
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, மனிதர்கள் தங்கள் தேவைகளுக்காகத் தோலைப் பதப்படுத்தி, இவ்வளவு நேர்த்தியாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பது மனித குல வரலாற்றின் மிக முக்கியமான மைல்கல்லாகும்
நாம் தினமும் பயன்படுத்தும் காலணிகளுக்கு நீண்டநெடிய பழமையான வரலாறு உள்ளது. எகிப்து பிரமிடுகள் கட்டப்படுவதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே காலணிகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இதுவரை கண்டறியப்பட்டதிலேயே உலகின் மிகப் பழமையான தோலாள் ஆன 'ஷூ' ஒன்று தொல்பொருள் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
2008-ம் ஆண்டு, ஆர்மீனியா நாட்டின் வயோட்ஸ் டிசோர் (Vayots Dzor) மாகாணத்தில் உள்ள 'அரெனி-1' (Areni-1) என்ற குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உடைந்த மண்பாண்டங்களுக்கு அடியில் ஒரு சிறிய குழிக்குள் இந்த ஷூ கண்டுபிடிக்கப்பட்டது. இது கி.மு. 3500-ஐச் சேர்ந்த செம்பு காலத்தை சேர்ந்தது என கலிபோர்னியா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் செய்யப்பட்ட ரேடியோ கார்பன் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
தோலால் செய்யப்பட்ட பொருட்கள் பொதுவாகச் சில ஆண்டுகளிலேயே மக்கிப் போய்விடும். ஆனால், 5,500 ஆண்டுகளைக் கடந்த பிறகும் இந்த ஷூ பாதுகாப்பாக இருப்பதற்கு அந்த குகையின் குளிர்ந்த மற்றும் வறண்ட தட்பவெப்ப நிலையே முக்கியக் காரணம். மேலும், இந்த ஷூ இருந்த குழியின் மீது ஆட்டுச் சாணம் ஒரு தடிமனான அடுக்கு போல மூடியிருந்தது. இது காற்று புகாத ஒரு கவசமாகச் செயல்பட்டு, ஷூ கெட்டுப்போகாமல் பாதுகாத்ததாகவும் தெரிவிக்கின்ற்னர்.
இந்த ஷூ ஒரே ஒரு மாட்டுத் தோலால் செய்யப்பட்டுள்ளது. முன்புறமும் பின்புறமும் லெதர் கயிறுகளால் தைக்கப்பட்டுள்ளது. இதன் 'லேஸ்' கூட அப்படியே பாதுகாப்பாகக் கிடைத்துள்ளது. இந்த ஷூவின் உள்ளே காய்ந்த புற்கள் அடைக்கப்பட்டிருந்தன. குளிரைத் தாங்குவதற்காகவோ அல்லது பயன்படுத்தாத போது ஷூவின் வடிவத்தை அப்படியே தக்கவைக்கவோ பழங்கால மனிதர்கள் இந்த உத்தியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இது வலது காலில் அணியக்கூடிய ஷூ. இன்றைய அளவீட்டின்படி இது 'Size 7' (ஐரோப்பிய அளவு 37) அளவைக் கொண்டுள்ளது. இது ஒரு பெண்ணுடையதாகவோ அல்லது அந்த காலகட்டத்தில் வாழ்ந்த சிறிய பாதம் கொண்ட ஆணுடையதாகவோ இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் பனிமனிதன் ஓட்ஸி (Ötzi the Iceman) பயன்படுத்திய காலணிகள் தான் பழமையானதாகக் கருதப்பட்டது. ஆனால், அரெனி-1 குகையில் கிடைத்த இந்த ஷூ அதைவிட சில நூறு ஆண்டுகள் பழமையானது. இந்தக் கண்டுபிடிப்பு வெறும் ஒரு காலணியைப் பற்றிய வரலாறாக இல்லாமல், ஆதிமனிதர்கள் கரடுமுரடான மலைப்பகுதிகளில் நடப்பதற்கும், தட்பவெப்ப நிலையைச் சமாளிப்பதற்கும் தங்கள் அறிவாற்றலை எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பதற்கான நேரடிச் சான்றாகும். பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, மனிதர்கள் தங்கள் தேவைகளுக்காகத் தோலைப் பதப்படுத்தி, இவ்வளவு நேர்த்தியாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பது மனித குல வரலாற்றின் மிக முக்கியமான மைல்கல்லாகும்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments