Ticker

6/recent/ticker-posts

தமிழைச் சிரிக்க வைத்த குரல் இன்று மௌனமானது.

பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு ஓர் இரங்கல் கவிதை.

ஒரு மேடை இருந்தது.
அதில் கேள்விகள் பிறந்தது.
கருத்துகள் மோதியது.
சிரிப்புகள் மலர்ந்தன.

இறுதியில்
ஒரு குரல் எழுந்தது
அதுதான் தீர்ப்புக்குரல்.

அந்த ஒரு 

சொல்லுக்காகவே
தமிழகம் காத்திருந்த காலம் உண்டு.

அது வெறும் தீர்ப்பின் குரலில்லை.
தமிழைத் தெருவுக்கும்
தமிழை இல்லத்திற்கும்
தமிழைத் தலைமுறைக்கும்
கொண்டு சென்ற குரல்.

மாநகராட்சிப் பள்ளியின்
சாதாரண வகுப்பறையில் தொடங்கிய பயணம்
தமிழ்ப் பேராசிரியர் நாற்காலியைத் தாண்டி 
லட்சக்கணக்கான தமிழர்களின் இதய 
நாற்காலியில் அமர்ந்தது.

பெரிய பெரிய இலக்கியங்களை
பெரிய வார்த்தைகளால் சொல்லவில்லை.

பாமரனும் புரிந்துகொள்ளும் தமிழில்
பண்டிதத்தையே பேச வைத்தார்.

நகைச்சுவை வந்தபோது
மக்களைச் சிரிக்க வைத்தார்

கருத்து வந்தபோது

அதே சிரிப்புக்குள்
ஒரு சிந்தனையை விதைத்தார்.

அதனால்தான்
அவருடைய பட்டிமன்றம் முடிந்த பிறகும்
அவருடைய வார்த்தைகள்
மனதுக்குள் தொடர்ந்தது.

ஒரு காலத்தில்
பண்டிகை என்றாலே
வீடுகளில் தொலைக்காட்சி முன்
குடும்பங்கள் கூடி விடும்.

அங்கே ஒரு குரல் இருந்தது
சாலமன் பாப்பையா.

இனிமேல் 
அதே பண்டிகை நாட்கள் வரும் 
ஆனால் அந்தக் குரல் இருக்காது.

ஆனால்
அவர் விதைத்த தமிழும்
அவர் வளர்த்த சிந்தனையும்
அவர் உருவாக்கிய பேச்சாளர்களும்
நம்மில் இருந்திடும்.

அதுவே
ஒரு மனிதன் இறந்தாலும்
அவனுடைய பணி இறக்காது என்பதற்கான
உயிருள்ள சாட்சி.

பத்மஸ்ரீ
என்ற விருது
அவருடைய மார்பை அலங்கரித்திருக்கலாம்.

ஆனால்
தமிழர்களின் வீடுகளில்
அவர் பெற்ற அன்புதான்
அவருடைய உண்மையான விருது.

பட்டிமன்ற மேடையில்
பலர் பேசினார்கள்..

இருந்தும் 
தமிழையே பேச வைத்தவர்
சாலமன் பாப்பையா.

இன்று
அந்த நாற்காலி வெறுமையாகலாம்.

அந்த மைக்
மௌனமாகலாம்.

ஆனாலும் 
அவர் பேசிய தமிழ்
மௌனமாகாது.

அவர் சொன்ன கருத்துகள்
காலத்தோடு மறையாது.

ஒரு தலைமுறை

அவரைக் கேட்டது.

இன்னொரு தலைமுறை
அவருடைய காணொளிகளைப் பார்க்கும்.

அடுத்த தலைமுறை
அவருடைய பெயரைப் படிக்கும்.

அப்போது
அவர்கள் கேட்பார்கள்.

இந்த மனிதர் யார்?

தமிழ் பதில் சொல்லும்.

என்னை
எளிமையாகப் பேச வைத்தவர்.

சிரித்துக்கொண்டே
சிந்திக்க வைத்தவர்.

பட்டிமன்றத்தை
மக்களின் இல்லத்திற்குக் கொண்டு சென்றவர்.

தமிழை
மக்களின் இதயத்தில்
வாழ வைத்தவர்.

சாலமன் பாப்பையா.

மனிதன் மறைகிறான்.
மகத்தான குரல்கள் மறைவதில்லை.

உடல் மண்ணுக்குச் செல்லும்.
உழைப்பு காலத்திற்குச் செல்லும்.

அவருடைய குரல் இன்று
வானத்தில் ஓய்ந்திருக்கலாம்.

தமிழ் இருக்கும் வரை

தீர்ப்பு என்ற சொல்லுக்குப் பின்னால்
ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். 
அதுசாலமன் பாப்பையாவின் குரல்.

அவருடைய மறைவுக்கு எனது 
ஆழ்ந்த இரங்கல்கள் 

ஆர். எஸ். கலா


 


Post a Comment

0 Comments