Ticker

6/recent/ticker-posts

20 லட்சம் மனித உயிர்களை அச்சுறுத்தும்...'உலகின் மிக ஆபத்தான ஏரி'... வியக்க வைக்கும் அதிர்ச்சி பின்னணி!


ஏரியின் அடியில் உள்ள மீத்தேன் வாயுவைப் பிரித்தெடுத்து மின்சாரம் தயாரிக்கும் பணிகள் அங்கு தீவிரமடைந்துள்ளன.

ஆப்பிரிக்காவின் ரவாண்டா, காங்கோ ஜனநாயகக் குடியரசு நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது கிவு ஏரி. சுமார் 1500 அடி ஆழம் கொண்ட இந்த ஏரியின் அடிப்பகுதியில் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் வாயுக்கள் பெருமளவில் தேங்கியுள்ளன. பொதுவாக ஆழமான ஏரிகளில், மேல்பகுதியில் இருக்கும் குளிர்ந்த நீர் கீழே செல்வதும், அடிப்பகுதியில் இருக்கும் சூடான நீர் மேலே வருவதுமாக நீர் சுழற்சி நடைபெறும். அதாவது,Convection. ஆனால், கிவி ஏரி அப்படிச் செயல்படுவதில்லை.

சுமார் 1,500 அடிக்கும் மேல் ஆழம் கொண்ட இந்த ஏரியின் அடிப்பகுதியில், பூமிக்கு அடியில் நடக்கும் எரிமலைச் செயல்பாடுகளால் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் அதிகளவில் வந்து சேர்கின்றன. ஏரியின் மிக அதிக ஆழம் காரணமாக ஏற்படும் பெரும் அழுத்தமானது, இந்த வாயுக்களை மேலே செல்ல விடாமல் தண்ணீருக்குள்ளேயே அமுக்கி கரைத்து வைத்துள்ளது. இதனால், இந்த ஏரி நீர் பல அடுக்குகளாகப் பிரிந்து, வாயுக்களுடன் சேர்ந்து அடர்த்தியாக அப்படியே தேங்கிக் கிடக்கிறது.

நிலநடுக்கம் அல்லது நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்கள் நிகழும்போது, அதீத அழுத்தத்தில் உள்ள இந்த வாயுக்கள் பெருமளவில் காற்றில் கலக்கும் அபாயம் (Limnic Eruption) உள்ளது. 1986-ஆம் ஆண்டு கேமரூன் நாட்டின் நியோஸ் ஏரியில் ஏற்பட்ட இதேபோன்ற நிகழ்வில் 1,800-க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். கிவு ஏரியைச் சுற்றி தற்போது சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இயற்கையின் இத்தகைய திடீர் புவியியல் மாற்றங்களுக்கு முன்னால் மனித சமூகம் இன்றும் தற்காப்பற்ற நிலையிலேயே இருப்பதை இது உணர்த்துகிறது.

இருப்பினும், இந்த அச்சுறுத்தலை ரவாண்டா அரசு மின் உற்பத்திக்கான வாய்ப்பாக மாற்றி வருகிறது. ஏரியின் அடியில் உள்ள மீத்தேன் வாயுவைப் பிரித்தெடுத்து மின்சாரம் தயாரிக்கும் பணிகள் அங்கு தீவிரமடைந்துள்ளன. 2015-ல் தொடங்கப்பட்ட 'கிவுவாட்' (KivuWatt) திட்டத்தைத் தொடர்ந்து, சமீபத்தில் 'ஷெமா பவர்' (SPLK) என்ற புதிய மின் உற்பத்தி நிலையமும் தனது வணிகரீதியான உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், ரவாண்டா நாட்டின் ஒட்டுமொத்த மின்தேவையில் சுமார் 30 சதவீதத்தை இந்த ஏரி தற்போது பூர்த்தி செய்கிறது.

இதனைத் தொடர்ந்து, எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் காங்கோ நாடும் கிவு ஏரியிலிருந்து எரிவாயு எடுக்க புதிய ஏலங்களை அறிவித்துள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இயற்கையின் ஒரு ஆபத்து மின்சாரமாக மாற்றப்பட்டாலும், அருகிலேயே உள்ள 'நிரகோங்கோ' என்ற செயல்படும் எரிமலையின் செயல்பாடுகள் ஏரியின் பாதுகாப்பிற்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாகவே உள்ளன. அறிவியல் வளர்ச்சி எந்த அளவுக்கு உயர்ந்தாலும், இயற்கையின் பிரம்மாண்டங்களுக்கு மத்தியில் ஒரு நிரந்தரமான பாதுகாப்பை உறுதி செய்வது மனிதகுலத்திற்கு இன்னும் சவாலானதாகவே நீடிக்கிறது.

news18

 


Post a Comment

0 Comments