
இலங்கையில் மீண்டும் எழுந்துள்ள இஸ்லாமியப் பெண்களின் ஆடை விவகாரம் சம்பந்தமாக ,சகோதர இனங்களுக்கிடையே அருவருப்பான கருத்து மோதல்களை இணைய தளங்களில் காண முடிகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சகோதரரின் தவறான கண்ணோட்டத்தில் பதிவிடப்பட்ட ஒரு பதிவால் இன்று அவர் மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கியிருப்பதை நாம் அறிவோம் .அந்த சூடு தணியும் முன்பு மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஏற்கனவே இனவாதத்தாலும் ,போரினாலும் சிதைந்து சின்னாபின்னமாகி ,மிகப்பெரும் பொருளாதார பின்னடைவை இலங்கை சந்தித்து ,மீண்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில் இப்படிப்பட்ட சம்பவங்களை முளையிலேயே கில்லி எரிந்து விட வேண்டும்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்ற 9 சுகாதார உதவியாளர்கள், தங்களது மத மற்றும் கலாசார அடையாளங்களைப் பேணிக்கொண்டு சீருடை அணிந்து கடமையில் இணைவதற்கு வைத்தியசாலை நிர்வாகத்தினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதிதாக நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள் தங்களது மத மற்றும் கலாசார நடைமுறைக்கு அமைவாக பர்தா அணிந்த நிலையில் கடமையேற்கச் சென்றபோது, அவர்கள் குறித்த சீருடையில் வருகை தரவில்லை என்ற காரணத்தை முன்வைத்து கடமையேற்க அனுமதிக்கப்படவில்லை. வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் அவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்பதிலிருந்தும், வரவு புத்தகத்தில் கையொப்பமிடுவதிலிருந்தும் தடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரச சுற்றுநிருபமும் நிலைமையும்
அரச ஊழியர்களின் சீருடை தொடர்பான அரச சுற்றுநிருபங்களில், உத்தியோகத்தர்கள் தங்களது மத மற்றும் கலாசார அடையாளங்களைப் பேணிக்கொண்டு சீருடை அணிவது தெளிவாக அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு அணியும் போது பின்பற்ற வேண்டிய வரையறைகள் பற்றியும் சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்நிலையில், வைத்தியசாலை பணிப்பாளர் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
முறைப்பாடுகளும் முன்னெடுப்புகளும்
இந்த சம்பவம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் மொத்தம் 5 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ருடானி சாஹிர் ஆகியோரின் வழிகாட்டலில் இந்த முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்த்துக்கொள்வது தொடர்பில் வைத்தியசாலை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதோடு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என வைத்தியசாலை அத்தியட்சகர் உறுதியளித்துள்ளார்.
மத கலாசாரங்களைப் பேணி சீருடையை அணிய அனுமதி மறுக்கும் வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராகக் மக்கள் களத்தில் இறங்கியுள்ளதோடு, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்துமாறும் கோரியுள்ளனர்.
இந்தச் சம்பவத்திற்குக் பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அரச சுற்றுநிருபங்களுக்கு அமைய அனுமதி வழங்குமாறு வலியுறுத்தியுள்ளது.
அரச ஊழியர்கள் தங்களது மத, கலாசார அடையாளங்களைப் பேணிக்கொண்டு பணியாற்றுவது அவர்களின் அடிப்படை உரிமையாகும். அதேநேரம், பணியிடத்தில் ஒருமைப்பாடும் சுமுகமான சூழலும் நிலவுவது அவசியமாகும். எனவே, இந்த விவகாரத்தை அனைத்துத் தரப்பினரும் பொறுப்புணர்வுடன் அணுகி, சட்டவிரோதமான அதிகாரப் பிரயோகங்கள் இன்றிச் சமூக நீதியை உறுதிப்படுத்துவது இன்றியமையாததாகும்.
கல்ஹின்னை மீஹன்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments