Ticker

6/recent/ticker-posts

Nepal Disaster | அண்டை நாடுகளின் உதவியை ஏன் நேபாளம் மறுத்தது? – அரசு சொன்ன காரணம் என்ன?


இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் கடந்த 26ஆம் தேதி ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் உட்பட ஆயிரம் கணக்கானோர் சிக்கினர். இந்த கோரப் பெரு வெள்ளத்தில் தற்போதுவரை 675 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும், பல ஆயிரம் கணக்கானோரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

மண், கல், பாறை, பாலங்கள், கட்டடங்கள் என வெள்ளம் வந்த பாதையில் இருந்த அனைத்தையும் நீர் வாரி சுருட்டி அடித்து வந்ததில், பலர் மண்ணுக்குள் புதைந்தும், உடல் துண்டு துண்டாக கிழிந்தும் கோர மரணமடைந்துள்ளனர். இதில் பலரின் உடல்களை அடையாளம் காண முடியாத நிலை இருந்து வருகிறது.

பல நூறு பிணங்களால் நிறைந்துள்ள நேபாள மருத்துவமனைகளில் உடல்களை பதப்படுத்தி வைக்கும் வசதிகள் இல்லாத காரணங்களால், இறந்த அடையாளம் தெரியாதவர்களின் டி.என்.ஏ. மாதிரிகளை சேகரித்துவிட்டு, அடக்கம் செய்யும் பணியை தற்போது நேபாள அரசு தொடங்கியுள்ளது.

இப்படியான சூழலில் தற்போது நேபாள அரசு, மீட்புப் பணிகளுக்கு அண்டை நாடுகளின் உதவிகளை ஏற்றுக் கொண்டாலும், வெள்ளம் ஏற்பட்ட 26ஆம் தேதி அன்று, இந்தியா, சீனா உட்பட பல்வேறு அண்டை நாடுகள் உதவ முன் வந்தபோது அதனை மறுத்தது. இதற்கு என்ன காரணம்?

வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டதும், அண்டை நாடுகள் முன்வந்த போது ஏன் அதனை மறுத்தோம் என நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லோக் பகதூர் சேத்ரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு விளக்கம் அளித்தார். அவர் அளித்த விளக்கத்தில், “உதவிக்கு வருகிறோம் என அண்டை நாடுகள் சொல்வது இயல்பானதே. எங்கள் பாதுகாப்பு அமைப்புகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போதைக்கு எங்களுக்கு அத்தகைய உதவி தேவையில்லை" என்று தெரிவித்திருந்தார்.

நேபாள ராணுவம் மற்றும் காவல்துறையின் பரிந்துரையின் பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட கோர்க்கா நிலநடுக்கத்தின்போது நேபாளம் பெற்ற அனுபவமும் இதற்கொரு காரணமாக அமைந்ததாக வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 2015 நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏராளமான வெளிநாட்டு மீட்புக் குழுக்கள் வருகை தந்ததால் ஒருங்கிணைப்புச் சிக்கல்கள் ஏற்பட்டதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ராசுவா மாவட்டம் சீனாவின் திபெத் பகுதியுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்வதால், நேபாளத்தின் இந்த முடிவில் அந்த இடத்தின் அமைவிடம் ஏதேனும் பங்கு வகித்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தக் கருத்தை மையப்படுத்தும் வகையில், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான நேபாளத்தின் முன்னாள் தூதர் தினேஷ் பட்டாராய் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "அப்பகுதி அமைந்துள்ள இடத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, வெளிநாட்டு மீட்புக் குழுக்களை அனுமதிக்க வேண்டாம் என்று அவர்கள் முடிவெடுத்திருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லோக் பகதூர் சேத்ரி, உதவிகளை வேண்டாம் என நேபாளம் தெரிவித்ததற்கு சீனா ஒரு காரணமாக இருந்தது என்ற கருத்தை மறுத்துள்ளார். தங்களது சொந்த மீட்புக் குழுக்களே அந்த மீட்புப் பணியைச் சிறப்பாகச் சமாளிக்க முடியும் என்ற மதிப்பீட்டின் அடிப்படையிலேயே நேபாளம் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இருந்த போதிலும் தற்போது சுரங்கப்பாதை மீட்புப் பணிகள், டிஎன்ஏ (DNA) பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வுகள் ஆகியவற்றிற்காக குறிப்பிடத்தக்க அளவில் வெளிநாட்டு நிபுணத்துவத்தைப் பெற நேபாள அரசு முடிவு செய்து உதவிகளை பெற்று வருகிறது.

news18


 


Post a Comment

0 Comments