Ticker

6/recent/ticker-posts

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வியை டிஜிட்டல் மயமாக்க பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்…


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விசேட கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்கும், உதவித் தொழில்நுட்பங்களை விரிவுபடுத்துவதற்குமான மூலோபாயத் திட்டங்களை வகுப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் ஆகஸ்ட் 18ஆம் திகதி நடைபெற்றது.

இதில் டிஜிட்டல் பொருளாதாரப் பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண சீ. தனபால, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ உள்ளிட்ட கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சுகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வி முன்னோடித் திட்டத்தை முறையாகவும் திட்டமிட்ட வகையிலும் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இதன்போது வலியுறுத்தப்பட்டது. முறையான திட்டமிடலின்றி நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் சாதனங்கள் மற்றும் முதலீடுகள் வீணாகுவதற்கு வழிவகுக்கும் என்பதால், துறைசார் சவால்களை கருத்திற்கொண்டு ஒவ்வொரு அம்சத்தையும் கவனமாகத் திட்டமிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, குறைந்த எண்ணிக்கையிலான பாடசாலைகள் மற்றும் சாதனங்களுடன் சிறிய அளவிலான முன்னோடித் திட்டத்தை ஆரம்பித்து, அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

ஆரம்பகட்டத்தில் 1, 2 மற்றும் 6ஆம் தரங்களை மையப்படுத்துவதுடன், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட பாடசாலைகளுக்கும், மறுசீரமைப்புத் திட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கும் முன்னுரிமை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இதனை தற்போது முன்னெடுக்கப்படும் கல்வி மறுசீரமைப்புடன் ஒருங்கிணைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஆரம்பத்திலேயே அனைத்து வகையான கற்றல் குறைபாடுகளையும் உள்ளடக்குவதற்குப் பதிலாக, அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட குறைபாடுகளுக்கான தீர்வுகளை முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தி, பின்னர் படிப்படியாக திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

திட்டத்தை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக பரீட்சார்த்த முறைகள், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் மற்றும் அணுகல்தன்மைத் தரநிலைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களும் இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.

lankatruth


 


Post a Comment

0 Comments