சி என்னும் பிராணி மனித இரத்தத்தை உறிஞ்சிவிடும் என்கிற விஷயத்தை மட்டும்தான் அனைவரும் அறிந்திருக்கிறோம்.

இவற்ற்றைப் பற்றி பல வியப்பூட்டும் உண்மைகள் உள்ளன. காடுகளிலும் நீர்நிலைகளிலும் நாம் சாதாரணமாகப் பார்க்கும் இந்த உயிரினத்திற்குள் இருக்கும் சில சுவாரசியமான விஷயங்கள் பற்றி அறிந்து கொள்வோமா செல்லங்களே.

ஒரு அட்டைப் பூச்சியின் உடல் உட்புறமாக 32 தனித்தனி கண்டங்களாக (Segments) பிரிக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு இருப்பது போல ஒரே ஒரு மைய மூளையாக இல்லாமல், அட்டைப் பூச்சியின் ஒவ்வொரு உடல் கண்டத்திற்கும் ஒரு தனி நரம்பு முடிச்சு (Ganglion) வீதம் மொத்தம் 32 நரம்பு முடிச்சுகள் உள்ளன.

இந்த ஒவ்வொரு நரம்பு முடிச்சும் ஒரு குட்டி மூளை போலச் செயல்பட்டு, அந்தந்தக் கண்டத்தின் நரம்பு மண்டலத்தையும், உறுப்புகளையும் தனித்தனியாகக் கட்டுப்படுத்துகிறது.

அறிவியல் ரீதியாக இது ஒரே ஒரு நரம்பு மண்டலத்தின் தொடர்ச்சிதான் என்றாலும், ஒவ்வொரு கண்டமும் ஒரு தனி மூளையின் கட்டுப்பாட்டில் இயங்குவதால், அட்டைப் பூச்சிக்கு 32 மூளைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

​மூளைகள் மட்டுமல்லாமல், அட்டைப் பூச்சியின் உடலில் 10 கண்கள், 9 ஜோடி விந்தகங்கள் (Testicles) மற்றும் அதன் வாயில் இரத்தத்தை உறிஞ்சுவதற்குப் பயன்படும் பற்கள் நிறைந்த 3 தாடைகளும் உள்ளன.

அது கடிப்பதே நமக்குத் தெரியாது. காரணம், அது கடிக்கும்போது அதன் உமிழ்நீரிலிருந்து "அனஸ்தெடிக்" (Anesthetic) எனப்படும் ஒரு இயற்கையான மரத்துப்போகும் வேதிப்பொருளைச் சுரக்கிறது. இதனால் நமக்கு வலியே தெரியாமல், அது பாட்டிற்கு இரத்தத்தைக் குடித்துவிட்டு நகர்ந்துவிடும்.

இதன் உமிழ்நீரில் "ஹிருடின்" (Hirudin) என்ற சக்திவாய்ந்த வேதிப்பொருள் உள்ளது. இது இரத்தம் உறைவதைத் (Blood clotting) தடுக்கிறது. இதனால்தான் அது கடித்து முடித்த பிறகும் கூட, அந்த இடத்தில் சிறிது நேரம் இரத்தம் வழிந்துகொண்டே இருக்கும்.

அது ஒருமுறை தன் உடல் எடையை விட பல மடங்கு இரத்தத்தை முழுமையாக உறிஞ்சிவிட்டால், அதன் பிறகு செரிமானம் ஆக பல மாதங்கள் ஆகும். இவற்றுள் சில பூச்சிகள் ஒருமுறை நன்றாகச் சாப்பிட்டால், அடுத்த ஒரு வருடம் வரை உணவில்லாமல் உயிர்வாழ முடியும்.

இவற்றில் ஆண், பெண் என்று தனித்தனி பாலினம் கிடையாது. ஒவ்வொரு இதன் உடலிலும் ஆண், பெண் ஆகிய இருபாலின உறுப்புகளும் இருக்கும். இருப்பினும், அவை குட்டி போடுவதற்கு மற்றொரு அட்டைப் பூச்சியுடன் இணைய வேண்டியது அவசியமாகும்.​

இவற்றில் பெரும்பாலானவை நன்னீரிலும் (குளம், குட்டைகள்) கடலிலும் வாழ்பவை. ஆனால், அடர்ந்த காடுகளில் மழைக் காலங்களில் மரங்களிலும் செடிகளிலும் வாழக்கூடிய நில அட்டைப் பூச்சிகளும் (Land Leeches) உண்டு.

இயற்கையின் விசித்திரமான படைப்பான அட்டைப் பூச்சிகளின் மறைக்கப்பட்ட பரிமாணங்களை முழுமையாக அறிந்துகொள்வதன் மூலம், உங்களைச் சுற்றியுள்ள விலங்கு மற்றும் பூச்சியியல் உலகத்தைப் பற்றிய அறிவியல் நுண்ணறிவை நீங்கள் பெற முடியும்.

kalkionline


 


Post a Comment

0 Comments