Ticker

6/recent/ticker-posts

மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் வழங்கிய சிறை அதிகாரி கைது


பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் வழங்கி வந்ததாக சந்தேகிக்கப்படும் சிறைச்சாலை காவலர் ஒருவர், சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 20 கிராம் ஹெரோயினுடன் கல்கிசை பிரிவு குற்ற விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை, வைத்தியர் வீதியில் வசிக்கும் 32 வயதுடைய நபர் ஒருவர் முதலில் இந்த போதைப்பொருள் தொகையுடன் கல்கிசை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, மெகசின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் நபர் ஒருவர் WhatsApp தொலைபேசி அழைப்பின் மூலம் ஒரு இடம் தொடர்பான தகவல்களை வழங்கியதாகவும், அதன்படி அந்த இடத்திலிருந்து போதைப்பொருள் பொதியை பெற்றுக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த போதைப்பொருள் பொதியை பொரளை, வனாத வீதியில் மற்றுமொரு நபரிடம் ஒப்படைக்க வேண்டியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சந்தேகநபரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கல்கிசை பிரிவு குற்ற விசாரணைப் பணியகத்தின் பொறுப்பதிகாரியின் தலைமையில் குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அப்போது, சிறைச்சாலை விளையாட்டு உடையில் வந்த ஒருவர் சந்தேகநபருக்கு அருகில் வந்து போதைப்பொருள் அடங்கிய பொதியை பெற்றுக்கொள்ள முயன்றுள்ளார். இதன்போது அப்பகுதியில் மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறைச்சாலை காவலர் கடந்த ஜனவரி மாதம் மெகசின் சிறைச்சாலையில் பணியில் இணைந்தவர் எனவும், அதற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் பணியாற்றியவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பிரிவு குற்ற விசாரணைப் பணியகம் மேற்கொண்டு வருகிறது.

lankatruth


 


Post a Comment

0 Comments