Ticker

6/recent/ticker-posts

தலைநகரமா அல்லது கொலைநகரமா? முதல்வர் விஜய்யை விளாசிய நயினார் நாகேந்திரன்


சென்னையில் தவெக நிர்வாகி கொலை செய்யப்பட்ட  சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.  இது கொலை நகரமா அல்லுதது தலைநகரமா என்ற கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னை அடையாறு பகுதியில் தவெக நிர்வாகி கண்ணன் 5 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொலை நகரமா? தலைநகரமா?

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "அடையாறு பகுதியில் தவெக நிர்வாகி ஒருவர் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட பதற்றம் தணிவதற்குள், சென்னையை அடுத்த நொளம்பூரில் இலவசமாக பீடி தர மறுத்த புலம்பெயர் தொழிலாளி ஒருவரை, போதையில் இருந்த கும்பல் உயிர் போகும் அளவிற்கு கொடூரமாகத் தாக்கியதாக வெளியாகியுள்ள காணொளி பதைபதைக்கச் செய்கிறது. தலைநகரில் ஒரே நாளில் நடந்த இந்த இரு படுகொலைகளும், தற்போது தமிழகத்தில் நடைபெறும் “Reels” ஆட்சியின் “Reality”-யை மக்களுக்கு உணர்த்துகிறது. 

குறிப்பாக, கிட்டத்தட்ட 35 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை கொண்டுள்ள தமிழகத்தில், தமிழகத்தை சேர்ந்தவருக்கும் பாதுகாப்பில்லை, தமிழகத்திற்கு பிழைப்புத் தேடி வந்தவருக்கும் திரு. ஜோசப் விஜய் தலைமையிலான அரசால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்பது இந்திய அளவில் நமக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தும். நமது மாநிலத்தின் உட்கட்டமைப்பையே கேள்விக்குறியாக்கும். 

ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மக்களிடம் இருந்து தன்னை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் முதல்வர் விஜய், அவர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை இனியும் அலட்சியம் செய்யக் கூடாது.  எனவே, காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீது சட்டமன்றத்தில் இன்று பதிலுரை நிகழ்த்தவிருக்கும் முதல்வர், தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், போதை குற்றங்கள், காவல் மரணங்கள் என இதுவரை 500 - க்கும் மேற்பட்ட கொடூரக் குற்றங்கள் தமிழகத்தில் அரங்கேறியுள்ள அவலத்தைப் பற்றி விளக்கமளிக்க வேண்டும்! சீரழிந்துள்ள சட்டம் ஒழுங்கை சமன்செய்ய தவெக அரசு என்னென்ன செயல்திட்டங்கள் வைத்துள்ளது என்பதையும் சமர்ப்பிக்க வேண்டும்” என குறிப்பிட்டார்

கனிமொழி கண்டனம்

திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "தலைநகர் சென்னையின் மையப்பகுதியிலேயே ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்பட்ட நபர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதோடு, அண்மையில்  தவெகவில் இணைந்தவர் எனவும் கூறப்படுகிறது. மேலும், வடமாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவரும் போதை கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா என்று எண்ணும் அளவுக்கு அதிர்ச்சி அளிக்கும் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை முழுவதுமாக செயலிழந்துவிட்டதற்கும், தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதற்கும் இதுவே சாட்சி” என்று கூறினார். 

தொடர்ந்து, டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "ன்னை, அடையாறு அருகே தவெக நிர்வாகியும், சரித்திரப் பதிவேடு குற்றவாளியுமான ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம், தமிழகத்தின் சட்டம்–ஒழுங்கை கேள்விக்குறியாக்குவதோடு, குற்றவாளிகளைக் கண்காணிக்கும் உளவுத்துறை என்ற அமைப்பு இயங்குகிறதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. தமிழகத்தில் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ள சட்டம்–ஒழுங்கு நிலைமையில் கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்தார்.

zeenews


 


Post a Comment

0 Comments