Ticker

6/recent/ticker-posts

குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்!-41


அழுக்காறாமை

குறள் மொழி 98

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.

குறள் எண் :164

குறள் மொழியின் பொருள் :

தீய செயல்களால் துன்பம் வருவதை அறிந்தவர்கள் பொறாமையினால் புறங்கூறுதல், சந்தேகமடைதல், கோபம் கொள்ளுதல் போன்ற அறமல்லாதவற்றைச் செய்ய மாட்டார்கள்.

நபிமொழி

இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "ஆதாரமின்றி பிறரைச் சந்தேகப்படுதல் குறித்து எச்சரிக்கின்றேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். பிறர்குறையைத் துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருர் பொறாமை கொள்ளாதீர்கள்; பிணங்கிக் கொள்ளாதீர்கள்; கோபம் கொள்ளாதீர்கள்; மாறாக இறையடியார்களே நீங்கள் அன்பு பாராட்டுவதில் சகோதரர்களாய் இருங்கள்” என்றார்.
அறிவிப்பாளர் : அபூஹிரைரா (ரலி), நூல் : புகாரி - 6064

நட்பு

குறள் மொழி 99

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. குறள் எண் : 789

குறள் மொழியின் பொருள் :

நல்ல நட்பிற்கு அடையாளம் எதுவெனில் நண்பருடன் கருத்து வேறுபாடு சிறிதும் இல்லாமல் முடிந்தவரை எல்லா நிலைகளிலும் துணை நின்று தாங்குவதே ஆகும்.

நபி மொழி

கஷ்டத்தின் போது நமக்குத் துணை நிற்பவர்களே உண்மையான நண்பர்கள். அது போன்றதே, நாம் மண்ணறையில் தனியாக ஆறு அடி ஆழத்தில் இருக்கும் போது. நமது (புண்ணிய செயல்களான) நல்லமல்களே நம்முடன் இருக்கும்.

ஆதாரம்: நூல் - புகாரி.

குடிசெயல்வகை

குறள் மொழி 100

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.

குறள் எண்: 1021

குறள் மொழியின் பொருள் :

"தன் குடும்பப் பெருமையை உயர்த்துகின்ற அறச்செயல்களான கடமைகளைச் செய்வதற்குச் சோர்வு கொள்ளமாட்டேன்” என்று ஒருவன் கூறுகின்ற பெருமையைப் போல உயரியது வேறெதுவுமில்லை.

நபிமொழி

செயலே பெருமை தரும்! குலமல்ல! பெருமைதரும் அறச்செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரை அவரது குலச்சிறப்பு முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவதில்லை.
நபிகள் நாயகம் (ஸல்).

நூல் - முஸ்லிம்

(முற்றும்)


 


Post a Comment

0 Comments