Ticker

6/recent/ticker-posts

ரஷ்யாவின் மிகப் பழமையான 'டெர்பென்ட் ஜும்ஆ மஸ்ஜித்' பற்றிய ஒரு கண்ணோட்டம்!


ரஷ்யாவின் தென்முனை குடியரசுகளில் ஒன்றான, தென்மேற்கு மற்றும் வடக்கு காகசஸ் (North Caucasus) மலைப்பகுதியில் டாகெஸ்தான் (Dagestan) குடியரசில் டெர்பென்ட் என்ற ஒரு பழமையான நகரம் அமைந்துள்ளது.

ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2026ம் ஆண்டில் டெர்பென்ட் நகரத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 1,29,207 ஆகும். இம்மக்கள் தொகையில் 90% க்கும் அதிகமானோர் இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களாவர்.

இங்கு வாழும் முஸ்லிம்களுள் லெஜ்கின்கள் (Lezgins - 36.4%), அஜர்பைஜானியர்கள் (Azerbaijanis - 35.1%), தபசாரன்கள் (Tabasarans - 12.2%), மற்றும் தர்கின்கள் (Dargins - 5%) போன்ற பல்வேறு முஸ்லிம் இன மக்கள் வாழ்கின்றனர்.

வரலாற்று ரீதியாக, ரஷ்ய எல்லைக்குள் இஸ்லாம் மார்க்கம் முதன்முதலில் பரவிய பழமையான மற்றும் மிக முக்கியமான நகரமாக இந்த டெர்பென்ட் நகரம் கருதப்படுகிறது.

அதனால், இங்குள்ள டெர்பென்ட் ஜும்ஆ மஸ்ஜித், முன்னாள் சோவியத் ஒன்றியக் காலப் பகுதியிலுலும்,  அதன் பிறகும்,  இன்றும் கூட செயல்பட்டுவரும் மிகப் பழமையான மஸ்ஜிதாகக் கருதப்படுகின்றது!

இம்மஸ்ஜித் ஹிஜ்ரி 115ல் (கி.பி. 733–734) நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக, இதன் நுழைவாயிலுக்கு மேலேயுள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை "அபூ முஸ்லிம்" என்றழைக்கப்படும், உமையாக் கலீபாக்களின் தளபதி  மஸ்லமா இப்னு அப்துல் மாலிக் (Maslama Ibn Abdul Malik) கட்டியதாக உள்ளூர் வரலாற்று நூலான Darband-nama குறிப்பிடுகின்றது.

மஸ்லமா இப்னு அப்துல் மாலிக் டெர்பென்ட்டைக் கைப்பற்றி நகரை ஏழு மஹல்லாக்களாகப் பிரித்ததுடன்,  ஒவ்வொரு மஹல்லாவிலும் ஒரு பள்ளிவாசல் கட்டியதாக மேலும் அந்நூல் குறிப்பிடப்படுகின்றது. 
கி.பி. 1368ம் ஆண்டு இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, அஜர்பைஜானின் வடக்கு எல்லையில் டாகெஸ்தான் உள்ளதால்,அதன் தலைநகரான பாகு(Baku)வைச் சேர்ந்த தாஜுத்தீன் என்பவர் இம்மஸ்ஜிதைப் புனரமைத்ததாகவும், சோவியத் காலத்தில்  (1938ம் ஆண்டு முதல்) சிறைக்கூடமாகப் பயன்படுத்தப்பட்டுவந்த இம்மஸ்ஜித், ஐந்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தொழுகைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப் படுகின்றது.

தாகெஸ்தானில் இன்னும் பல பழமையான கிராமப்புறப் பள்ளிவாசல்கள் இருந்தபோதிலும், ஹிஜ்ரி 71ஐச் சேர்ந்தவை என்று எதுவும் உறுதிப்படுத்தப்பட்டனவாக இல்லை!

பள்ளிவாசல் வளாகத்தில் பள்ளிவாசல் மட்டுமின்றி, ஒரு மார்க்கக் கல்விக்கூடம் மற்றும் மார்க்க அறிஞர்களுக்கான தங்குமிட வசதிகளும் உள்ளன.

பள்ளிவாசல் வளாகத்தை சுற்றியுள்ள பழமையான மரங்கள் இப்பகுதிக்கு மேலும் அழகூட்டுகின்றன.

இவை 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான பிளாட்டனஸ் மரங்களாகும். இவை பாக்தாத்தின் புகழ்பெற்ற பாரசீக ஸூஃபித்து ஞானி ஜுனைத் என்பவரால் நடப்பட்டன.
இம்மரங்கள் மசூதியைத் தீங்கு விளைவிக்கும் இயற்கை சக்திகளிலிருந்து பாதுகாப்பதாக நம்பப்படுகின்றது. மரங்களின் வலிமையான வேர் அமைப்பு மண்ணை உறுதியாகப் பற்றிக்கொண்டு, பூகம்பங்களின் விளைவுகளிலிருந்து மசூதியைப் பாதுகாக்கின்றது.

2012ம் ஆண்டில் இம்மரங்கள் அகில ரஷ்ய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை நினைவுச்சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டு, ரஷ்யக் கூட்டாட்சிப் பேரவையில், நாட்டின் இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் மன்றத்தின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இதன் பழமை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் காரணமாக, இது யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் இதன் முக்கியத்துவத்தை உலகிற்குப் பறைசாற்றுகின்றது.

ஐ.ஏ.ஸத்தார்.

 


Post a Comment

0 Comments