
நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்து தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக சர்வதேச பொலிஸாரினால் (Interpol) நீல அறிவித்தல் (Blue Notice) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொதுப்பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக உள்நாட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்த்து பல்வேறு காரணங்களை முன்வைத்திருந்தார்.
மாத்தறை, எலியாகந்த வீதியில் உள்ள பிரவுன்ஸ் ஹில் பகுதியில் அமைந்த 1.5 பேர்ச்சஸ் காணியை 60 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமையினால், கடந்த ஜூலை மாதம் மாத்தறை பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் அவரைக்கைது செய்வதற்கான பிடியாணை மீண்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மேற்குறிப்பிட்ட சர்வதேச நீல அறிவித்தலின் மூலம் சந்தேகநபரின் அடையாளம், அவர் தற்போது தங்கியிருக்கும் இடம் அல்லது அவரது செயற்பாடுகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ள சர்வதேச விசாரணை அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments