
அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இஸ்மத் நானா என்றொரு பெயர் வெகுபிரபல்யமாகிக் கொண்டிருக்கின்றது.
ஆரம்பத்தில் வெறும் சமூக ஆர்வலராக , பகிரங்க வெளிக்கு அறிமுகமான இஸ்மத் நானா, இன்று சமூகத்தின் கலகக்குரலாகவும், களங்கங்களை சுட்டிக் காட்டும் சீர்திருத்தவாதியாகவும் மாறிக் கொண்டிருக்கின்றார்.
இலங்கையின் சகல பிரதேசங்களில் இருந்தும் நாளுக்கு நாள் அவரது ஆதரவுத் தளம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.
தற்போதைய நிலையில் ஆன்மீகம ரீதியான விடயங்கள், சமூகத்தின் வக்பு சொத்துக்கள், பள்ளிவாசல்கள் மற்றும் அதன் நிர்வாகிககள், சமூக விரோத செயற்பாடுகள் என்று அவர் பேசாத விடயங்கள் இல்லை. அவற்றில் உண்மை இல்லாமலும் இல்லை.
வட்டியை மிகப் பெரும் பாவமாக சித்தரிக்கும் இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் அந்த வட்டிக்கு வேறு பேர் வைத்து செயற்படும்போது இதுவரையான காலத்திற்குள் அதனை தைரியமாக சுட்டிக் காட்டியவர் இஸ்மத் நானா மாத்திரமே.
ஆனால் அவர் அது தொடர்பான விடயங்களை பகிரங்க வெளியில் பேசி பல நாட்களாகி விட்ட பின்னரும் மார்க்க விடயத்தில் தெளிவான நிலைப்பாடுகளை முன்வைக்க வேண்டிய அறிஞர்களோ, சிந்தனையாளர்களோ அவர்களின் அமைப்புக்களோ இதுவரை வாயே திறக்கவில்லை.
ஒன்றில் இஸ்மத் நானா சொல்வது பிழை என்றோ, அல்லது ஆமாம். அது வட்டிதான் என்றோ தெளிவாக ஒரு நிலைப்பாட்டை அறிஞர்களிடமிருந்து, சிந்தனையாளர்களிடமிருந்து சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
ஆனால் அவர்கள் ஒரு முக்கியமான விடயத்தில் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
கொழும்பில் இதுவரைகாலமும் இறந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்யும் விடயத்தில் கூட மாபெரும் ஊழல் நடைபெற்றிருப்பது இஸ்மத் நானா சொல்லப் போய்த் தான் வெளியில் தெரிய வந்தது. ஆரம்பத்தில் அந்த விடயத்தை இஸ்மத் நானா முன்வைத்தபோது வெளிக்காட்டப்பட்ட பலத்த எதிர்ப்புகள் எல்லாம் அடங்கி தற்போது அவர் சுட்டிக்காட்டியபடி தவறுகள் திருத்தப்பட்டுள்ளமையை காணும்போது உண்மையில் மக்கள் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.
பள்ளிவாசல்களின் (வணக்கத்தலங்களின்) அருகில் மதுபான சாலைகள் திறக்கப்பட முடியாது என்பது சாதாரண சட்ட ஏற்பாடுகளில் ஒன்றாகும். ஆனால் பல இடங்களில் அந்த சாதாரண சட்ட ஏற்பாட்டையே கூட ஒருசிலர் அலட்சியம் செய்து நடந்து கொண்ட நிலையில் இஸ்மத்தின் கலகக்குரல் காரணமாக அவ்வாறான விடயங்கள் பொதுவெளியில் தெரிய வந்தது. கடைசியில் சத்தமின்றி அவ்வாறான மதுபான சாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளனன.
அப்படியெனில் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் இதுவரை காலமும் என்ன செய்தார்கள்? ஒரு இஸ்மத் வந்துதான் இவ்வாறான விடயங்களைச் செய்ய வேண்டும் என்று தங்கள் பொறுப்பில் அலட்சியமாக இருந்தார்களா?
நம் சமூகத்தின் ஆன்மீக ரீதியான எதிர்கால விடயங்களுக்கு வக்பு சொத்துக்கள் மிக முக்கியமானவை. ஒரு காலத்தில் சமூகத்திற்காக வக்ப் செய்யப்பட்ட சொத்துக்களை ஒரு சிலர் பிற்காலத்தில் மெதுவாக ஆட்டையைப் போட்டுக் கொண்டனர்.
இன்னும் சிலர் அதன் வருமானங்களைச் சுருட்டிக் கொண்டனர். வேறு சில இடங்களில் பள்ளிவாசல்களுக்கு வக்ப் செய்யப்பட்ட கடைத் தொகுதிகள் மாதமொன்றுக்கு வெறும் ஆயிரம் இரண்டாயிரம் ரூபா வாடகைக்கு வழங்கப்பட்டுள்ள விடயங்களும் இஸ்மத் மூலம் தான் பொதுவெளியில் தெரிய வந்தது.
ஒரு சில இடங்களில் அவ்வாறான தவறுகள் தற்போது திருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இப்படியாக இஸ்மத் நானா என்பவர் இன்றைக்கு எழுப்பிக் கொண்டிருக்கும் கலகக்குரல் சமூகத்தின் குரலாக மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. சமூகத்தில் அதற்கான ஆதரவுத் தளமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சமூகத்தை சுரண்டிப் பிழைத்த சக்திகளின் வயிற்றில் அடிவிழவும், சமூகத்தை ஏமாற்றி வயிறு வளர்க்க முனைவோரின் முகத்தில் ஓங்கி அறையும் அளவுக்கும் இன்று இஸ்மத் நானாவின் குரல் மாற்றம் பெற்றுள்ளது.
அதற்கான காரணம் அவர் கூறும் விடயங்களில் அப்பட்டமான உண்மை இருப்பதாக சமூகம் ஏற்றுக் கொள்ளத் தலைப்பட்டுள்ளமை ஆகும்.
இவ்வாறான பின்னணியில் சமூகத்தின் முக்கிய அமைப்புகள், அறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்கள் குறித்தும் இஸ்மத் நானா, ஏராளம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஆனால் அதில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்கள் நிலைப்பாட்டை பகிரங்கமாக தெளிவுபடுத்தாமல் மௌனம் காக்கத் தலைப்பட்டுள்ளனர்.
இன்னும் சிலர் தெருச் சண்டியர்கள் போன்று அடியாட்களைக் கொண்டு வம்புச் சண்டை இழுக்கத் தலைப்பட்டுள்ளனர். ஆனால் எந்தவொரு தரப்பும் இஸ்மத் நானாவின் கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் நியாயமான பதில்களை வழங்கவில்லை.
அவ்வாறே கொலை, தற்கொலை, காணாமல் போனோர் விடயம் சம்பந்தமாகவும் சமூக மயப்படுத்த அவர் பின்வாங்க வில்லை.

மேலும் இஸ்மத் நானா தங்களுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து ஒருசிலர் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அவ்வாறான மூன்று வழக்குகளிலும் இஸ்மத் நானாவுக்கு ஆதரவாகவே தீர்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே நம் அறிஞர்களும் பெரியோர்களும், சிந்தனையாளர்களும் இனியும் மௌனம் காப்பது அழகல்ல.
உடனடியாக இந்த விடயத்தில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.
ஒன்றில் இஸ்மத் நானா முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தவறு என்றால் அதனை நேரடியாக ஆதாரங்களுடன் சுட்டிக் காட்ட வேண்டும். அவரது கருத்தில் உள்ள பிழைகளை தர்க்க ரீதியாக நிரூபிக்க வேண்டும்.
அல்லது அவர் கூறும் விடயங்கள் உண்மை என்றால் தொடர்புடையவர்கள் அதனை நேர்மையாக ஏற்றுக்கொண்டு பொதுவெளியில் மன்னிப்புக்கேட்க வேண்டும்.

சமூகம் அவ்வாறான நேர்மையான மன்னிப்புக் கோரல்களை ஏற்றுக் கொள்ளத் தயாராகவே உள்ளது.
அதற்குப்பதிலாக இஸமத் நானா முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதனுடன் தொடர்புடையவர்கள் இனியும் மௌனம் காக்க முற்பட்டால் சமூகம் அதனை உண்மை என்றே ஏற்றுக் கொள்ளத் தலைப்படும். அதன் பின் இதுவரை காலமும் நம் சமூகத்தில் அறிஞர்களுக்கும், சிந்தனையாளர்களும் , முக்கிய பிரமுகர்களுக்கும் வழங்கப்பட்ட மரியாதை அடியோடு மறைந்துவிடும். சமூகம் அவர்களுக்கு எதிராக திரும்பி விடும்.
தீர்வு உங்கள் கையில் .. சமூகம் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றது.
நல்லதே நடக்கட்டும்.....
நம் சமூகத்தின் உயரிய பணிகள் பிற சமூகத்தின் நேர்வழி க்கான களமாக அமைக்கப்பெறட்டும்....
வாழ்க வளமுடன்....
M.H.M நியாஸ்
Justice of peace all island.
Director:National peace council of Sri Lanka.
chairman:Medialink
0777814108

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments